Abdul Hameed: "இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம்!"- பி.எச்.அப்துல் ஹமீது உருக்கம்

`கு’ குறில். இந்த எழுத்திலே மணி ஒலித்திருக்கிறது. ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் உங்களது அபிமான பாடலை நீங்கள் பாடலாம்...’ - தனியார் சேட்டிலைட் சேனல் தமிழில் அறிமுகமான புதிதில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் இந்த அறிவிப்புச் சத்தம் கேட்காத வீடுகளே இருக்காது. `உங்களது அன்பு அறிவிப்பாளர்’ என்கிற கணீர் குரலோடு ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பார் பி.எச்.அப்துல் ஹமீது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என ஒரு ரவுண்ட் வந்தவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு இவரை அழைத்தன. ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறைப் பிரபலங்களையும் பல்வேறு சேனல்களுக்காக இவரே பேட்டிகளும் கண்டுள்ளார். 

பி.எச்.அப்துல் ஹமீது

சமீப காலமாக அப்துல் ஹமீது பெரிதாக நிகழ்ச்சிகளில் ஏதும் கலந்துகொள்ளாமல் கொஞ்ச நாள்கள் ஓய்விலிருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அப்துல் ஹமீது, உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்ற செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவே வதந்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கிவிட்டன. இந்த வதந்தி தீயாய் பரவ அப்துல் ஹமீது ரசிகர்கள், நண்பர்கள் பலரும் வருத்தத்துடன் இது குறித்து விசாரிக்க அப்துல் ஹமீதிற்கு போன் செய்துள்ளனர். போனை எடுத்துப் பேசிய அப்துல் ஹமீது, தன்னைப் பற்றிப் பரவிய வதந்தி அறிந்து மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார்.

இந்த வதந்திகள் குறித்து கண்ணீர் மல்கக் காணொலி ஒன்றைப் பதிவிட்டிருக்கும் அப்துல் ஹமீது, "நம் எல்லோரையும் படைத்த ஏக இறைவன் திருவருள் உங்கள் அனைவர் மீதும் பொழிவதாக... மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக் கூடும். இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்புள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலைக் கேட்டுக் கதறி அழுததை என்னால் தாங்க முடியவில்லை. 'இத்தனை ஆயிரம் அன்புள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை' என்று நினைத்துக் கொண்டேன்" என்று மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுத படி பேசினார்.

பி.எச்.அப்துல் ஹமீது

தொடர்ந்து பேசியவர், "நேற்று இலங்கை பத்திரிகைகளில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது, 'மரணம் மனிதனுக்குத் தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து, அவனைப் பற்றிய நல்ல பக்கங்களை, நல்ல நினைவுகளை மட்டும் இறைமீட்டி பேசி மகிழ்வது' என்று எழுதியிருந்தேன்.

இப்போது அப்படியொரு அனுபவம்தான் எனக்குக் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை நேசித்தாலும், என்னுடைய துறை சார் பொறாமை காரணமாக அல்லது மத மாச்சரியங்கள் கொண்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர், இதுவரை காலமும் என்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பியிருக்கலாம். ஆனால், என்னுடைய இறப்புச் செய்தியைக் கேட்டது என்னைப் பற்றிய நல்ல நினைவுகளை இறைமீட்டி இருப்பார்கள். இது நான் வாழும் காலம்வரை தொடர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம். ஆம். முதல் அனுபவம் 1983ம் ஆண்டு. இனக்கலவரத்தின்போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்துவிட்டார்கள் என்ற வதந்தி இங்கு இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும், தமிழ் பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்து மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்ததை என்னுடைய 'வானிலையில் வழிப்போக்கன்' என்னும் நூலில் பதிவு செய்திருந்தேன். இது முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப் தளத்தில் ஒருவர் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடையப் புகைப்படத்தைப் போட்டு, 'பிரபல டிவி தொகுப்பாளர் மரணம். கதறி அழுதது குடும்பம்' என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை. இப்போது சமூகவலைதளங்களில் நான் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவியிருக்கிறது. இது மூன்றாவது முறை. மூன்று முறை நான் உயிர்த்தெழுதிருக்கிறேனா என்று நகைச்சுவையாகத் தோன்றுகிறது.

நாம் இறந்த பிறகு நம் மீது உண்மையான அன்பு வைத்திருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்க்க நாம் இருக்கமாட்டோம். ஆனால், வாழும் காலத்திலேயே அதைக் கணிக்க, அறிந்துகொள்ள இறைவன் எனக்குக் கொடுத்த சந்தர்ப்பம்தான் இது. இந்தச் செய்தியை முதல் முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபம் விட்டிருக்கலாம். அந்த சாபங்களிலிருந்து அந்த மனிதரைக் காக்கும் படி அதே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன். ஏதோவொரு நன்மையைச் செய்திருக்கிறார் அவர். ஆகவே, அன்புள்ளங்களே எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும், வணக்கமும்!" என்று உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.



from விகடன்

Comments