"42 வயதில் கர்ப்பமாகியிருக்கேன்; பத்து வருட ஏக்கம் இப்ப நிறைவேறியிருக்கு!" நெகிழும் நடிகை ஜூலி

சின்னத்திரை நடிகையாக நமக்கு பரிச்சயமானவர் விசாலாட்சி. ஜூலி என்றால் தான் பலருக்கும் இவரது முகம் சட்டென நினைவுக்கு வரும். அவரது காதல் கணவர் மணிகண்டன்.

இதுவரையில் சில படங்களில் பணிபுரிந்தவர் இயக்குநர் ஆக வேண்டும் எனத் தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது ஜூலி மெட்டர்னிட்டி பிரேக்கில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவருடைய வீட்டிலேயே எளிமையான முறையில் ஐந்தாவது மாத பூச்சூடல் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இருவரையும் வாழ்த்திவிட்டு பேசினோம்.

ஜூலி - மணிகண்டன்

"இந்த குழந்தை எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, திருமணமாகி பத்து வருஷம் ஆகிடுச்சு. முதலில் கர்ப்பமானேன். அது அபார்ட் ஆகிடுச்சு. ரெண்டாவது கர்ப்பமானேன். அப்ப கர்ப்பப்பை டியூப்ல பேபி ஃபார்ம் ஆனதால அபார்ட் பண்ண வேண்டியதாகிடுச்சு. மூணாவது முறை டெஸ்ட் கொடுத்துட்டு ரிசல்ட் வர்ற வரைக்குமே நாங்க ரெண்டு பேரும் பயந்துட்டே தான் இருந்தோம். கன்ஃபார்ம் பண்ணினதும் ஹாஸ்பிடலிலேயே அழுதுட்டேன். ஏன்னா சிலர் வயசாகிடுச்சு இதுக்கு மேல எப்படின்னு சொன்னாங்க. எனக்கு இவரை சந்தோஷப்படுத்தணும். இவருடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் குழந்தையோட இருக்கும்போது இவர் மட்டும் தனியா நிற்குறப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். எங்களுக்கு ட்ரீட்மென்ட் மூலமாகத்தான் இப்ப குழந்தை பிறக்கப் போகுது. எனக்கு 42 வயசாகிடுச்சு!" என கண்கலங்கவும் மணிகண்டன் தொடர்ந்தார்.

"எங்களால நிறைய ஃபங்ஷனுக்குப் போக முடியாது. பலரும் இன்னும் குழந்தை இல்லையான்னு கேட்பாங்க. அது ரொம்ப வலியா இருக்கும். அதனாலேயே எந்த ஃபங்ஷனுக்கும் போக மாட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி பூச்சூடல் நிகழ்வு வச்சிருந்தோம். அப்ப வளையல் போடும்போது இந்த தருணத்துக்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தீங்கன்னு ஒருத்தங்க சொல்லவும் அதுவரை சிரிச்சிட்டு இருந்த நாங்க ரெண்டு பேரும் உடைஞ்சு அழுதுட்டோம். உண்மையாகவே இந்த தருணத்துக்காக ரொம்பவே ஏங்கியிருக்கோம்!" என்றதும் ஜூலி தொடர்ந்தார்.

ஜூலி - மணிகண்டன்

"வளைகாப்பு நிகழ்ச்சிக்கெல்லாம் போகும்போது நமக்கு இது மாதிரி எப்ப நடக்கும்? நடக்குமா?னுலாம் ஏங்கியிருக்கேன். குழந்தை அபார்ட் ஆகும்போதெல்லாம் பயங்கரமா டிப்ரஷன் ஆகியிருக்கேன். என் கணவரும் என் குடும்பமும் தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். எனக்கு டான்ஸ்னா உயிர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பண்ணிட்டு என் மனநிலையை டைவர்ட் பண்ணிட்டு இருந்தேன். இந்த முறை கர்ப்பமானதும் முதல் ஐந்து மாசம் வரைக்கும் யார்கிட்டேயும் சொல்லல. ரொம்ப பயந்துட்டே தான் ரெண்டு பேரும் இருந்தோம்.

