Radhika Apte: தெலுங்கு சினிமா குறித்த விமர்சனம்; பழைய பேட்டியால் டார்கெட் செய்யப்படும் ராதிகா ஆப்தே!

ராதிகா ஆப்தே அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தின் மூலம்  கோலிவுட்டில் பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி எனப் பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். குறிப்பாக 'அந்தாதுன்', 'லஸ்ட் ஸ்டோரீஸ்', 'பார்ச்சுடு' முதலிய பாலிவுட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். திரைத்துறையில் பெண்களுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் எழுப்பியும் வருகிறார். தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான 'லெஜண்ட்' மற்றும் 'லயன்' படங்களில் நடித்துள்ளார்.

ராதிகா ஆப்தே

இந்நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பேசியிருந்த அந்தப் பழைய வீடியோவில், “தெலுங்கு சினிமாத்துறை ஆணாதிக்கம் நிறைந்தது. அங்கே உள்ள ஹீரோக்களை நாம் ஹீரோயின்களாகவே இருந்தாலும் கடவுளை வழிபடுவது போல வழிபட வேண்டும். நடிகர்கள், இயக்குநர்கள் பெண்களை மதிப்பதே இல்லை. அங்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இதனால் தெலுங்குப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டேன்" என்று ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.

இவை இணையத்தில் வைரலாக, தெலுங்கு ரசிகர்கள் பலரும் ராதிகா ஆப்தேவிற்கு எதிராகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் நெட்டிசன் ஒருவர், "நீங்கள் எத்தனை தெலுங்கு படங்களில் நடித்துள்ளீர்கள்? பாலகிருஷ்ணா அப்படி என்றால் மற்ற எல்லா ஹீரோவும் அப்படித்தான் என்று அர்த்தம் இல்லை. சிரஞ்சீவி, பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுங்கள்.

அவர்கள் நடிகைகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள். அதன் பிறகு தெலுங்கு சினிமாத்துறை பற்றி விமர்சியுங்கள். அதுமட்டுமின்றி ஆணாதிக்கம் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும்தான் இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

மறுபுறம் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பலர், இவர் தெலுங்கில் நடித்திருப்பது அவருடன் மட்டும்தான் என்பதால், அவரை எப்படி விமர்சிக்கலாம் என்கிற ரீதியிலும் கேள்விகள் கேட்டு வருகின்றனர். சிலர் ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் சொல்லுங்கள்.



from விகடன்

Comments