’மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்’, ’குலதெய்வம்’, ‘கல்யாண வீடு’ என வரிசையாக ஹிட் தொடர்களைத் தந்தவர் இயக்குநர் திருமுருகன். சீரியலில் பிஸியாக இருந்தபோதே சினிமாவுக்குப் போய் ‘எம் மகன்’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என இரு படங்களையும் இயக்கினார்.

இவரது சீரியல்கள் என்றால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கலாமென்பதால் டிவிக்காவது மறுபடியும் வர மாட்டாரா என எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள் சீரியல் ரசிகர்கள். இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன் ’விரைவில் சந்திக்கலாம்’ என அவரிடமிருந்து மெசேஜ் வர, மெட்டி ஒலி பார்ட் 2 வா அல்லது புது சீரியலா என விவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ‘திருமுருகன் சார்கிட்ட இருந்து வர்ற ஒரு ஃபோனுக்காக ரொம்பவே வெயிட் பண்ணிட்டிருக்கேன்’ எனச் சொல்கிறார் திருமுருகனால் அறிமுகப்படுத்தப்பட்டு, சீரியல் ஏரியாவில் கவனிக்கப்பட்ட போதும், தற்போது வாய்ப்பேதுமின்றி சொந்த ஊரில் செல் போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் காஜா ஃபெரோஸ்.
இவரிடம் பேசினோம். ‘’எனக்குச் சொந்த ஊர் தர்மபுரி. சின்ன வயசுல இருந்தே சினிமா பார்க்கறதுன்னு ரொம்ப பிடிக்கும். வீட்டுக்குத் தெரியாமப் படம் பார்க்கப் போய் திட்டு, அடி வாங்கினதெல்லாம் நடந்திருக்கு. பெரிய பெரிய நடிகர்களின் படங்களைப் பார்த்துட்டு அவங்களை மாதிரியே ஸ்டைல் பண்ணிட்டிருக்கிறதைக் கவனிச்ச சிலர், ‘நீ நடிக்கப் போலாம்’ என ஆசையைத் தூண்டிவிட்டாங்க.
அந்தச் சமயத்துல தான் திருமுருகன் சார் ‘நாதஸ்வரம்’ சீரியலுக்கு ஆடிஷன் பண்றார்ங்கிற தகவல் கேள்விப்பட்டு ஆடிஷன் போனேன். அங்க பார்த்தீங்கன்னா அவ்வளவு கூட்டம். இவ்ளோ பேருக்கு மத்தியில நம்மை எப்படி செலக்ட் பண்ணப் போறாங்கன்னு நினைச்சேன்.

ஆனா என்னைத் தேர்தெடுத்தது மட்டுமில்லாம, என் கேரக்டரைத் தன் கூடவே இருக்கற மாதிரியும் பண்ணிட்டார். அதனால தொடர் முடியற வரைக்கும் என் கேரக்டரும் வந்ததுல செம ரீச். ’நாதஸ்வரம்’ நாட்கள் எனக்கு வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவங்கள். அதுல நடிச்ச எல்லாருமே ஒரே குடும்பமாதான் பழகினோம். ஆனா பிறகு அன்றாட வேலைப்பாட்டுல சூழல், ஒருத்தர் கூடவும் பேசக்கூட முடியாதபடிக்கு அமைய, எல்லார் கூடவும் பேசி ரொம்ப நாளாச்சுங்க.
அந்த சீரியல் முடிஞ்சதும், தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த சீரியல்கள்லயும் எனக்கு வாய்ப்பு தந்தார். நடிச்சிட்டிருந்த வரைக்கும் சென்னைக்கும் தர்மபுரிக்குமா போயிட்டு வந்துட்டு பிஸியாகவே இருந்தேன்.
கையில கொஞ்சம் காசும் புழங்குச்சு. ஆனா எப்ப திருமுருகன் சார் சீரியலுக்கு பிரேக் கொடுத்தாரோ அப்பவே எனக்கும் நடிக்க வாய்ப்பில்லாமப் போயிடுச்சு.
அஞ்சாறு வருஷத்துக்கு மேல நடிச்சிருந்தாலும் எனக்குத் திருமுருகன் சாரையும் எங்க யூனிட்டையும் தாண்டி வேற யாரையும் பெருசா தெரியாது. நடிக்க வாய்ப்பில்லைன்னதும் ஊர்லயே இருந்துட்டேன். இங்க என் சம்பாத்தியத்தை நம்பியும் சில ஜீவன்கள் இருக்கறதால ஏதாவதொரு வேலைக்குப் போய் ஆகணும்கிற கட்டாயம். அதனால வாய்ப்பு தேடுறேன்னு சென்னையில சுத்தறதெல்லாம் கதைக்கு ஆகாது.

இங்க செல்போன் அக்சசரீஸ் கடை வேலை போயிட்டிருக்கு. கடைக்கு வர்ற வாடிக்கையாளர்கள் அப்பப்ப ‘என்னப்பா இங்க வேலை பார்க்குற, நடிக்கப் போகலையா’னு கேப்பாங்க. நானா போக மாட்டேங்குறேன்?
இப்ப திருமுருகன் சார் மறுபடியும் சீரியல் எடுக்கப் போறார்னு வந்த செய்திகளை நானுமே பார்த்தேன். ’நாதஸ்வரம்’ தொடர்ல நடிச்சவங்க குரூப்பா பேட்டியெல்லாம் கொடுத்ததையும் பார்த்தேன். திருமுருகன் சார் சீரியல் எடுத்தா நிச்சயம் எனக்கு ஒரு கேரக்டர் வச்சிருப்பார்ங்கிற நம்பிக்கை என்ககு இருக்கு. அவர்கிட்ட இருந்து வர்ற ஒரு ஃபோனுக்காக ரொம்பவே வெயிட் பண்ணிட்டிருக்கேன்.
இதுக்கிடையில் இயக்குநர் கவிதா பாரதி சாரும் ஒரு சீரியலுக்காகப் பேசினார். `எதுவா இருந்தாலும் உறுதியாகிட்டா மறுபடியும் சென்னை வந்து பிஸியாகிடுவேன்’ என்கிறார்.
from விகடன்
Comments