தமிழகத்தில் தான் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் முதலமைச்சர், நெடுநாள் குற்றவாளியை வடமாநிலத்தில் தேடிக்கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரி என இரண்டு டிராக்கில் அரசியல் த்ரில்லராக நகர்கிறது இந்தத் 'தலைமைச் செயலகம்' வெப் சீரிஸ்.
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு கிராமப் பகுதியில் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். சித்திரவதை உச்சத்தை அடியும் போது சூழ்ந்திருந்த அனைவரையும் வெட்டி வீசியெறிகிறார். பின்னர் மாயமான அவரை 15 வருடங்களாக உள்ளூர் காவல்துறை எங்குத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத சூழலில், வழக்கு சி.பி.சி.ஐ.டி புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்படுகிறது. இதன் புலன் விசாரணை ஒரு கதை.
அதேநேரத்தில் அ.இ.எ.மு.க கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான வே.அருணாசலம் (கிஷோர்) மீது தொடரப்பட்ட ஓர் ஊழல் வழக்குத் தீர்ப்பு நாளை நெருங்குகிறது. அவருக்குப் பக்கத் துணையாக அரசியல் ஆலோசகராக இருந்து உதவுகிறார் பத்திரிகையாளர் கொற்றவை (ஸ்ரீயா ரெட்டி). இது கட்சியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களான மகள் அமுதவல்லி (ரம்யா நம்பீசன்), மருமகன் ஹரி (நிரூப் நந்தகுமார்) ஆகியோருக்கு பிடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இருவருக்குமே அடுத்து கட்சியில் தலைவர் ஆகவேண்டும், முதல்வராக வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது. இப்படியான அரசியல் ராஜதந்திர சதுரங்க விளையாட்டில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பது மற்றொரு கதை.
இந்த இரண்டு கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை 8 எபிசோடுகளாக ஓர் அரசியல் டிராமா த்ரில்லராகத் தந்திருக்கிறது ‘ஜீ5’ தளத்தில் வெளியாகியிருக்கும் `தலைமைச் செயலகம்.'
மக்கள், கட்சி, குடும்பம், அடுத்து வரப் போகிற பல வருட ஊழல் வழக்கின் தீர்ப்பு எனப் பலவற்றைச் சமாளிக்க வேண்டிய சூழலில் முதல்வர் அருணாச்சலமாகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் கிஷோர். குறிப்பாகக் காதலுக்கும் நட்புக்கும் இடையிலிருக்கும் உறவாக ஸ்ரீயா ரெட்டியோடு அவருக்கு இருக்கும் பந்தத்தை தனது தேர்ந்த நடிப்பின் மூலம் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார். அரசியல் ராஜதந்திரியாக ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பினை வழங்குபவராகவும், தன்னை வெறுக்கும் மகளின் மீது அன்பு செலுத்தும் இடத்தில் க்ளீஷேக்கள் இல்லாத தாயாகவும் மாறுபட்ட நடிப்பினை வழங்கி கவர்கிறார் ஸ்ரீயா ரெட்டி. சில ஓகே ரக காட்சிகளும் இவர்கள் இருவரின் நடிப்பினால் ரசிக்கும் படியாக மாறிவிடுகின்றன.
வடமாநில சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் விசாரணையில் இருக்கும் மிடுக்கு தமிழகக் காவல்துறை அதிகாரியாக வரும் பரத்திடம் மிஸ்ஸிங்! ஒரு சில இடங்களில் பரத்தின் நடிப்பு கதாபாத்திரத்தோடு ஒட்டாமல் பல மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. மூத்த அரசியல்வாதியும் முதல்வரின் நண்பராகவும் வரும் சந்தானபாரதியும், போராளி இயக்க தலைவியாக வரும் கனி குஸ்ருதியும் கவனிக்க வைக்கிறார்கள். ரம்யா நம்பீசன், நிரூப் நந்தகுமார் நடிப்பு சுமார் ரகம் என்றால், ஒய்.ஜி.மகேந்திரன், ஷாஜி ஷென் நடிப்பில் படு செயற்கைத்தனம். ஆனாலும் நிறைய பாத்திரங்கள் சமகால அரசியலோடு தொடர்புடைய நிஜமான மனிதர்களை ஆங்காங்கே நினைவூட்டுகின்றன.
