Madraskaaran: "ஷேன் நிகம் மெட்ராஸில் இருக்கிற வெளியூர்காரர்!" - இயக்குநர் வாலி மோகன் தாஸ்

"என்னோட முதல் படமான 'ரங்கோலி' ரிலீஸானதுக்கு அப்பறம் ஒரு தமிழ், தெலுங்கு பை லிங்குவல் படத்தை ஆரம்பிச்சிட்டேன். பிரகாஷ் ராஜ், நவீன் சந்திரா, டிஜே அருணாச்சலம், வாணி போஜன், அமிர்தா ஐயர், மதுபாலானு பலர் நடிச்சிருக்காங்க.

அது அடுத்த சில மாதங்களில் ரிலீஸாகிடும். இப்போ என்னோட மூணாவது படமான 'மெட்ராஸ்காரன்' படத்தை பிப்ரவரியில் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணி மே மாதத்திற்குள் படத்தை முடிச்சிடுவோம்..." - பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் வாலி மோகன் தாஸ். இவரது 'மெட்ராஸ்காரன்' படத்தின் மூலம் மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த இளம் நடிகர் ஷேன் நிகம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.  இயக்குநர் வாலி மோகன் தாஸிடம் படம் குறித்துப் பேசினோம்.

ஷேன் நிகமை தமிழில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவு பற்றி...

படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ்

" 'மெட்ராஸ்காரன்' கதைக்கு ஒரு புதுமுகம் தான் தேவைப்பட்டுச்சு. 'காதல்' படத்துக்கு பரத் கிடைச்ச மாதிரியும், 'வழக்கு எண் 18/9' படத்துக்கு ஶ்ரீ கிடைச்ச மாதிரியும் இந்தக் கதைக்கு ஃப்ரஷ்ஷான ஆளாக இருக்கணும்னு தோணுச்சு. ஆனால், அப்படி பண்ணும் போது வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும். ஏன்னா, நான் ஏற்கெனவே புதுமுகங்களை வச்சு எடுத்த 'ரங்கோலி' படத்தின் வியாபாரத்தில் ரொம்பவே சிரமப்பட்டோம். அதுனால அதையும் மனசுல வச்சு முடிவு எடுக்கணும்னு நினைச்சேன். இந்தப் படத்தோட கதையை நான் முன்னாடியே எழுதிட்டேன். அப்போ இந்தக் கதையை எழுதும்போதே ஷேன் நிகமை மைன்ட்ல வச்சுத்தான் எழுதினேன். ஷேன் நிகமை அவரோட கரியர் ஆரம்பத்தில் இருந்து பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப எதார்த்தமாக நடிக்கக்கூடியவர். அதுனால அவரை மைன்ட்ல வச்சு எழுதுனேன். இப்போ 'மெட்ராஸ்காரன்' கதையை படமாக்கலாம்னு முடிவு பண்ண சமயம்தான் அவரோட 'RDX' படம் வெளியாகி நல்லா ஓடிட்டு இருந்துச்சு. நான் நினைச்ச மாதிரி இந்தக் கதைக்கு ஏற்ற, தமிழுக்கு ஃப்ரஷ்ஷான முகமாகவும் இருந்தார். மலையாளத்தில் நல்ல படங்களைக் கொடுத்த நடிகரா இருக்கிறனால வியாபாரத்திற்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும்னு தோணுச்சு. அதனால அவரை ரீச் பண்ணி, கதையும் சொன்னேன். முழுக்கதையும் தமிழில் தான் சொன்னேன். கேட்டுட்டு உடனே ஓகே சொல்லல. மூணு வாரம் கழிச்சு மறுபடியும் கூப்பிட்டு கதை சொல்ல சொன்னார். அந்த மொமன்ட்ல இருந்து இந்தப் படத்தை அவர் படமா நினைக்க ஆரம்பிச்சிட்டார். அவரே நிறைய ஐடியா கொடுக்க ஆரம்பிச்சிட்டார். இப்போ வரைக்கும் இந்தப்படம் பண்றதில் ரொம்ப ஆர்வமாக இருக்கார்."

அவருக்கு தமிழில் இது முதல் என்ன மாதிரியான எதிர்பார்ப்பில் இருக்கிறார்?

ஷேன் நிகம், இயக்குநர் வாலி மோகன் தாஸ்

"இது நம்மளோட முதல் தமிழ்ப்படம். நமக்கு இது சரியா வருமா'ங்கிற யோசனை எல்லாம் அவருக்கு இருக்கிற மாதிரியே தெரியல. நாங்க தமிழில் தான் பேசிப்போம். அவருக்கு ரொம்ப நல்லாவே தமிழ் தெரிஞ்சிருக்கு. படத்தோட டைட்டில் 'மெட்ராஸ்காரன்'னு இருக்கிறனால இதுல அவர் மெட்ராஸ் ஸ்லாங் பேசுற மாதிரி இருக்கும்னு நினைச்சுக்காதீங்க. சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவங்க எல்லாரும் லீவுக்கு அவங்கவங்க ஊருக்கு போகும் போதும் அவங்களை 'மெட்ராஸ்காரன்'னு சொல்வதுண்டு. அந்த மாதிரி சென்னைக்கு வந்த ஊர்க்கார பையன் தான் ஷேன் நிகாம். இந்தக் கதை சென்னையில 10 சதவிகிதம் தான் நடக்கும். மத்தப்படி மதுரை, புதுக்கோட்டையில் நடக்குற கதை. அதுனால அவர் நார்மல் தமிழ் பேசுனாலே அது கதைக்கு சரியாக இருக்கும்."

படத்தில் கலையரசனும் இருக்காரே..?

தமிழ், தெலுங்கு பை லிங்குவல் படக்குழு

"ஷேன் நிகம், கலையரசன் ரெண்டு பேருமே கதையின் நாயகர்கள்தான். 'இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற ஒரு சின்ன ஈகோ, இவங்க வாழ்க்கையை எங்க கொண்டு போய் நிறுத்துது'ங்கிறது தான் படத்தோட ஒன் லைன். இதுல இவரு நல்லவர்; இவரு கெட்டவர்னு பிரிக்க முடியாது. ரெண்டு பேருமே நல்லவங்க; ரெண்டு பேருமே கெட்டவங்க. இவங்களோட உலகத்துக்குள்ள தான் இந்தப் படம் பயணிக்கும்."



from விகடன்

Comments