குறிப்பிட்ட வயசுக்கு மேல கர்ப்பமாகும்போது அதிக மனதைரியம் வேணும். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே குழந்தையும் பெத்துக்கோங்க. குழந்தை பெத்துக்கிறதை மட்டும் எப்பவும் தள்ளிப் போடாதீங்க. வயசானதும் கர்ப்பமானால் நிறைய விஷயங்கள் இருக்கு. வேலை எப்ப வேணும்னாலும் கிடைக்கும். அதனால தள்ளிப் போடாதீங்க!" என்றவரைத் தொடர்ந்து மணிகண்டன் பேசினார்.

ஜூலி - மணிகண்டன்

"நாங்க ட்ரீட்மென்ட்ல இருந்தப்ப அங்க எங்ககிட்ட சொன்ன விஷயம் இது...`சிட்டியில் வளரும் பெண் குழந்தைகளுக்கு சாப்பாடுனால நிறைய பிரச்னைகள் வருது. 32- 35 வயசுக்குள்ளேயே குழந்தை பெத்துக்கணும். 35 வயசுக்கு மேல கருமுட்டையோட இனப்பெருக்கம் 50% குறைஞ்சிடுது. அதனால சக்சஸ் ரேட்டும் குறையும்'னு சொன்னாங்க. அதனால எவ்ளோ சீக்கிரம் குழந்தை பெத்துக்க முடியுமோ பெத்துக்கோங்க!"  என்றவர்களிடம் கெரியர் குறித்துப் பேசினோம்.

"நான் கிட்டத்தட்ட 7 படங்களுக்கும் மேல் ஒர்க் பண்ணியிருக்கேன். இப்ப அதர்வாவுடைய படம் போயிட்டு இருக்கு. தவிர, நானே ஒரு கதையும் ரெடி பண்ணிட்டு இருக்கேன்!" என்றதும் `இவரை சீக்கிரம் டைரக்டர் மணிகண்டனாக பார்க்கலாம். நானும் அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ரொம்ப கடினமா உழைக்கிறார். அவர் எழுதியிருக்கும் கதை எல்லாமே சூப்பரா இருக்கும். அந்தக் கதைகளை பெரிய திரையில் பார்க்க ஆவலா இருக்கேன்!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஜூலி - மணிகண்டன்

"ரெண்டு பேரும் மீடியாவில் இருக்கிறதனால சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். மீடியா இப்போ வேற மாதிரி ஆகிடுச்சு. நான் ரொம்ப நாளா டான்ஸ் ஸ்கூல் ஓப்பன் பண்ணனும்னு சொல்லிட்டிருக்கேன். சைட் பிசினஸ் ஏதாவது பண்ணினா தான் சப்போர்ட்டிவ் ஆக இருக்கும். எப்ப சோசியல் மீடியா வந்துச்சோ அங்க இருந்துதான் பலரை செலக்ட் பண்றாங்க. எங்களை மாதிரியான ஆர்ட்டிஸ்டை மறந்திடுறாங்க. சத்யா பண்ணும்போது நான் ரெண்டு பசங்களுக்கு அம்மாவாக நடிச்சேன். இப்பவே ஏன் அம்மா ரோல்னு பலர் கேட்டாங்க. திருமணமாகி ரெண்டு வருஷம் புராஜக்ட் இல்லாம இருந்தேன். அது ரொம்ப போராட்டமா இருந்துச்சு. எந்தக் கேரக்டர் வந்தாலும் பண்ணலாம் என்கிற முடிவில் இருந்தேன். அதனால பண்ணினேன். இப்பவும் குழந்தை பிறந்த பிறகு பாட்டி கேரக்டருக்கு கூப்பிட்டாலும் நடிக்கலாம்னு தான் இருக்கேன். இப்ப ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் குறித்த அறிவிப்பும் விரைவிலேயே வரும்!" என்றதும் இருவரும் புன்னகைக்க வாழ்த்துகள் கூறி கிளம்பினோம்.

ஜூலியும் அவரது கணவர் மணிகண்டனும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!



from விகடன்

Comments