Aadujeevitham: `மொழி படத்துல எம்.எஸ்.பாஸ்கர் சார் நடிச்ச கேரக்டர்...!' - ப்ரித்விராஜ் ஷேரிங்ஸ்

20 ஆண்டுகள், 100க்கும் மேற்பட்ட படங்கள், பல்வேறு மொழிகளில் நடிப்பு, மாஸான இயக்குநர் என இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க பெயராக ப்ரித்விராஜ் இருக்கிறார்.

இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில் 'The Goat Life - ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ஆடுஜீவிதம்' எனும் நாவலை மையப்படுத்திய படம் இது. 2008 ஆரம்பமான இதன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை, படப்பிடிப்பாக மாறியது 2018ல். இப்போது 6 ஆண்டுகள் கழித்துத் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் அப்படி உழைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ப்ரித்விராஜுடன் நடந்த உரையாடலில் இருந்து...

2008ல இந்தப் படத்துக்கான வாய்ப்பு வரும்போது, சினிமாவில் உங்க அனுபவம் 6 ஆண்டுகள். 2018ல இதன் ஷூட்டிங் தொடங்கும்போது, உங்க அனுபவம் 16 ஆண்டுகள். இந்த இடைவெளியில நிறைய கத்துக்கிட்டிருந்திருப்பீங்க. இந்த தாமதம் நல்லதுதான்னு நினைக்கிறீங்களா ?

"என் நடிப்புக்கு மட்டுமல்ல நிறைய விஷயங்களுக்கு இந்த தாமதம் நல்லதுதான்னு நினைக்கிறேன். 2008லேயே பிளஸ்ஸி சாருடைய பார்வை இந்தப் படத்தின் மீது ரொம்ப பெருசா இருந்தது. மொராக்கோ மாதிரியான இடங்களுக்கு போய் ஷூட் பண்ணணும், நிஜ பாலைவனங்களுக்குப் போகணும், அதற்கான பட்ஜெட் எல்லாம் அந்த சமயத்துல மலையாள சினிமாவுல வாய்ப்பே இல்லை. 2008 - 2018க்கான போராட்டமே இதுதான். நம்ம ஊர் சினிமால இது சாத்தியப்படணும். இந்த பத்து வருட இடைவெளியில நிறைய மாற்றங்கள் மலையாள சினிமாவுல நடந்திருக்கு. நிறைய புதுப்புது  விஷயங்கள் வந்திருக்கு. இந்தப் படத்துக்கான வாய்ப்பு எனக்கு வரும்போது, எனக்கு கல்யாணமாகல, நான் அப்பாவா இல்ல, நான் தயாரிப்பாளரா இல்ல, விநியோகஸ்தரா இல்ல, இயக்குநரா இல்ல. ஆனா, 2018ல ஷூட்டிங் போகும்போது, சினிமா மீது எனக்கு இருந்த பார்வையும் அனுபவமும் நீங்க சொன்ன மாதிரி நிறைய மாறியிருக்கு, வளர்ந்திருக்கு. இன்னும் நான் கத்துக்கிட்டுதான் இருக்கேன். இருந்தாலும், நான் சினிமாவைப் புரிஞ்சுக்கிறது மெருகேறியிருக்கு. ஒரு வேளை 2008லேயே நடந்திருந்தால், இளமையின் வேகத்திலும் துடுப்பிலும் இந்தக் கதைக்கு வேறொரு முகத்தை கூட கொடுத்திருக்க முடியும்னு நினைக்கிறேன், தெரியல. 2018ல முதல் நாள் நடிச்சதுக்கும், 2023ல கடைசி நாள் நடிச்சதுக்கும் இடையே ஒரு நடிகனா நான் நிறைய மாறியிருக்கேன். இந்தப் படத்தை பொறுத்தவரையில், இது இந்த காலத்து ப்ரித்விராஜுடைய நடிப்புனு சொல்லவே முடியாது. அவ்வளவு பயணிச்சிருக்கேன்"

ஜிம்மி ஜீன் லூயிஸ் மாதிரி பிற நாட்டு நடிகர்கள் கூட வேலை செஞ்சது எப்படி இருந்தது ?

