மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது சூப்பர் ஸ்டார் வழங்கியதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருதை, அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா கடந்த 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷண் விருது கொடுத்து கௌரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் இந்திய நாட்டின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றைப் பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரை வீரன் நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அவர் நாமம் வாழ்க” என்று வாழ்த்திப் பேசியிருக்கிறார்
from விகடன்
Comments