தமிழில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பல படைப்பாளிகள் திரைக்குக் கொண்டு வர ஆசைப்பட்ட படைப்பு, `பொன்னியின் செல்வன்'. ஆனால், அதன் சிக்கலான கதை அமைப்பும், மக்களிடம் பொன்னியின் செல்வன் பெற்றிருந்த வரவேற்பும், அதற்கான பொருட்செலவும் அனைவரையும் அந்த முயற்சியில் தயக்கம் காட்டவைத்தது. அதேபோல, ஹாலிவுட் படைப்பாளிகளுக்குச் சவாலாக இருந்த அறிவியல் புனைவு (Sci-fi) நாவல்தான் 1965-ல் ஃபிராங்க் ஹெர்பெர்ட் (Frank Herbert) எழுத்தில் வெளிவந்த `டியூன்' (Dune).
'அவதார்', 'ஸ்டார் வார்ஸ்', 'ஸ்டார் டிரெக்' போன்ற பிரமாண்ட படைப்புகளைக் கொடுத்த ஹாலிவுட்டில் தொழில்நுட்பத்திற்குப் பஞ்சமில்லை என்றாலும், டியூனைத் திரைக்குக் கொண்டுவர அது மட்டுமே போதுமானதாக இல்லை. ஏனெனில், டியூனின் கதையும், அதன் உலகமும் மிகவும் தனித்துவமானது. டியூன் 1960களில் அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பல்வேறு தருணங்களில், ஹாலிவுட் பிரபலங்கள் பலரும், தாம் சிறுவயதில் 'டியூன்' படித்ததை நினைவுகூர்வதைக் காணமுடியும். டியூனின் கதைக்களமும், அது மக்களிடம் பெற்றிருந்த வரவேற்புமே அதனைப் படமாக்குவதற்கு ஒருவித தடையாக அமைந்திருந்தன எனலாம்.
டியூனின் கதைக்களம், அராக்கிஸ் (Arrakis) எனும் பாலைவன கிரகத்தையும், அதில் கிடைக்கும் ஸ்பைஸ் (Spice) எனும் அரிய பொருளையும் மையமாகக் கொண்டது. வருங்காலத்தில் மனிதர்கள் விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப் பயன்படும் மூலப்பொருளாக இந்த ஸ்பைஸ் சித்திரிக்கப்படுகிறது. எனவே, அதையொட்டி நடக்கும் அரசியலை மையமாக வைத்து 'டியூன்' கதை நகர்கிறது. மொத்தம் ஆறு பாகங்களைக் கொண்டது 'டியூன்' தொடர். ஆனால், அதன் முதல் பாகமே ஒரு முழுமை பெற்ற கதையாக இயங்கும் அம்சங்களைக் கொண்டிருந்ததால், அந்தத் தொடரில் அதிகம் பேசப்பட்டது முதல் பாகம் மட்டும்தான்.
இந்த நாவலை எழுதிய ஃபிராங்க் ஹெர்பெர்ட் ஒரு தேர்ந்த சூழலியல் ஆர்வலர். எனவே, இதில் வரும் அராக்கிஸ், கதையின் பின்னணியாக மட்டுமல்லாமல் அது ஒரு முழு சூழலியல் செயல்பாடுகள் கொண்டு இயங்கும் கிரகமாகவும் உள்ளது. பருவநிலை மாற்றங்கள், அங்கு வசிக்கும் பழங்குடிகள், விலங்குகள் மற்றும் மணல்வெளியில் நீந்தும் ராட்சச மண்புழு என இந்தக் கிரகமும், அதன் சூழலும், கதையின் போக்கு, அதன் மாந்தர்கள் மற்றும் அவர்களுக்கிடையேயான அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கும். இவற்றில் எதை நீக்கினாலும் கதையின் போக்கு பாதிக்கப்படும் என்பதால்தான், இந்தக் கதையை அதன் அத்தனை நுட்பங்களோடும் திரைக்குக் கொண்டுவருவது எளிதில் சாத்தியப்படவில்லை.
இன்றளவும் டியூனின் தாக்கத்தைப் பல படங்களில் காணலாம் - 'அவதார்' படத்தின் மூலக்கதை, மனிதர்கள் வேறு கிரகத்திற்குச் சென்று அங்குள்ள வளங்களைப் பறித்துக்கொள்ள முயலும்போது, கதாநாயகன் அந்தக் கிரகவாசிகளுடன் இணைந்து மனிதர்களை அங்கிருந்து விரட்டுகிறான். இதற்கு இயற்கை அவனுக்கு உதவுகிறது. இதுதான் 'டியூன்' பாகம் ஒன்றின் மேலோட்டமான கதைச்சுருக்கமும்!