ப்ரித்விராஜ்

"சினிமாவுக்கு மொழி முக்கியமே கிடையாது. இப்ராஹிம் காத்ரிங்கிற கேரக்டர்தான் ஜிம்மி நடிச்சது. இந்தக் கேரக்டருக்கு சரியான முகம் அமைய எங்களுக்கு இரண்டரை ஆண்டுகளாகிடுச்சு. அந்த நாவலை படிச்சா தெரியும், இது ரொம்ப ரொம்ப முக்கியமான கேரக்டர். எக்கச்சக்கமான நடிகர்கள் பெயரைக் கேட்டோம், ஆலோசிச்சோம், பார்த்தோம். ஆனா, யாருமே சரியா செட்டாகலை. அப்புறம்தான், ஜிம்மி கிடைச்சார். செட்டுக்கு வந்துட்டா, நாம எங்கிருந்து வந்திருக்கோம், என்ன மொழி பேசுறோம்ங்கிறது முக்கியமில்லை. நாம கத்துக்கிட்ட க்ராஃப்டை செயல்படுத்தணும். அதை ஜிம்மி பிரமாதமா பண்ணினார். இந்தக் கதையில நாங்க நடிச்ச நஜீப், இப்ராஹிம் காத்ரி கேரக்டரும் நிஜ வாழ்க்கையுடையது. அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாது, மொழி புரியாது. ஆனா, நிறைய பேசிக்குவாங்க. அது எங்களுக்கு ரொம்ப யதார்த்தமா இருந்தது. நஜீப் - காத்ரி இவங்களுக்கு இடையே இருந்த உறவு ஆத்மார்த்தமானது. அதுக்கு மொழி ஒரு பிரச்னையில்லை. இப்ராஹிம் காதிரி இல்லைனா, நஜீப் இறந்திருப்பார். நாவல் படிக்கும்போதும் அல்லது இந்தப் படம் பார்க்கும்போதும் தெரியும், நஜீப் வாழ்க்கையில இப்ராஹிம் காத்ரி எப்படி வந்தார், எப்படி போவார்ங்கிறது கடவுள் மாதிரி இருக்கும். நஜீப்புடைய தேவதை இப்ராஹிம். அதனால, படம் பார்த்துட்டு, ஜிம்மியை எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும்"

எந்த நடிகராக இருந்தாலும் பிளஸ்ஸி இயக்கத்துல ஒரு படமாவது நடிச்சிடணும்னு நினைப்பாங்க. அது அவங்க கரியருக்கு ரொம்ப முக்கியம்னு ஒரு பேட்டியில சொல்லிருந்தீங்களே...

"மலையாள சினிமாவுடைய மிக முக்கியமான இயக்குநர் பிளஸ்ஸி சார். அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் கிளாஸிக். ஒரு படமாவது அவர் இயக்கத்துல நடிச்சிடணும்னு எல்லா நடிகர்களும் நினைப்பாங்க. மணிரத்னம் சாரை அப்படி சொல்வாங்கல்ல. எனக்கு ஒரு முறையாவது மணி சார் இயக்கத்துல நடிச்சிடணும்னு ரொம்ப ஆசையிருந்தது. அது, 'ராவணன்'ல நிறைவேறியது. அது மாதிரி, பிளஸ்ஸி சார் படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அவருடைய கனவு படத்துல நான் நடிக்க வாய்ப்பு கிடைச்சதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும். இது எனக்கு கிடைச்ச பெரிய பரிசு. ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னன்னா, 2008ல அவர் இந்தக் கதையை பண்ணலாம்னு வரும்போது, அந்த சமயத்துல மலையாள சினிமாவுல அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் இவர்தான். பிளஸ்ஸி சார் முடிவு பண்ணினா, எந்த நடிகரா இருந்தாலும் தயாரிப்பாளரா இருந்தாலும் அதுக்கு ஓகே சொல்வாங்க. அப்படியான இடத்துல இருந்தவர், இந்தப் படத்துக்காக 16 வருஷம் காத்திருந்தார்னா பார்த்துக்கோங்க. அவருடைய கமிட்மென்ட் என்னை எப்போவும் ஆச்சர்யப்படுத்தும். எல்லோரும் நான் 31 கிலோ உடல் எடை குறைச்சு கஷ்டப்பட்டேன்னு சொல்றாங்க. ஆனா, பிளஸ்ஸி சாருடைய கமிட்மென்ட்டுக்கு முன்னாடி எதுவும் இல்லை"

