15 Years of Naadodigal: "அந்தச் சம்பளத்துல அம்மாவுக்கு நான் வாங்கின பரிசு..." - நெகிழும் பரணி

`நாடோடிகள்' படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டன. காதலர்களைச் சேர்த்து வைக்கும் நண்பர்கள், அதற்காக அவர்கள் படும் பாடு என்றாலே நினைவுக்கு வருவது `நாடோடிகள்' படம்தான். போட்டோ எடுத்து ஃப்ளக்ஸ் போர்டு வைத்தாலும் இந்தப் படத்தின் ரெஃபரன்ஸ் வந்துவிடும்.

இந்த நிலையில், சசிக்குமாரின் நண்பராக அதுவும் காது செவிடாகும் அளவுக்குக் கடத்தல் காட்சியில் அடிவாங்கி காமெடியில் கலக்கிய பரணியிடம் பேசியபோது ஃப்ளாஷ்பேக்கினார்...

“உடலுக்கு எப்படி உயிர் முக்கியமோ அப்படித்தான் எனக்கு 'நாடோடிகள்' படம். 'நாடோடிகள்' இல்லைன்னா இந்த பரணி கிடையாது. எல்லா புகழும் சமுத்திரக்கனி அண்ணனுக்குத்தான் சேரும். எனக்கு 'கல்லூரி'தான் முதல் படம். சமுத்திரக்கனி அண்ணன் ’கல்லூரி’ பார்த்துட்டு ’நாடோடிகள்’ படத்துல முக்கியமான ரோல் இருக்குன்னு கூப்பிட்டு கொடுத்தார். படம் நடிச்சிக்கிட்டிருக்கும்போதே, மொத்த ஷூட்டிங் யூனிட்டும் சீன் பை சீன் கை தட்டுவாங்க. ‘என்னண்ணே இப்படி கை தட்டுறாங்களே, கிண்டலா கை தட்டுறாங்களா?’ அப்படின்னு கேட்டேன். அதுக்கு சமுத்திரக்கனி அண்ணன், ‘உனக்கு தெரியாதுடா போடா. படம் ரிலீஸ் ஆனபிறகு தெரிஞ்சுக்குவடா’ன்னு சொன்னார்.

நாடோடிகள்

படம் ரிலீஸான பிறகுதான் என்னோட ரோல் எவ்ளோ முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். சமுத்திரக்கனி அண்ணன் சொன்னது எவ்ளோ பெரிய உண்மைன்னு பார்வையாளர்களோட பாராட்டுகள் உணர்த்த ஆரம்பிச்சது.

தமிழ்நாட்டு மக்கள் என்னை அவங்க வீட்டு பிள்ளையாகவே ஏத்துக்கிட்டாங்க. அதுக்குக் காரணம், சமுத்திரக்கனி அண்ணன் கொடுத்த முக்கியத்துவம்தான். இன்னும் சொல்லப்போனா, என்னோட கேரக்டர்ல அவரேதான் நடிக்கவேண்டியிருந்தது.

ஆனா, அவரோட பேண்ட் சட்டையை எனக்கு போட்டுவிட்டு அழுகு பார்த்ததோடு அந்த கேரக்டரையே எனக்குக் கொடுத்துட்டார். அவர் கேரக்டரையே எனக்கு வாழ்க்கையா கொடுத்துட்டார்.

ஹீரோ பேசுற வசனங்கள் எல்லாமே எனக்கு வந்துச்சு. ’சசிகுமார் சார் பேச வேண்டிய டயலாக்கையெல்லாம் எனக்கு கொடுக்கிறீங்களே?’ன்னு கேட்டேன். நீயும் இந்தப்படத்துல ஹீரோதான்டா. 90-வது நாள் ஷூட்டிங்கில் வந்து சந்தேகமா கேட்குற, அப்படின்னு ஷாக் கொடுத்தாரு சமுத்திரக்கனி அண்ணன். அவர்க்கிட்ட பிடிச்ச விஷயமே அவர் எல்லாரையுமே லவ் பண்றதுதான். பரணி மட்டுமில்ல. ஷூட்டிங்குல இருக்கிற சாதாரண கடைநிலை ஊழியர்க்கிட்ட கூட ரொம்ப அன்பா சமமா பழகுவாரு. அவரோட எதிரியா இருந்தாகூட பத்துநாளில் இவர் குணத்துக்குத் திருந்தி வந்துடுவாங்க. அந்த மாதிரியான, நல்ல குணம் படைச்சவர்.

சமுத்திரக்கனி - சசிகுமார்

இப்போவரைக்கும் எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சதிலிருந்து வீடு கிரக பிரவேசம் பண்றவரைன்னு எல்லா நல்லதிலும் சமுத்திரக்கனி அண்ணன் இருப்பாரு. கண்ணுல ரத்தம் கட்டி, கால் உடைஞ்சு, காது கேட்காம போயி, கஷ்டப்பட்டு சேர்த்துவெச்ச காதலர்கள் அவங்க இஷ்டத்துக்குப் பிரிஞ்சு போயிடுவாங்க. இதனால கோபமாகி மீண்டும் கடத்துற சம்பவத்துக்கு காரணமே என்னோட டயலாக்தான்.

