மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டவர் நடிகை அசின்.
தமிழில் சூர்யா, விஜய்,கமல், என முன்னணி நடிகர்களுடன் கஜினி, போக்கிரி, தசாவதாரம் என கோலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகப் பணியாற்றிய ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். 2017ம் ஆண்டு இவர்களுக்கு ஆரின் என்ற பெண் குழந்தைப் பிறந்தது. குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் முழுக் கவனம் செலுத்தும் அசின் திருமணத்திற்குப் பிறகு பெரிதாகப் திரைப்படங்களில் எதுவும் நடிப்பதில்லை.
பாலிவுட்டில் 'Housefull 2', 'Khiladi 786' திரைப்படங்களில் ஒன்றாக நடித்தது மூலம் அக்ஷய் குமார் - அசின் இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். அக்ஷய் குமார், அசின் குடும்ப நிகழ்ச்சிகளில் முதல் ஆளாகக் கலந்து கொள்வது, அசினின் கணவர் ராகுல் சர்மா நெருங்கிய நண்பர்களாகப் பழகுவது என அசின் குடும்பத்தின் நெருங்கிய உறவினராகவே மாறியவர்.
இந்நிலையில் சமீத்தில் அக்ஷய் குமார் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் அசினின் கணவர் ராகுல் சர்மா, "அக்ஷய் குமார் சார் எங்கள் குடும்பத்தின் நெருக்கமான நண்பர். பல ஆண்டுகளாக நாங்கள் பழகி வருகிறோம். அசினும் அக்ஷய் குமாரும் மிக நெருங்கிய நண்பர்கள். எங்கள் குழந்தை மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
அசினுக்கு குழந்தை பிறந்தபோது நான் அவருக்கு ஃபோன் பண்ணி சொன்னேன். உடனே முதல் ஆளாக நேரில் வந்து எங்கள் குழந்தையைப் பார்த்தார். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை என்றும் எங்களால் மறக்க முடியாது. எங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர்." என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
from விகடன்
Comments