Samantha: “இன்றுவரை இடைவிடாத போராட்டம்தான்" - நடிகை சமந்தா ஓபன் டாக்

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

'நீ தானே என் பொன்வசந்தம்', ‘நான் ஈ’, ‘கத்தி’, ‘தெறி', ‘மெர்சல்', ‘24’, ‘ஜானு', ‘காத்துவாக்குல ரெண்டு காதல்', ‘யசோதா’, ‘சகுந்தலம்', ‘குஷி' என தமிழ், தெலுங்கு படங்களைத் தாண்டி, தற்போது இந்தி வரை சென்று தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பல்லாவரம் டு பாலிவுட் வரையிலான அவரது திரைத்துறைப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்ததில்லை. 22 வயதிலிருந்தே கடுமையான உழைப்பு, திறமை, பலப் போராட்டங்களை எதிர்கொண்டு இன்று திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சமந்தா

சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசி வரும் சமந்தா, தனது திரைத்துறைப் பயணம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், “என்னுடைய குழந்தைப் பருவத்தில் நான் சொகுசாக இருந்ததில்லை, நிறைய கஷ்டங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். அதனால், எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துவிட வேண்டும் என்பதில்தான் என் முழு கவனமும் இருந்தது. என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன், கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வேன். என்னுடைய 22-23 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். அந்த சமயத்தில் இந்தத் துறை பற்றியெல்லாம் பெரிதாக ஏதும் தெரியாது. கடுமையாக உழைக்க வேண்டும், எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருந்தது. 

சமந்தா

திரைத்துறையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்ள இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதைச் செய்யவில்லை என்றால் மீண்டும் பழைய நிலைமைக்குச் சென்றுவிடுவோம் என்ற பயம் இருந்தது. இந்தத் திரைத்துறையில் கடுமையாக உழைத்தால் தான் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும், போராட்டமும், உழைப்பும் மட்டுமே என்றும் நிலையானது" என்று தனது திரைத்துறைப் பயணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகை சமந்தா.



from விகடன்

Comments