‘ஆஹா, கல்யாணி எந்தா இவிடே!?’ - மலையாள சீரியலில் கலக்கும் `காரைக்குடி' ஐஸ்வர்யா

கேரளா, பெங்களூர் பக்கமிருந்து ஹீரோயின்களைக் கூப்பிட்டு வருகிறார்கள்; `இங்கு நடிகைகளே இல்லையா’ என்கிற ஆதங்கக் குரல்கள் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் அடிக்கடி கேட்பதுண்டு.

‘சரவணன் மீனாட்சி’ ஸ்ரீஜா, ரச்சிதா, ‘செம்பருத்தி’ ஷபானா உட்பட நம் சீரியல் ரசிகர்கள் கொண்டாடிய பலரும் பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களே. கலை என வந்த பிறகு எல்லை பார்க்கலாமா? என்கிற கேள்வி எழுமென்பதால், இது சரியா? தவறா? என்கிற விவாதத்துக்குள் நாம் செல்ல வேண்டாம்.

இப்போது விஷயம் என்னவெனில், அக்கட தேசத்திலிருந்து வந்து இங்கு சில நடிகைகள் சாதிப்பது போல் நமது தமிழ்நாட்டு சீரியல் நடிகை ஒருவர் மலையாள சீரியல் உலகில் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பதுதான். அவர் வேறு யாருமல்ல, `நாதஸ்வரம்’ தொடரில் திருமுருகனுக்கு முறைப் பெண்ணாக நடித்துக் கவனம் பெற்றாரே கீதாஞ்சலி அவருடைய சொந்தத் தங்கை ஐஸ்வர்யா ராம்சாய் தான்.

ஐஸ்வர்யா தமிழிலும் 'சுமங்கலி', 'கல்யாண வீடு', 'பாரதிதாசன் காலனி' முதலான சில தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழ் சீரியல் தராத பெயர், புகழை மலையாள சின்னத்திரை தந்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் பேசினோம்.

‘’திருமுருகன் சார் அறிமுகம் பண்ணி எங்க அக்கா சீரியலுக்கு வந்தாங்க. அவங்களுக்கு அந்த சீரியல் நல்ல ரீச் தந்த போதும், ஒருகட்டத்துல அக்காவுக்குக் கல்யாணம் ஆனதும், வெளிநாட்டுல செட்டில் ஆகி இப்ப கணவர், குடும்பம்னு பார்த்துக்கிற குடும்பத் தலைவி ஆகிட்டாங்க. அக்கா ஃபீல்டுல இருக்கும்போதே எனக்கும் சீரியல் வாய்ப்புகள் வரத் தொடங்குச்சு. திருமுருகன் சார் இயக்கிய சில சீரியல்களிலேயே இங்க நடிச்சிட்டிருந்தேன்.

அந்தச் சமயத்துலதான் ‘மௌனராகம்’ மலையாள சீரியல் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங்லாம் கேரளாவுல இருக்குமேன்னு சின்னத் தயக்கம் இருந்தாலும் வர்ற வாய்ப்பை விட்டா எப்படினு தோண, சரி சொல்லிக் கிளம்பியாச்சு. சொந்த ஊரான காரைக்குடியிலிருந்து எங்க அம்மா எனக்காகவே கேரளா கிளம்பி வந்துட்டாங்க. ஆரம்பத்துல ஷூட்டிங் இருக்கிற நாட்கள்ல மட்டும் கேரளாவுல இருந்துட்டு ஷூட்டிங் முடிஞ்சா ஊருக்கு வந்திடுவோம்.

ஆனா போகப் போக, அந்த சீரியல் எனக்குத் தந்த ரீச் எங்களை அங்கேயே தங்க வச்சிடுச்சு. இப்ப கேரளாவுலயே வீடு எடுத்து தங்கியிருக்கோம். சீரியல்ல கல்யாணிங்கிற என்னுடைய கேரக்டருக்கு மலையாள மக்கள் தர்ற ஆதரவு நான் எதிர்பாராதது. சீரியல்ல நடிகக் கமிட் ஆன கொஞ்ச நாளலயே மலையாளம் நல்லா கத்துக்கிட்டேங்கிறதால என்னை இன்னமும் மலையாளப் பொண்ணுன்னே அங்க நினைச்சிட்டிருக்காங்க நிறைய பேர்.

சீரியல் தொடங்கி ஆயிரம் எபிசோடுகளைக் கடந்திடுச்சு. உலகெங்குமிருக்கிற மலையாள மக்களால விரும்பிப் பார்க்கப்படுறதால இன்னைக்குத் தேதியில அங்க நம்பர் ஒன் சீரியல்னு சொல்லலாம். அங்க தமிழ், மலையாளம்னு யாரும் பிரிச்சுப் பார்க்கறதில்லை. சேட்டன்கள் என்னை அவங்க வீட்டுல ஒருத்தியாகத்தான் பார்க்கிறாங்க.

ஐஸ்வர்யா

சமீபத்துல சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்திருந்தேன். அங்க ஒரு ஃபங்ஷன். கேரள செண்ட மேளக்காரர்கள் வந்திருந்தாங்க. என்னைப் பார்த்ததும், ‘ஆஹா, கல்யாணி எந்தா இவிடே!?’ ன்னு சுத்திட்டாங்க. என்னுடைய சொந்த ஊர் இதுதான்னு சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க’’ எனச் சிரிக்கிறார்.

`அந்த சீரியலில் ஹீரோவா நடிக்கிறவருக்கும் இவருக்குமிடையிலான ரொமான்ஸ் காட்சிகள் அவ்வளவு நல்லா இருக்கும். ரெண்டு பேருக்குமிடையில் ஏதோ இருக்குங்கிற காசிப்ஸ் ரவுண்ட் அடிச்சுட்டுதான் இருக்கு’ என சமூக வலைதளங்களில் கமென்ட் அடிக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.



from விகடன்

Comments