`48 வருஷம் கழிச்சு என் கனவு நிறைவேறியிருக்கு!' - 16 வயதினிலே பட டாக்டர் சத்தியஜித்

கன்னடத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் புல்லட். நடிகர் தர்ம கீர்த்திராஜ் நடிப்பில் எமோஷனல் மற்றும் த்ரில்லர் சப்ஜெக்டாக வந்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சத்தியஜித்.

சில தினங்களுக்கு முன், இந்தப் படத்தின் போஸ்டர்கள் பெங்களூரு வீதிகளில் தென்பட, அதில் எங்கேயோ பார்த்த ஒரு முகம். உற்றுப் பார்த்தால், அட.. நம்முடைய `16 வயதினிலே' வெர்ட்னரி டாக்டர். 'புல்லட்' படத்தை இயக்கியிருப்பதுடன் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கும் சத்தியஜித், நம்ம 'மைல்ல்ல்' டாக்டரேதான்.

பெங்களூருவில் வசித்து வரும் சத்தியஜித்தை மொபைலில் பிடித்தோம்.

''சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல டி.எஃப்.டி படிச்சது 1976. கேமரா, இயக்கம்னு சினிமாவின் டெக்னிகல் ஏரியாதான் முதல் வருஷ சிலபஸ். ஆக்டிங் ரெண்டாவது வருஷம்.படிச்சு முடிச்சு கோல்டு மெடல் வாங்கின என்னுடைய போட்டோ பேப்பர்ல வந்துச்சு. அம்மன் கிரியேஷன்ஸ் ஆபிஸ்ல அதைப் பார்த்துட்டு, போட்டோகிராபர் லெட்சுமிகாந்தன் மூலமா என்னைக் கூப்பிட்டாங்க. எனக்கும் லெட்சுமிகாந்தனுக்கும் ஆல்ரெடி பழக்கம். அவர் என்னுடைய ரூமுக்கு வந்து, ‘சீக்கிரம் கிளம்பு ஆடிஷன் இருக்கு'னு சொல்லிக் கூப்பிட்டுட்டுப் போனார்.

அங்க பாரதிராஜா என்னைப் பார்த்துட்டு, 'நான் நினைச்ச டாக்டர் இவனேதான்பா' எனச்சொல்ல, அப்படித்தான் அந்தப் பட வாய்ப்பு வந்தது.

பிறகு கர்நாடகாவுல ஷூட்டிங். ரஜினி, கமல், ஶ்ரீதேவின்னு எல்லாருடைய அறிமுகமும் கிடைச்சு, அந்தப் படத்துல என் கேரக்டரும் ரீச் ஆகி, அந்தவொரு கேரக்டர் காலங்களைக் கடந்து இப்ப வரைக்கும் என்னை அடையாளம் கண்டு கொள்ள உதவறதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பெரிய ஆச்சரியம்தான்.

அந்தப் படத்துக்குப் பிறகு தமிழ்ல்ல சில படங்கள் பண்ணினேன். ஆனா அந்த டாக்டர் கேரக்டர் அளவுக்கு எதுவும் அமையலை. எனக்கு அதுபத்தி வருத்தமும் இல்லை. ஏன்னா ஃபிலிம் இன்ஸ்ட்யூட்ல படிக்கிறப்ப நடிப்பைத் தாண்டி படம் டைரக்ட் பண்ணனும்கிற எண்ணம்தான் அதிகமா இருந்தது. எதிர்பாராத விதமா '16 வயதினிலே' அமைஞ்சதால் நான் நடிகனாகிட்டேன்.

தொடர்ந்து நடிச்சிட்டே இருந்ததால மனசுக்குள் பூட்டி வச்சிருந்த கதைகளை வெளிக் கொண்டு வரமுடியாதபடி ஓடிட்டே இருந்ததுல காலமும் ஓடிடுச்சு.

குடும்பத்துடன் சத்தியஜித்

ஒருகட்டத்துல சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊரான இங்கேயே வந்து செட்டில் ஆகிட்டேன். சினிமா எனக்கு போதுமான வெளிச்சம் தராட்டியும் அழகான குடும்பம். பொண்ணு ஒண்ணு, பையன் ஒண்ணுன்னு அன்பான ரெண்டு குழந்தைகள். தனிப்பட்ட வாழ்க்கை எனக்குத் திருப்திகரமா அமைஞ்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். சிலர் இன்னைக்கும் கேக்குறாங்க, பாரதிராஜா டைரக்‌ஷன்ல ரஜினி கமல், ஶ்ரீதேவி கூட நடிச்சுட்டு காணாமப் போயிட்டீங்களேன்னு. என்னை விட அவங்க எனக்காக ரொம்பவே வருத்தப்படறாங்க. ஆனா எனக்கு பெருசா வருத்தமில்ல. நமக்கு மேல இருக்கிறவன்தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறான்னு நம்பறவன் நான்.

மகளைக்  கட்டிக்கொடுத்துட்டேன். மகனுக்குச் சீக்கிரமே கல்யாணம் நடக்க இருக்குது. இன்னும் என்ன வேணும் வாழ்க்கையிலனு நினைச்சப்பதான் பழைய டைரக்‌ஷன் கனவும் மனசக்குள் பதுங்கிக் கிடந்த கதையும் வெளியே எட்டிப்பார்க்க, அதையும்தான் பார்த்துடுவோமே எனக்  கிளம்பிட்டேன்.

படத்தை இயக்கி, முக்கியக் கேரக்டரில் நடிச்சிருப்பதுடன் தயாரிப்புலயுமே என்னுடைய பங்கு இருக்கு. படம் நல்லா வந்திருக்கு. பெங்களூரு, கோவாவுல ஷூட் போயிட்டு வந்தோம். அருமையான கதை. ஹீரோ தர்ம கீர்த்திராஜ், ஹீரோயின் பாலிவுட்ல இருந்து வந்திருக்காங்க. ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடந்துகிட்டிருக்கு.

தமிழ் உள்ளிட்ட மத்த மொழிகள்லயும் கொண்டு வர்ற ஐடியா இருக்கு. படம் வெளியாகுறப்போ என் 48 வருஷக் கனவு நனவாகியிருக்கும்'' என உணர்ச்சி பொங்கப் பேசி முடித்தவரிடம், மீண்டும் தமிழ் சினிமா பக்கம் உங்களை பார்க்கலாமா எனக் கேட்டோம்.

'நான் ஆர்வமாகவே இருக்கேன். டைரக்டர்கள் யாராச்சும் கூப்பிட்டாங்கன்னா பண்ண வேண்டிதானே' என்கிறார்.



from விகடன்

Comments