பிளவர்ஸ் டி.வி-யில் `சக்கப்பழம்' என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சுருதி ரஜனிகாந்த். மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், சினிமா நடிகை எனப் படிப்படியாக முன்னேறிய சுருதி ரஜனிகாந்த் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிறுவயதில் உறவினரால் ஏற்பட்ட மோசமான நிகழ்வு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் சுருதி ரஜனிகாந்த் கூறுகையில், "நான் பெரும்பாலும் மௌனமாக இருக்கக் காரணம் காதல் அல்ல. எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சிறார்வதைதான்.
அந்த சம்பவத்தை வெளிப்படையாக யாரிடமும் கூறவில்லை. எனக்கு அதைக் கூறுவதற்கு எந்தச் சிரமமும் இல்லை. நான் இப்போது கூறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களில் என்னை நேசிக்கும் நிறைய பேர் இருப்பீர்கள். அவர்களில் சிலருக்கு அது தெரியும். அதுபற்றி மீண்டும் பேசக்கூடாது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அது என்னுடைய வாழ்வின் கறுப்புப் பக்கமாகும். எனது வீட்டிலிருப்பவர்களுக்கே அந்த விஷயம் தெரியாது. நான் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை. நானே என்னைத் தேற்றி நல்லபடியாக வழிநடத்தி வருகிறேன். ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது நடந்த சம்பவத்தில் ஏற்பட்ட மன அதிர்ச்சியை நான் சுயமாகவே கையாண்டு வருகிறேன். அதனால், எந்த இடத்திலும் நான் உறைந்து நிற்கவில்லை. எனக்கு அது நேர்ந்தபோது நான் சத்தம்போட்டு எதிர்ப்பு தெரிவித்தேன். நான் அவ்வளவு தைரியசாலியாக இருந்தேன்.
இதுபோன்று நடந்தால் குழந்தைகள் பயப்படக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன். பயப்படாமல் அதை எதிர்க்க வேண்டும். கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். எந்த வயதாக இருந்தாலும் நமக்கு அதற்கான சக்தி உண்டு. அதை நான் புரிந்துகொண்டேன்.
எனக்கு அன்று தொல்லை செய்தவர் எனது உறவினர். அவருக்கு இப்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண் குழந்தை பிறந்த உடன் அவர் எனக்கு மெசேஜ் அனுப்பி 'ஸாரி' கேட்டார். 'டேக் கேர், ஆல் த பெஸ்ட்' என நான் பதில் மெசேஜ் அனுப்பினேன். அவரால் ஒருநாளாவது நிம்மதியாக உறங்க முடியுமா... தன் மகளிடம் இதுபோன்று யாராவது நடந்துவிடுவார்களோ என எப்போதும் சிந்திப்பார்.
நாம் பல வழிகளில் எதிர்ப்பு தெரிவிக்கலாம். நாம் ஒருமுறை எதிர்த்தால், நம் நிழலைக்கண்டாலே அவர்கள் பயப்படுவதைப் பார்க்கலாம். அந்த வயதில் அவர் என்னைக் கண்டு பயந்ததை நான் பார்த்திருக்கிறேன். இதை யாரிடமாவது சொல்லிவிடுவேனோ என்ற பயத்தில் என்னிடமோ, என் சகோதரிகளின் பக்கத்திலோ வரமாட்டார். என் பின்னால் இருந்து கிண்டல் செய்யக்கூடாது என நண்பர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். அப்படி செய்தால் எனது உடனடிபதில் தாக்குதலாகத்தான் இருக்கும். அடித்த பிறகுதான் ஆள் யார் என்றே பார்ப்பேன்" என்றார்.
from விகடன்
Comments