தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய மொழி சினிமாக்களின் பல படங்கள் வெற்றியடைய 'அம்மா சென்டிமென்ட்' ஒரு பிரதான காரணமாக இருக்கிறது என்பதை நம்மில் பலர் மறுக்க மாட்டோம். 'எம்.ஜி.ஆர்' படங்கள் தொடங்கி 'கே.ஜி.எஃப்' படம் வரைக்கும் இது சாத்தியமாகி இருக்கிறது. 'எப்படி பல ஆண்டுகளாக ஒரே சென்டிமென்டில் படங்கள் எடுத்து அதை வெற்றியடையவும் வைக்க முடிகிறது' என யோசித்து பார்த்தால், அதற்கு அம்மாக்களாக நடிக்கும் நடிகைகளின் நடிப்பும் முக்கிய இடம் பெறுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு அம்மா கதாபாத்திரம் எழுதப்படுவதும் மாறிவருகிறது; அதில் நடிப்பவர்களும் மாறி வருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அம்மா கதாபாத்திரத்தில் கலக்கி வரும் நடிகைகள் சிலரைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
ஶ்ரீரஞ்சனி:
'அலைபாயுதே' படத்தில் அண்ணியாக தனது கரியரை ஆரம்பித்தவர், முதலில் சில ஆண்டுகள் அக்கா - அண்ணி கதாபாத்திரங்களிலேயே பயணித்துக் கொண்டிருந்தார். 'போக்கிரி' படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்து கோலிவுட்டின் 'புதுவரவு அம்மா'வாக தன்னைப் பதிவு செய்து கொண்டார். அந்தப் படத்தில் ஒரு பக்கம் வில்லனிடம் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதையும், இன்னொரு புறம் வடிவேலுவிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதையும் சுலபமாகக் கையாண்டிருப்பார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் அம்மாவாக வலம் வந்தவர், 'வாலு' படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக நடித்து பல இளைஞர்களுக்கு பிடித்தமான அம்மாவாக மாறினார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் ஶ்ரீதிவ்யாவுக்கும், 'ஆடை' படத்தில் அமலா பாலுக்கும், 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நித்யா மேனனுக்கும் அம்மாவாக நடித்து எவர்க்ரீன் அம்மாவாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
துளசி:
சிறு வயதில் இருந்தே பல படங்களில் நடித்து வரும் துளசி, 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து பல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் அம்மாவாக நடித்தவர், தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. கெளதம் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸிலும் இவரின் நடிப்பு கவனிக்க வைத்தது. ஒரு வெள்ளந்தியான அம்மா கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்திப் போகிறார்.
ரமா:
பாரதிராஜா இயக்கிய 'என் உயிர் தோழன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரமாவிற்கு, 'மெட்ராஸ்' படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்ததன் மூலம் பெரிய வெளிச்சம் கிடைத்தது. அதில் இவரின் நடிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்துமே யதார்த்தமாக இருக்கும். அதன் பிறகு தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவருக்கு, 'கனா' திரைப்படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதில் ஐஷ்வர்யா ராஜேஷின் அம்மாவாக நடித்தவர், தனது மகளை கண்டிக்கும் போதும் சரி, மகளின் கனவிற்காக துணை நிற்கும் போதும் சரி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருப்பார். இவரின் சிறந்த நடிப்பு கடந்த வருடம் வெளியான 'பார்க்கிங்' படம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கீதா கைலாசம்:
இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகளான கீதா கைலாசம் தனது ஆக்டிங் கரியரை சற்று தாமதமாகவே ஆரம்பித்திருக்கிறார். ஆனால், ஆரம்பித்த சில வருடங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கலையரசனுக்கு அம்மாவாக இவரின் நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேப் போல், 'சார்பட்டா' படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 'மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு அம்மாவாக நடித்தவர், அந்தக் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருப்பார். சமீபத்தில் வெளியான 'லவ்வர்' படத்திலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் அப்ளாஸ் வாங்கியிருப்பார். அடுத்ததாக, கவினுக்கு அம்மாவாக இவர் நடித்திருக்கும் 'ஸ்டார்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
லிஸ்ஸி ஆண்டனி:
தமிழ் சினிமாவுக்கு 'புதுவரவு அம்மா' தான் லிஸ்ஸி ஆண்டனி. 'தங்க மீன்கள்' படத்தில் டீச்சராக, 'குக்கூ' படத்தில் அண்ணியாக, 'தரமணி', 'பேரன்பு', 'பரியேறும் பெருமாள்', 'ரைட்டர்' என பல படங்களில் தனது நடிப்பால் நல்ல பெயர் வாங்கியவர் லிஸ்ஸி. சமீபத்தில் வெளியான 'ப்ளூ ஸ்டார்' படத்தில் அசோக் செல்வனுக்கு அம்மாவாக நடித்து பலரையும் ரசிக்க வைத்தார். 'ப்ளூ ஸ்டார்' படத்தில் இவரின் நடிப்பை பார்க்கும் போது, நிச்சயமாக இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது தெரிகிறது.
தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த அம்மா கதாபாத்திரம் யார் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்கள்.
from விகடன்
Comments