பகத் பாசில்... எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு தன் யதார்த்த நடிப்பின் மூலம் உயிர் கொடுப்பது மட்டுமல்லாமல் அதை பார்வையாளர்கள் என்றும் மறக்க முடியாத அளவுக்கு அந்தப் பாத்திரத்தை பரிச்சயப்படுத்தும் அற்புத கலைஞன்.
சின்னச்சின்ன முகபாவனைகள், உடல் மொழி என அக்கதாபாத்திரத்திற்கு பகத் அளிக்கும் பங்கு அபாரமானவை. அதற்கு சான்றாக பலவற்றை சொல்லலாம். மனக்குமுறல், ஆணவம், வெட்கம், ஏக்கம், நகைச்சுவை, காதல், கர்வம், வீரம், விரக்தி, ஏமாற்றம், பழிவாங்கல் என எமோஷன் எதுவாக இருந்தாலும், அதற்கு இலக்கணம் வகுக்கும் அளவுக்கு பகத்தின் நடிப்பு இருக்கும் என்பதை அவரது படங்கள் பார்க்கும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
கடந்த 15 வருடங்களில் பகத்தின் படங்கள் வெளிவராமல் இருந்ததில்லை. லாக்டெளனில் கூட, ஓடிடி தளங்களில் இவரின் நான்கு படங்கள் வெளியாகின. 2020ல் இருந்து எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். 'ட்ரான்ஸ்' படத்தில் விஜு பிரசாத், பாஸ்டர் ஜோஷுவா கார்ல்டன் என பகத் ஆடியது ருத்ரதாண்டவம். 'இருள்' ஒரு மூன்றே மூன்று கதாபத்திரங்கள் கொண்ட மிஸ்ட்ரி த்ரில்லர், 'ஜோஜி' ஒரு க்ரைம் டிராமா, 'மாலிக்' ஒரு பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர்.
20 வயது முதல் 60 வயது வரை பயணிக்கும் தன் கதாபாத்திரத்தை தன் வெரைட்டியான உடல் மொழியாலும் முதிர்ச்சியான நடிப்பாலும் படத்தைத் தாங்கினார். கதாநாயகனாக பகத் எப்போதும் இருந்ததில்லை. கதையின் நாயகனாகவே மிளிர்வது பகத்தின் ஸ்டைல் ! மலையாளத்தில் யதார்த்த நடிப்பை அள்ளி தெளிக்கும் பகத்துக்கு டோலிவுட் ஆஃபர் வருகிறது, 'புஷ்பா'. பன்வர்சிங் ஷெகாவத் என்ற கேரக்டரில் அல்லு அர்ஜுனுக்கு நிகராக வில்லத்தனத்தில் மிரட்டினார். 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் 'சார்' என அழைக்கச் சொல்லும் சீன் அனைவருக்கும் பரிச்சயம்.
ஆனால், அதற்கு முன்னரே 'புஷ்பா'வில் அப்படியொரு காட்சி இருக்கும். பகத் அல்லு அர்ஜுனிடம் 'சார்' என அழைக்க சொல்லும் காட்சி பகத் செம மாஸாக இருப்பார். 'விக்ரம்' படத்தில் அமர் கேரக்டரில் முதல் பாதி முழுக்க நாயகனாகவே வலம் வந்ததை ஹீரோயிசம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இப்படி பயங்கர மாஸ் கமர்ஷியல் படத்தில் நடித்து முடித்த கையோடு, மீண்டும் தன் ஜோனுக்கு போய் நடித்த படம், 'மலையன்குஞ்சு'. நிலச்சரிவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் இளைஞன். நிலச்சரிவில் சிதைந்து கிடைக்கும் பகுதியில் மண் இடுக்குகளில் சிக்கியிருக்கும் சூழலில் முகத்தில் மட்டும்தான் நடிப்பை வெளிப்படுத்த முடியும். அதை அத்தனை சிறப்பாக செய்திருப்பார்.
'பாச்சுவும் அத்புதவிளக்கும்', 'தூமம்', 'மாமன்னன்' என பகத் நடித்து மூன்று படங்கள் 2023ல் வெளியாயின. 'பாச்சுவும் அத்புதவிளக்கும்' படத்தில் வெகுளித்தனம் நிறைந்த இளைஞன். 'மாமன்னன்' படத்தில் வில்லத்தனம் நிறைந்த அரசியல்வாதி ரத்னவேலாக பகத் திரையை ஆக்கிரமித்திருந்தார். 'என்ன பழக்கம்ணே இது?' என்ற வசனம் மீம் டெம்ப்ளேட்டானது. வில்லனாக சாதிவெறி பிடித்த அரசியல்வாதியாக இருந்தாலும் தன் மிரட்டலான நடிப்பால் இன்ஸ்டா ரீல்ஸ் முழுக்க நிறைந்திருந்தார் பகத். 2024ல் பிரமாண்ட லைன் அப் வைத்திருக்கிறார்.
இந்த வருடத்தின் அவரது கணக்கை துவங்கி வைக்க இருப்பது 'ஆவேஷம்'. கடந்த வருடம் அனைவராலும் கொண்டாடப்பட்ட 'ரோமான்சம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்த்தில் ஏப்ரம் மாதம் வெளியாகிறது, 'ஆவேஷம்'. ரங்கா எனும் கேங்ஸ்டராக வருகிறார். பட்டையான கிருதா, வெள்ளை சட்டை, வெள்ளை பேன்ட், கழுத்து நிறைய சங்கிலி, கூலிங் கிளாஸ் என முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் களமிறங்க இருக்கிறார். அடுத்ததாக, 'புஷ்பா 2'. அல்லு அர்ஜுனுக்கும் பகத் பாசிலுக்குமான வெறித்தனமான போர்ஷனே இந்தப் படத்தில்தான்.
முதல் பாகத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்க ஆக்ரோஷமாக காத்திருக்கிறார், பன்வர்சிங் ஷெகாவத். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக, 'வேட்டையன்'. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார். 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு, வடிவேலு - பகத் கூட்டணி இணைந்திருக்கும் படம் 'மாரீசன்'. சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பும் துவங்கிவிட்டது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து, ராய் என்பவரின் இயக்கத்தில் 'கராத்தே சந்திரன்' என்றொரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்காக கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளார், பகத். இவை தவிர, சில சர்ப்ரைஸ்களும் உள்ளன. அதற்கான அறிவிப்பும் விரைவில் வரும் என்கிறார்கள்.
நீ நடிகன் யா... நீ நடிகன் யா...!
from விகடன்
Comments