சீமான் வீட்டில் சிவகார்த்திகேயன் - இரண்டு மணிநேர சந்திப்பின் பின்னணி என்ன?!

நடிகர் சிவகார்த்திகேயன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைச் சந்தித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

புகைப்படத்தில் சீமானின் மகன் மாவீரனை சிவகார்த்திகேயன் வாரி அணைத்துப் பூரிப்போடு தூக்கி வைத்திருப்பதும் சீமான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் என நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தோம்...

சிவகார்த்திகேயன்

“இது அன்பின் நிமித்தமாக நடந்த சந்திப்பு. சிவகார்த்திகேயனுக்கு சீமான் அண்ணன் மேல பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கு. அதனாலதான், ’மிஸ்டர் லோக்கல்’ படத்துல சிறைக்குப் போற காட்சியில 'இங்கதான் சீமான் அண்ணன், மன்சூர் அலிகான் அண்ணன்லாம் இருக்காங்க. அவங்கள்லாம் நமக்கு சீனியர்'ன்னு சிவகார்த்திகேயன் சொல்லுவாரு. அந்தளவுக்கு அண்ணனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அண்ணன் - தம்பி உறவு.

சமீபத்துல நடந்த நாடாளுமன்ற முடிவுகளில் தனித்துப் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி 8.2 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ச்சி அடைந்ததற்கு ரஜினி சார், சசிகலா மேடம், திருமாவளவன் அண்ணன், சேரன் சார், அமீர் சார், சிவகார்த்திகேயன்னு நிறைய பேர் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவிச்சிருந்தாங்க. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சீமான் அண்ணன், கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிட்ட நன்றி அறிக்கையில்கூட, ’ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயனுக்கு நன்றி’ என்று தெரிவித்திருந்தார். போனிலும் சிவகார்த்திகேயனுக்குத் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார்.

சீமானுடன் சிவகார்த்திகேயன்

இந்தச் சூழலில்தான் சிவகார்த்திகேயனை மதிய விருந்துக்கு அழைத்திருந்தார் அண்ணன் சீமான். முழுக்க முழுக்க அன்பின் காரணமாக மட்டுமே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருக்குப் பிடித்த உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டன. அண்ணன் சீமானின் மகன் மாவீரன் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனைத் தூக்கி மடியில உட்கார வெச்சு கொஞ்சிக்கிட்டிருந்தாரு. அவனோட படிப்பு பற்றியும் பேசிக்கிட்டிருந்தாரு. மாவீரனும் நல்லா சிரிச்சு விளையாடி சிவகார்த்திகேயன்கூட நல்லா ஒட்டிக்கிட்டான். அண்ணி கயல்விழியின் அக்கா மகனிடமும் ஜாலியா பேசிக்கிட்டிருந்தாரு. அண்ணனுடன் இரண்டு மணிநேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. இதற்கு அரசியல் சாயமெல்லாம் பூசவேண்டாம்” என்று புன்னகைக்கிறார்கள்.



from விகடன்

Comments