இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜோஷுவா- இமை போல் காக்க' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.
ஐசரி.கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கிற இப்படத்தில் இவரின் சகோதரியின் மகனான வருண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகர் கிருஷ்ணாவும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் வருண், " இது ஒரு பயங்கரமான பயணம். இந்தப் படத்தை உங்ககிட்ட சேர்க்கிறதுக்கு 3 மாசம், 6 மாசம் , 9 மாசம், 18 மாசம்னு காத்திருந்தேன். இப்போ உங்ககிட்ட 'ஜோஷுவா' திரைப்படம் வந்து சேரப்போகுது. கெளதம் மேனன் சார் ஸ்டைல்ல சொல்லனும்னா, 'நான் கேட்டது ஜாலியான லவ் படம். ஆனா, அவர் எனக்கு கொடுத்தது இப்படியான ஆக்ஷன் படம்'. கடின உழைப்பும், காலமும் சேரணும். இதைதான் நான் இந்த படத்துல கத்துக்கிட்டேன்." எனப் பேசி முடித்துக் கொண்டார்.
இயக்குநர் கெளதம் மேனன் பேசுகையில், " இந்தப் படத்துக்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த படம் ஒரு ஆக்ஷன் படம், எக்ஸ்ப்ரிமென்டல் படம்னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். அதுக்குப் பிறகு எனக்கு ரொம்பவே சுதந்திரம் கொடுத்தார். 'ராஜா வீட்டு கன்னுக்குட்டி'னு வருணை சொல்றாங்க. ஆனா, அவருக்கு இந்த வேலை சுலபம் இல்ல. அவர் இந்தப் படத்துக்காக அதிகப்படியான உழைப்புக் கொடுத்திருக்கார். கேமரா முன்னாடி நடிக்கிறது சுலபமானது கிடையாது. நான் படங்கள்ல நடிச்சதுனால இதைப் பத்தி சொல்றேன். இந்தப் படத்துல வருண் ரொம்பவே நல்லா நடிச்சிருக்கார். மேலும், விறுவிறுப்பான கதாபாத்திரம்னு சொன்னதும் நடிகர் கிருஷ்ணாவும் நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டார். 'துருவ நட்சத்திரம்' படத்துல வர்ற மாதிரியானதுதான் டிடி (திவ்யதர்ஷினி)யோட கதாபாத்திரம். டிடி (திவ்யதர்ஷினி) நடிச்சிருக்கிற 'துருவ நட்சத்திரம்' படத்தோட கதாபாத்திரத்துக்கும் இந்த படத்தோட கதாபாத்திரத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அந்த படம் பார்க்கும்போது முழுமையாக புரியும்." என்றார்.
இறுதியாக வந்து பேசிய தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ், " அவர் 'சாக்லேட் பாய் மாதிரி இருக்கான்'னு சொன்னாரு. அதுக்குப் பிறகு 'வருணை வச்சு அக்ஷன் படம் பண்ணலாம்'னு சொன்னாரு. உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன்னு நான் சொல்லிட்டேன். வருணை எல்லோரும் 'ராஜா வீட்டு கன்னுக்குட்டி'னு சொல்றாங்க.
அது வருணுக்கு ரொம்ப சுலபம் இல்ல. எல்லா விஷயங்களையும் கஷ்டப்பட்டு கத்துக்கிட்டு இங்க வந்திருக்காரு. இந்த படம் இளைஞர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தை பார்க்கும்போது இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி இருக்கும். அப்படிதான் படத்தை எடுத்திருக்காங்க. நடிகர் கிருஷ்ணா ஹீரோவாக நடிச்சிட்டிருக்கார். கெளதம் மேனன் சார் கேட்டதுக்காக இந்த படத்துல வில்லன் கதாபாத்திரம் பண்ணியிருக்கார்." என பேசி உரையை முடித்துக் கொண்டார்.
from விகடன்
Comments