நஜீப் எனும் உண்மை கதாபாத்திரத்துல நடிக்க மனரீதியா எப்படி தயாரானீங்க ?

ப்ரித்விராஜ்

"அந்தக் கேரக்டரை நான் உள்வாங்கி புரிஞ்சுக்கிறதுக்கு திரைக்கதை ரொம்ப உதவியா இருந்தது. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, நஜீப் சாரை நான் ஷூட்டிங் முடியுற வரைக்கும் சந்திக்கல. திரைக்கதையுடைய தேவை என்னவா இருந்ததோ அப்படிதான் எமோஷனலாகவும் நான் தயாரானேன். இங்க தொடங்கி இங்க முடியுதுனு சிம்பிளா இந்தக் கேரக்டரை அணுகமுடியாது. ரொம்ப ரொம்ப சவாலா இருந்தது. பிளஸ்ஸி சாரும் நானும் இதை மூணு ஸ்டேஜா பிரிச்சு அணுகினோம். நஜீப் அந்த பாலைவனத்துக்குள் வந்தவுடன், ஏதோ தப்பா இருக்கு, நான் இங்க வரவேண்டியவன் இல்ல, இப்படி நடக்கக்கூடாதுனு சூழலை மறுத்து தான் மாட்டிக்கிட்டதை உணர்ந்து, அங்க இருக்கிற மனிதர்கள்கிட்ட  எப்படியாவது புரிய வெக்க போராடுறது முதல் ஸ்டேஜ். அப்படியே மூணு மாதங்கள் ஓடுது. உடல் எடை குறைஞ்சிடுச்சு, தலைமுடி, தாடி எல்லாம் வளர்ந்திடுச்சு. அவரைச் சுத்தி இருக்கிற அனைத்தின் மீதும் கோவம் வருது. அதை வெளிக்காட்டுறது இரண்டாவது ஸ்டேஜ். மூணு வருடங்கள் கழிச்சு, ரொம்ப மெலிஞ்சு போயிடுறார், அங்கிருந்த விலங்குகள்ல ஒண்ணா மாறிடுறார், அங்க யார் கூடவும் பேசாமல் இருந்ததால், கோர்வையா பேச கூட வரலை. ஓர் அமைதி நிலைக்கு போயிட்டார். இது மூணாவது ஸ்டேஜ். இப்படிதான் வொர்க் பண்ணினேன்"

கடந்த நாலஞ்சு வருடங்களா மலையாள சினிமாவுடைய வளர்ச்சி அபாரமா இருக்கு. இந்த நாலஞ்சு வருடங்களா தமிழ் சினிமா எப்படி இருக்குனு நினைக்கிறீங்க ?