இவ்வளவு ஏன், ஹாலிவுட்டின் மிகச் சிறந்த சயின்ஸ் பிக்ஷன் படைப்பாகக் கொண்டாடப்படும் `ஸ்டார் வார்ஸ்' முதன் முதலில் வெளியானபோது பலரும் அதை உருவாக்கிய ஜார்ஜ் லூக்கஸ் `டியூன்' கதையால் ஈர்க்கப்பட்டே அந்த உலகைப் படைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுபோல, பல Sci-fi படங்களில் டியூனின் தாக்கத்தை இப்போதும் பார்க்க முடியும்.
டியூனின் ஒவ்வொரு அத்தியாயமும் எதிர்காலத்தில் எழுதப்பட்ட (கதை நடக்கும் அந்த உலகின்) ஒரு சரித்திர நூலின் வாசகத்துடன் துவங்கும். இது எல்லா முடிவுகளும், செயல்களும் கதையில் தரப்போகும் விளைவுகளை அழுத்தமாக உணர்த்தும். இப்படி இந்தக் கதைக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட எதிர்காலம் இருப்பதாகத் தெரிந்தாலும், அந்த முடிவுக்கு இட்டுச்செல்லும் போக்கு மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக, Sci-fi வகை கதைகளில் விண்வெளிப் பயணம், நவீன ஆயுதங்கள், வேற்றுக்கிரக வாசிகள், விலங்குகள் போன்ற அம்சங்கள் இடம்பெறும். இவற்றை `டியூன்' கையாளும் விதம் தனித்துவமானது. டியூனில் அதிநவீன கணினிகள், லேசர் ரக துப்பாகிச் சண்டைகள் எல்லாம் கிடையாது.
போர்களில் கத்தியை வைத்துத்தான் சண்டையிடுவர், சில மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து மனித கணினிகளாகவும், மந்திரவாதிகளாகவும் இருப்பர். இவை பல ஆயிரம் ஆண்டுகள் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்கு ஒரு மத்திய காலத்தின் சாயலைக் கொடுக்கும். இப்படியான கதையம்சங்களைக் கொண்டு டியூன் சிருஷ்டிக்கும் உலகும், அதனுள் நடக்கும் சம்பவங்களும் இணையும் விதம்தான் இன்றும் டியூனை Sci-fi-ன் G.O.A.T ஆக வைத்துள்ளது.
1984-ல் இயக்குநர் டேவிட் லின்ச் (David Lynch) இயக்கத்தில் 'டியூன்' படமாக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. டியூன், ஓர் இயங்கிக் கொண்டிருக்கும் உலகம், எனவே அதன் அம்சங்களையும் சூழலையும் முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியதின் விளைவுதான் லிஞ்ச்சின் டியூன் தோல்வியாக முடிந்ததற்குக் காரணம். அதே சமயம் பரந்து விரிந்த அதன் கதை பரப்புக்கு ஏற்றவாறு 2000-ம் ஆண்டு இது ஒரு டிவி தொடராகவும் உருவாக்கப்பட்டது. நாவலின் பெரும்பாலான அம்சங்களை அது அப்படியே கொண்டிருந்ததால் 'நேர்மையான தழுவல்' எனப் பாராட்டப்பட்டது.
டியூனின் தற்போதைய ரீபூட் (2021), Denis Villeneuve (டெனிஸ் வில்லெநெவ்) இயக்கத்தில் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, 2021-ல் முதல் பாகம் வெளியானது. இது டியூன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு புது உலகைக் காணும் அனுபவத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தின் காட்சியமைப்பும் இசைக்கோர்ப்பும் டியூனை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் அமைந்திருந்தது. கதையின் அனைத்து அம்சங்களையும் புரியவைக்கக் காட்சிகளைத் திணிக்காமல், அவற்றைக் கதையுடன் கோர்வையாகக் காட்சிப்படுத்தியிருந்தார் டெனிஸ். அதன் விளைவு, டியூன் திரைப்படம், 'அவதார்' படங்களுக்கு நிகரான ஒரு திரையரங்க அனுபவத்தைக் கொடுத்தது.
`Dune: Part Two' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெளியாக உள்ளது. பல நாவல்கள் வெற்றிகரமாகத் திரைக்கு வந்திருந்தாலும் Star Wars, Terminator, Blade Runner, Star Trek போன்ற கதைகள் உள்ள Sci-fi வெளியில், `டியூன்' ஒரு துருவ நட்சத்திரம் என்பது மட்டும் நிச்சயம்!
from விகடன்
Comments