பொறுமை தேவைப்படுகிற அரசியல் டிராமாவையும், விறுவிறுவென நகர வேண்டிய த்ரில்லர் ஜானரையும் இணைத்துக் கையாள நினைத்த இயக்குநர் வசந்தபாலனின் முயற்சிக்குப் பாராட்டுகள். அந்த முயற்சியில் ஓரளவுக்கு வெற்றியும் அடைந்திருக்கிறார். முதல் 2 எபிசோடுகளில் கதாபாத்திர அறிமுகத்தில் பூர்ஷ்வா, பாரதிதாசன் கவிதைகள் எனச் சில பொருந்திக் கொள்ள முடியாத வசனங்கள் இருந்தாலும் அடுத்தடுத்த எபிசோடுகள் நம்மை ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், தமிழகம் எனப் பயணிக்க வைத்து ஒரு பரபர த்ரில்லராக கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது. பிரதான கதையில் இருக்கும் சுவாரஸ்யம், மாயா தனது அம்மா கொற்றவையை வெறுப்பது, பெரும் முதலாளியிடம் முதல்வரின் மருமகன் லஞ்சம் பெற்றுச் சிக்கலில் மாட்டிக்கொள்வது எனப் பின்னப்பட்ட கிளைக் கதைகளில் மிஸ்ஸிங்.
சுரண்டும் நில உடைமையாளர்களை அழித்தொழிப்பு செய்யும் நக்சல் அரசியலைச் சரியாகச் சித்திரித்து இருந்தாலும், நிகழ்காலத்தில் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை இன்னும் முதிர்ச்சியாகக் கையாண்டிருக்கலாம். பொதுமக்கள் இருக்குமிடத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துவது, மதில் சுவர் ஏறிக் குதித்து ஓடும் குற்றவாளிகளை காவல்துறை பிடிக்க முடியாமல் விடுவது, அலைப்பேசி டவர், சிசிடிவியை பல காட்சிகளில் பயன்படுத்தாமலே இருப்பது என எக்கசக்க லாஜிக் சறுக்கல்கள் இதன் நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது.
ஒரே கோர்வையான காட்சியில்கூட பரத் ஒரு கட்டில் தாடியுடனும், அடுத்த கட்டில் தாடியில்லாமல் இருக்கும் அளவுக்குத் தொடர்ச்சி ஜம்ப் அடிக்கிறது.
பல இடங்களில் காட்சியைத் தூக்கி நிறுத்தும் வேலையை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை. பல மாநிலங்களுக்கு மாறி மாறிச் செல்லும் ரவிசங்கரின் கேமராவின் ஒளியுணர்வு சிறப்பான டோனைத் தொடருக்கு செட் செய்கிறது. படத்தொகுப்பாளர் 6வது மற்றும் 7வது எபிசோடுகளில் டல்லடிக்கும் காட்சிகளை இன்னும் 2X ஸ்பீடில் கத்திரி போட்டிருக்கலாம்.
மொத்தத்தில் முதன்மை பாத்திரங்களின் தேர்ந்த நடிப்பு, நேர்த்தியான பின்னணி இசை மற்றும் மேக்கிங்கால் சலிப்படைய வைக்காமல் செல்லும் இந்த இணையத் தொடர், திரைக்கதையின் நம்பத்தன்மையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அன்அப்போஸ்ட்டாகவே அரியணை ஏறியிருக்கும். இப்போது பெரும்பான்மையை மட்டும் பெற்றிருக்கிறது.
from விகடன்
Comments