"கொஞ்ச மாசம் முன்னாடிதான் 'லியோ', 'ஜெயிலர்' கேரளாவுல தூள் கிளப்புச்சு. மலையாள படம் தமிழ்நாட்டுல தியேட்டர்ல பெருசா ஓடுதுனு உங்களுக்கு புதுசா இருக்கலாம். ஆனா, தமிழ் சினிமா கேரளாவுல சூப்பர் டூப்பர் ஹிட்டாகுறது நிறைய வருஷமா நடந்துக்கிட்டு இருக்கிற விஷயம். மலையாளப் படத்துக்கு இங்க சூப்பரான ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது ரொம்ப சந்தோஷம். எந்த மலையாள படமா இருந்தாலும் தமிழ்நாட்டுல பெரிய ரிலீஸ் கிடைக்கப்போகுது, எந்த தமிழ் படமா இருந்தாலும் கேரளாவுல பெரிய ரிலீஸ் கிடைக்கப்போகுதுங்கிற சூழல் வந்தால் ரொம்ப அழகா இருக்கும். இப்படியான சூழல்ல நானும் சினிமாவுல இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு. மலையாள சினிமா நல்ல கன்டன்ட் உடைய படங்கள் நிறைய கொடுக்குறாங்கனு எல்லோரும் பேசுறாங்க. அது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா, தமிழ்லயும் ஜீனியஸ் இயக்குநர்கள் இருக்காங்க. வெற்றிமாறன் சார், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்னு நிறைய பேர் இருக்காங்க. இன்னொரு பக்கம் ஷங்கர் சார், அட்லினு தமிழ் சினிமா வெர்சடைலா இயங்கிக்கிட்டு இருக்கு. 'போர் தொழில்' இயக்குநரைப் பத்தி அங்க பேசினாங்க. நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கல, பார்க்கணும்"

நீங்க நடிச்ச ஏதாவது ஒரு தமிழ் படத்தை பார்க்கணும்னா எந்தப் படத்தை பார்ப்பீங்க ? ஏன் ?

மொழி

"'மொழி'. அந்தப் படத்துடைய நாள்கள் எனக்கு ரொம்ப நெருக்கமானவை. அது ஒரு மாடர்ன் கிளாஸிக். சத்தத்தையே கேட்க முடியாத பொண்ணு, சத்தம்தான் உலகம்னு நினைச்சிருக்கிற இசைக்கலைஞன். இவங்களுக்கிடைய நடக்கிற காதல். எவ்வளவு அழகான விஷயத்தை காமிக்கலா சொல்லியிருப்பார் ராதாமோகன் சார். அவரால மட்டும்தான் இப்படி கதை சொல்ல முடியும். எம்.எஸ்.பாஸ்கர் சார் நடிச்ச கேரக்டர் ஃபிலிம் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்க வேண்டிய மெட்டீரியல்"

பிரகாஷ்ராஜுக்கும் உங்களுக்குமான நட்பு ?

"எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அவருடைய தீவிர ரசிகன் நான். ஆனா, எங்களுக்குள்ள இருக்கிற வைப் காலேஜ் படிக்கிற பசங்க மாதிரி இருக்கும். அவர் தான் எனக்கு 'மொழி' பட வாய்ப்பைக் கொடுத்தார். பாக்யராஜ் சார் இயக்கத்துல 'பாரிஜாதம்' படத்துல அவரும் நானும் நடிச்சுட்டு இருந்தபோது, 'ஒரு கதை இருக்கு. கேட்குறீயா?'னு கேட்டார். அப்படிதான் நான் ராதாமோகன் சாரை சந்திச்சேன். அதுக்குப் பிறகு, நானும் பிரகாஷ் ராஜ் சாரும் நிறைய படங்கள் சேர்ந்து நடிச்சோம். பிரகாஷ் ராஜ் சார் கூட உங்க காம்பினேஷன் நல்லாயிருக்கேன்னு நிறைய பேர் சொல்வாங்க. ஏன் நல்லாயிருக்குனா, அவர் ஒரு அற்புதமான நடிகர். அவர் கூட நடிக்கும்போது, நல்லா இல்லாமல் போக வாய்ப்பேயில்லை. அவர் கூட வொர்க் பண்ணும்போதுதான், ஒரு நடிகனா நிறைய கத்துக்கிட்டேன். நான் முதன்முதல்ல தயாரிச்ச '9' படத்துல அவர் நடிச்சார். அதுக்காக அவர்கிட்ட செக் கொடுத்தேன். 'என்ன தைரியம் இருந்தா எனக்கு செக் கொடுப்ப?'னு தூக்கி எறிஞ்சுட்டார். என்னை வேறொருத்தரா பார்க்கவேமாட்டார். நானும் அப்படிதான்"



from விகடன்

Comments