ஒரு பேன் இந்தியா திரைப்படமாக பிரமாண்ட ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது, `ஆடு ஜீவிதம்' எனும் `The Goat Life'.
எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்' நாவலைத் தழுவி இப்படத்தை மலையாள இயக்குநர் பிளஸ்ஸி எடுத்திருக்கிறார். நஜிப் என்ற ஒருவரின் உண்மைக் கதையை வைத்துதான் 'ஆடு ஜீவிதம்' நாவலை பென்யாமின் எழுதியிருந்தார். அந்த நஜிப்பின் கதாபாத்திரத்தில்தான் நடிகர் பிரித்விராஜ் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், "நான் வழக்கமாக தமிழ்ப் படம் பண்ணினால்தான் எனக்குத் தமிழ் நல்லா பேசுறதுக்கு வரும். நான் தமிழ்ல கடைசியாக பண்ணின படம், 'காவியத்தலைவன்'. இந்த 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் 16 வருடப் பயணம். 2008-ல இந்தப் படம் பண்ணலாம், அதுல நான்தான் நஜீபாக நடிக்கப் போறேன்னு இயக்குநர் பிளஸ்ஸி சார் என்கிட்ட சொன்னார். அந்தச் சமயத்திலேயே இயக்குநர் பிளஸ்ஸி பெரிய இயக்குநர். மம்மூட்டி, மோகன் லால் வச்சு படம் பண்ணிட்டாரு.
ஆனா, இந்தப் படத்தோட ஷூட்டிங் தொடங்கவே பத்து வருஷம் ஆகிடுச்சு. 2018-லதான் தொடங்கினோம். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணியாற்ற இரண்டு நபர்கள்கிட்ட பேசினோம். முதல்ல ரஹ்மான் சார்கிட்ட கேட்டோம். அதுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மர்கிட்டையும் கேட்டிருந்தோம். ரஹ்மான் சார் ஒரு ஜீனியஸ். முதல் சந்திப்புலேயே நாங்க இந்தப் படத்துக்காக என்னென்ன விஷயங்கள் ஸ்பெஷலாக பண்ண யோசிக்கிறோம்னு புரிஞ்சுக்கிட்டார்.
இந்தப் படத்துக்காக முன்னாடி அதிகமாக எடை போட்டுட்டேன். அதுக்கு பிறகு குறைக்கணும்னுதான் அந்த எடை. முதல்ல கேரளால ஷூட் முடிச்சுட்டோம். அதுக்கு பிறகு சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எடையைக் குறைச்சதும் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அந்தச் சமயத்துலதான் லாக்டௌன் போட்டாங்க. நாங்க படப்பிடிப்பு நடத்தின ஊர்லேயே இருந்துட்டோம். அப்போ விமானம் எதுவும் செயல்படல. அதுக்கப்புறம்தான் நாங்க விமானத்தை ஏற்பாடு பண்ணி இங்க வந்தோம். இந்தப் படத்தை சஹாரா பாலைவனத்துக்கு நடுவுல போய் ஷூட்டிங் பண்ணினோம். இதுக்கு முன்னாடி ஷூட்டிங்கிற்காக யாராவது அங்க போயிருப்பாங்களானு தெரியாது. இப்போ ஒன்றரை வருடங்கள் படத்தோட இறுதிகட்ட வேலைகள் மட்டும் நடந்திருக்கு. இது ஒரு ஒட்டுமொத்த சினிமா துறையோட கனவு புராஜெக்ட்!" எனப் பேசி விடைபெற்றார்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம்மியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர், "இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படியான அற்புதமான படைப்பின் மூலம் இங்கு அறிமுகமாவதில் எனக்கு சந்தோஷம். இந்தப் படம் ஒரு மனிதனுடைய சாகசக் கதை. எனக்கு சென்னையின் உணவு அதிகளவில் பிடித்திருக்கிறது" என்றார்.
இதன் பிறகு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "நான் இந்தப் படத்துல கமிட்டாகும்போது நான் என்னுடைய சொந்தத் திரைப்படத்தை பண்ணிட்டு இருந்தேன். இந்த 'ஆடு ஜீவிதம்' படத்தோட பயணம் சீக்கிரம் முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனா, 6 வருஷம் ஆகிடுச்சு. எல்லோரும் இந்தப் படம் 'மரியான்' மாதிரி இருக்குமா'ன்னு கேட்டாங்க. ஆனா 'மரியான்' ஒரு புனைவுக் கதை. இந்தப் படம் உண்மையான கதை" எனக் கூறினார்.
இறுதியாக வந்து பேசிய இப்படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி, "நாம பேசக்கூடாது. நம்ம படம்தான் பேசணும். இந்தப் படத்தைத் தொடங்கும்போது இந்தப் படத்தோட கதாபாத்திரம் மட்டும்தான் என்கிட்ட முழுமையாக இருந்துச்சு. ஆனா, தயாரிப்பு நிறுவனம் இல்ல. பிரித்விராஜ் எனக்கு தம்பி மாதிரி. இங்க தென் இந்தியாவுல இருந்து நிறையப் பேர் கல்ஃப் நாடுகளுக்கும், சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் போறாங்க.
அதுனால பலரோட வாழ்க்கை காணாமல் போகுது. அவங்களோட குடும்பம் காணாமல் போகுது. அப்படி ஒருத்தரோட கதைதான் இந்தத் திரைப்படம். எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் அதுல ஒரு நம்பிக்கை இருந்தா கண்டிப்பாக வெற்றி அடையலாம்" என முடித்துக் கொண்டார்.
from விகடன்
Comments