மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஓய்விலிருந்து பணிக்குத் திரும்பியுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், "ஓய்விலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன். இந்த கொஞ்ச நாள்களில் எந்த வேலையும் இல்லை எனக்கு. அதனால் என் நண்பர்களுடன் சேர்ந்து 'ஹெல்த் பாட்கேஸ்ட்' ஒன்றைச் செய்துள்ளேன். இது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். அதை மிகுந்த விருப்பத்துடன் நேசித்துச் செய்திருக்கிறேன். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில் அவரது யூடியூப் சேனலில் வெளியான 'ஹெல்த் பாட்கேஸ்ட்' எபிசோடு ஒன்றில் மயோசிடிஸ் நோய் கண்டறிவதற்கு முந்தைய ஆண்டு எவ்வளவு கடினமாக இருந்தது என்பது குறித்துப் பேசியிருக்கிறார். அதாவது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கு ஒரு வருடம் முன்புதான் சமந்தா தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவைப் பிரிந்தார்.
இந்நிலையில் அந்த 'ஹெல்த் பாட்கேஸ்ட்' எபிசோடில் பேசியிருக்கும் அவர், “இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த முந்தைய ஆண்டு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆண்டு எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக நானும் எனது நண்பரும் மும்பையிலிருந்து வந்துகொண்டிருந்தபோது ‘நீண்ட நாள்களாகவே நான் நிம்மதியாகவே இல்லை. இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. தற்போது என்னால் நன்றாகச் சுவாசிக்க முடிவதை உணர்கிறேன். இனிமேல் எந்தத் தடையும் இன்றி என் வேலைகளில் கவனம் செலுத்த முடியும்’ என்று நான் அவரிடம் கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
மேலும் நான் இந்த பாட்கேஸ்ட் செய்ய விரும்பியதற்குக் காரணம், இந்த 'தன்னுடல் தாக்குநோய்' (Autoimmune diseases) என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதை நான் நன்றாகக் கையாளுகிறேன். அதுபோல உங்களுக்கு இந்த நோய் வந்தாலும் அதை எண்ணி வருந்தாமல் பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார்.
from விகடன்
Comments