`A Quite Place' பிரான்சைஸில் ஏற்கெனவே இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த இரண்டு திரைப்படங்களின் பிரிக்குவலாக (முன்கதையாக) வெளியாகியிருக்கிறது `A Quiet Place - Day One' திரைப்படம்.
அதாவது இதற்கு முந்தைய இரண்டு பாகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஆபத்தான விலங்குகள் எப்படி இந்த உலகிற்குள் நுழைந்தன என்பதை விவரிப்பதுதான் இந்தப் படத்தின் கதை. நியூயார்க் நகரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமீரா (லுபிடோ நுயாங்) தனது செல்ல பூனையுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் தனது கேர் வொர்கர் ரூபனுடன் (அலெக்ஸ் வொல்ஃப்) நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார். அப்போது விண்கல் மாதிரியான பெரிய கற்கள் நகரத்திற்குள் வந்து விழுந்து சேதத்தை உண்டாக்குகின்றன.
அதன் பிறகு அதிலிருந்து மனிதர்களைக் கொலை செய்யக்கூடிய விநோதமான கிரியேச்சர்கள் (விலங்குகள்) அந்த நகரத்தில் உலா வருகின்றன. ஒருவர் சத்தமாகப் பேசினாலோ அல்லது ஏதேனும் ஒலி எழுப்பினாலோ உடனடியாக அந்த கிரியேச்சர் அந்த ஒலியைப் பின்தொடர்ந்து வந்து மனிதர்களைக் கொலை செய்துவிடும். இந்த கிரியேச்சர்களால் என்னென்ன கொடிய ஆபத்துகளை மக்கள் சந்திக்கிறார்கள், சமீரா இதிலிருந்து தப்பித்தாரா என்பதுதான் இந்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தின் கதை.
பயத்தையும் பதற்றத்தையும் கச்சிதமாகத் தனது முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் லுபிடோ நுயாங். பார்வையாளர்களே சமீரா எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் எனக் கைகூப்பி முணுமுணுக்கும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி வாவ் சொல்ல வைக்கிறார். தன்னைத் தாண்டி சமீராவையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பை அற்புதமாகி வெளிப்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் வொல்ப். இதைத் தாண்டி சொற்ப மணித்துளிகள் மட்டும் திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் அனைவருமே சிறந்ததொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குநர் நினைத்த விஷயங்களுக்குத் தங்களின் நடிப்பின் மூலம் அனைத்து கதாபாத்திரங்களும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
விரல்விட்டு எண்ணும் அளவிற்குத் திரைப்படத்தில் சொற்ப வசனங்களே இருக்கின்றன. பொதுவாக வசனங்களின்றி அமைதியாகப் பயணிக்கும் திரைப்படங்கள் பொறுமையைச் சோதித்துவிடும் என்ற வழக்கமான விமர்சனம் ஒன்று இருக்கிறது. அந்த விமர்சனத்தையெல்லாம் தகர்த்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறது 'A Quiet Place' திரைப்படத் தொடர். தரமான காட்சியமைப்புகள் திசை திரும்ப வைக்காமல் 'இந்த நகரத்தில் இருக்கக்கூடியவர்கள் எப்படித் தப்பிக்கப் போகிறார்கள்?' என்று உன்னிப்பாகக் கவனிக்க வைக்கிறது. கிரியேச்சர்களுக்குப் பயந்து நடுங்கும் குழந்தைகளின் காட்சியும், பயத்துடன் சுற்றித் திரியும் சமீராவுக்கு உற்ற துணையாக வலம் வரும் பூனையின் காட்சிகளும் நெஞ்சை உலுக்குகின்றன.
கிரியேச்சர்களால் அழிக்கப்படும் நகரத்தையும் அதனிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்கிற மக்களின் பரிதவிப்பையும் அட்டகாசமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பேட் ஸ்கோலா. எமோஷன் காட்சிகளில், உவமையாகக் காட்டப்படும் சில காட்சிகள் போன்றவற்றில் மட்டும் பின்னணி இசையைக் கோர்த்திருக்கலாம். அப்படிச் சரியான இடங்களில் இன்னும் மெருகேற்றிய இசையை அமைத்திருந்தால் இன்னும் ஆழமான தாக்கத்தைப் படம் ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் பார்வையாளர்கள் நிரம்பியிருக்கிற திரையரங்கத்தையே மயான அமைதியாக்கி வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்க முயன்ற இயக்குநர் மைக்கேல் சாரனோஸ்கி பின்னணி இசை என்ற விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது குறிப்பிடத்தகுந்த ஏமாற்றமே!
வசனங்களற்ற திரைப்படத்தை கூர்மையாக வடிவமைத்ததோடு ஸ்மார்ட்டான வேலைகளையும் செய்து கட்களை அமைத்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் க்ரிகோரி பிலாட்கின் மற்றும் ஆண்ட்ரூ மோன்ட்செயின்.
இந்தப் படத்தொடரின் முந்தைய பாகங்களில் விநோத கிரியேச்சர்களின் உருவம் பெரும்பாலும் காட்டப்பட்டிருக்காது. அதுவே உளவியல் ரீதியாகப் பார்வையாளர்களுக்கு ஒருவித அச்சமூட்டும் உணர்வைச் சிறப்பாகக் கடத்தியிருக்கும். இந்த முன்கதையில் கிரியேச்சர்களின் உருவத்தை கிராபிக்ஸில் பிரமாண்டமாக உருவாக்கியதோடு அதனால் உண்டாக்கும் பாதிப்புகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதனாலேயே இது மற்றுமொரு பேரழிவு மற்றும் கிரியேச்சர் சம்பந்தப்பட்ட சம்பிரதாய ஹாலிவுட் படமாகிவிடுகிறது. காட்சிகளும், அடுத்தடுத்த நிகழ்வுகளும் யூகிக்கும்படி இருப்பதும் மற்றொரு மைனஸ்!
முந்தைய பாகங்களோடு ஒப்பிடாமல் தனிப்படமாகப் பார்த்தால் ஒரு தரமான அனுபவத்தைக் கொடுக்கலாம் இந்த `A Quite Place - Day One'.
from விகடன்
Comments