வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கொட்டுக்காளி' படங்களைத் தொடர்ந்து 'கருடன்' படத்திலும் கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சூரி.
`கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடித்துள்ள 'கருடன்' திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வெற்றிமாறன், சசிகுமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்விழாவில் சூரி பற்றியும் அவர் நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன், "இந்தப் படத்துல எனக்கு நெருக்கமானவங்க பலர் இருக்காங்க. துரை செந்தில்குமார் என்னுடைய 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை' படத்தோட இயக்குநர். அவர் எப்பவும் சிரிச்சிட்டேதான் இருப்பாரு. எப்போவும் எல்லோரையும் சந்தோசமா வச்சுருப்பாரு. இந்தப் படம் தயாரிப்பளாருக்கு நல்ல லாபத்தைத் தரும். நான் திருச்சி பக்கத்துல இருந்து வந்ததுனால என்னைய விட வயசு அதிகமானவங்களை அண்ணன்னுதான் கூப்பிடுவேன். சூரி அண்ணனை கதையின் நாயகனாக நடிக்கலாம்னு நான்தான் கதை சொன்னேன். 'சீமராஜா' படம் நடக்கும்போது இப்படி நடிங்கன்னு சொன்னேன்.
அப்போ அவர் வேண்டாம் தம்பினு சொல்லி ஒத்துக்கல. சூரி அண்ணனோட திறமை பத்தி எனக்கு அதிகமாகத் தெரியும். காமெடி பண்றவங்களால சீரியஸான கதாபாத்திரங்கள் பண்ண முடியும். அவங்களைக் குறைச்சு மதிப்பிடாதீங்க. 'கொட்டுக்காளி' படத்துல அடுத்த கட்டம் போவீங்கன்னு நினைக்கிறேன். வேற மாதிரியான சூரி அண்ணனைப் பார்ப்பீங்க. இப்போ இன்ஸ்டாகிராம்ல ஹீரோயின் தேடிட்டு இருக்காரு.
'கொட்டுக்காளி' படத்தை வெற்றி மாறன் சார்கிட்ட காட்டுறதுக்கு வெயிட் பண்றோம். இந்த படம் பண்ணும்போதே இந்தத் திரைப்படம் சூரிக்கு ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும்னு வினோத்கிட்ட சொல்லியிருக்காரு. சமுத்திரகனி அண்ணன் எங்களை எப்போவும் தட்டிக் கொடுத்திருக்காரு. வடிவுக்கரசி அம்மாகூட படம் பண்ணனும்னு ஆசை. சின்னதாக நடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். உங்க திறமைக்கான கதாபாத்திரமாகக் கண்டிப்பாக இருக்கும்"
from விகடன்
Comments