என்னோட சினிமா வாழ்க்கையில 'நாடோடிகள்' படம்தான் ஏறுமுகமா அமைஞ்சது. எல்லாருமே ரொம்ப சின்சியரா ஒர்க் பண்ணினோம். இந்த நேரத்துல சசிகுமார் சாருக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா, அவர் பேச வேண்டிய டயலாக் எல்லாம் எனக்கு வரும்போது அவ்ளோ என்கரேஜ் பண்ணுவார்.

ரொம்ப ஃப்ரீடம் கொடுப்பார். மற்ற நடிகர்களா இருந்தா அப்படிப் பேச விடமாட்டாங்க. அவங்க கூட நடிக்கிறவங்க எல்லாரையும் உயர்த்தி பிடிப்பார். உயரணும்னு நினைப்பார். சூரி சாரையே அவர் எந்தளவுக்கு உயர்த்திப் பிடிச்சிருக்கார்ன்னு ’கருடன்’ படத்திலேயே தெரிஞ்சுக்கலாம். ஈகோ எல்லாம் பார்க்காத மற்றவர்களை உயர்த்திப் பார்க்கும் நல்ல மனிதர். இப்போகூட அமீர் அண்ணா பொண்ணு மேரேஜ்ல எல்லாரும் மீட் பண்ணிக்கிட்டோம். நண்பன் விஜய் வசந்த் எம்.பியாகிட்டார். இப்போகூட கன்னியாக்குமரி போனா அவர்தான் பார்த்துக்குவாரு. நல்ல நண்பர்.

‘நாடோடிகள் 2’ படத்திலும் எல்லோரும் நடிச்சோம். அதுவும் சக்சஸ்தான். ஆனா, கொரோனா காலகட்டம்ங்குறதால மக்கள் வெளியில் வராம, கிராண்ட் சக்சஸ் கொடுக்க முடியல. நார்மல் டைம்ல வெளியாகியிருந்தா ’நாடோடிகள்’ மாதிரியே பெரிய சக்சஸ் ஆகியிருக்கும். ’நாடோடிகள்’ படத்தை, இப்போ ரீ-ரிலீஸ் பண்ணா நல்லாருக்கும். ” என்பவர், ‘நாடோடிகள்’ படச் சம்பளத்தில் தனது அம்மாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸையும் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் பரணி
“'நாடோடிகள்' படத்துல வாங்கின அட்வான்ஸ் பணத்துல அம்மாவுக்குப் பெரிய டிவி வாங்கி கொடுத்தேன். ஏற்கெனவே டிவி இருந்தாலும் நியூ மாடல் டிவி வாங்கிக் கொடுத்தேன். படம் முடிஞ்சபிறகு முழு தொகையும் வந்துச்சு. அதுல முதல் முறையா கார் வாங்கினேன். டாடா இண்டிகா கார். என் வாழ்க்கையில அதுதான் ஃபர்ஸ்ட் கார். எங்கம்மாவுக்கு ஒரே சந்தோஷம்.

'நாடோடிகள்' படம் என் வாழ்க்கையையே உயர்த்திடுச்சு. இப்போ என் பையன் அந்தப் படத்தை அடிக்கடி பார்க்கிறான். அவனுக்கு பிடிச்ச படம் அது. அதைப் பார்த்துட்டு அடிக்கடி 'சம்போ சிவ சம்போ' பாட்டைப் பாடுறான். படம் ஏ, பி, சின்னு எல்லா தரப்பு ஆடியன்ஸையும் போயி சேர்ந்துச்சு. நான் அந்தப் படத்துல காது மேல வாங்கின அடி உண்மையானது. எதிர்பாராம நடந்ததுதான். ஒளிப்பதிவாளர் கதிர் சார் மேலேயிருந்து அந்த ஷாட்டை எடுத்தாரு. அடிக்குற காட்சி ஒரே ஷாட்டுல எடுத்தாங்க. நான் அடிவாங்கினதை மேலே இருந்து பார்த்துட்டு 'சோலி முடிஞ்சுடுச்சு'ன்னு கத்திக்கிட்டே ஓடிவந்தாரு. எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியல.

நாடோடிகள்

சமுத்திரக்கனி அண்ணன் என் முகத்தைப் பிடிச்சுக்கிட்டு 'எழுந்திரிடா எழுந்திரிடா'ன்னு கத்துறாரு. கொஞ்சநேரம் கழிச்சுத்தான் கண் விழிச்சு என்ன நடந்ததுன்னே தெரியும். இப்பவும் அந்த காதுவலி இருந்துக்கிட்டேதான் இருக்கு. வெயிலில் நின்னா என் கண்ணெல்லாம் ரெட்டிஷ்ஷா மாறிடும். பின்னாடி மண்டை இப்பவும் வலிக்கும். எங்க போனாலும் அந்த காது வலி சீனைத்தான் கேட்பாங்க. சில பேரு கொழுக்கட்டை செஞ்சிருக்கேன் எடுத்துட்டு வரவான்னு கேட்பாங்க. அடி வாங்கினாலும் அந்த கதாபாத்திரம் இந்தளவுக்கு இப்பவும் பேசப்படுறதும் எனக்கு வாழ்க்கையை கொடுத்ததும் சந்தோஷம்தானே?” என்கிறார் புன்னகையுடன்.



from விகடன்

Comments