Blue Star: "சமுத்திரக்கனியை சந்தித்துப் பேச வேண்டும்!" - 'ப்ளூ ஸ்டார்' புல்லட் பாபு பகிர்ந்த ஆசை

அரசியல் பேசும் கிரிக்கெட் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது, 'ப்ளூ ஸ்டார்'.

எதார்த்தமாக படைக்கப்பட்ட ரஞ்சித், ஆனந்தி, ராஜேஷ், சாம் என 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் பல கதாபாத்திரங்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சாமின் கவிதைகளுக்கு திரையரங்கத்தில் சிரிப்பும், விசில் சத்தமும் பறக்கிறது. இப்படியான முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறிய கதாபாத்திரங்களும் மாஸ் எண்ட்ரி கொடுத்து வந்திறங்கி மக்கள் மனதில் பதிவாகியிருக்கிறது. கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் குறித்தும் விளையாட்டிற்கு தேவையான நேர்மை குறித்தும் நய்யாண்டிதனமாக 'புல்லட் பாபு' என்கிற கதாபாத்திரம் எடுத்துரைக்கும். அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் சஜு நவோதயா. அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

மலையாளம் கலந்த தமிழில் உரையாட தொடங்கியவர், "முதலில் நான் நடித்திருந்த 'புல்லட் பாபு' கதாபாத்திரத்திற்கு யோகி பாபுதான் நடிக்கவிருந்தார். அதன் பிறகு அவரின் டேட் பிரச்னைகளால் அவரால் 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடிக்க முடியவில்லை. பிறகு, என்னை நடிப்பதற்கு கேட்டார்கள். இப்படிதான் ப்ளூ ஸ்டார் படத்திற்குள் நான் வந்தேன். நான் இங்கு மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அப்படங்களில் எதிலும் பின்னணி இசை வைத்து இப்படியான மாஸ் எண்ட்ரி எனக்கு அமையவில்லை. 'ப்ளூ ஸ்டார்' படத்தில்தான் எனக்கு அமைந்திருக்கிறது. அதற்கு இப்படியான வரவேற்பு, கொண்டாட்டங்கள் கிடைப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். மலையாளத்தில் என்னுடைய படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸின் வரவேற்பு கிடைத்துவிடும். நான் டெலிவிஷன் துறையிலிருந்து சினிமா பக்கம் வந்தவன்.

Bullet babu with his team

யூத் ஆடியன்ஸை காட்டிலும் எனக்கு ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவு அதிகளவில் கிடைத்துவிடும். அதனாலேயே என்னுடைய கதாபாத்திரத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடுவார்கள். இம்முறை தமிழ் மக்களின் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. நேற்று நான் இங்கு கேரளாவில் படத்தைப் பார்த்தேன். இங்கு படம் பார்த்த தமிழ் ஆடியன்ஸ் பலரும் என்னை அடையாளம் கண்டு வாழ்த்தினார்கள். இதுமட்டுமின்றி படம் பார்த்த பலரும் என்னை அழைத்து வாழ்த்தினார்கள். முதலில் இயக்குநர் ஜெயகுமார் 'இது ஒரு கிரிக்கெட் படம். நீங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் ' என்பதை கூறிவிட்டார். நானும் 'இங்கு கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். எனக்கென ஒரு டீம் இங்கிருக்கிறது' என கூறினேன். நான் படத்துக்காக வந்து கிரிக்கெட் விளையாடிய பிறகுதான் நான் ஏற்கெனவே கிரிக்கெட் அதிகமாக விளையாடுபவன் என்பதை இயக்குநர் தெரிந்துகொண்டார். ஸ்பாட்டில் அசோக் செல்வன், சாந்தனு எனப் பலரும் என்னை சப்போர்ட் செய்தார்கள். வசனங்கள் பேசும் சமயத்தில் மட்டும் சில மாற்றங்களை இயக்குநர் என்னிடம் சொன்னார்.

அவர் என் சகோதரரைப் போன்றவர். படக்குழுவினர் பலரும் என்னிடம் ஜாலியாக பழகினார்கள். நான் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் கம்ஃபோர்டாக இருந்தேன். படத்தில் நான் லாராவுடன் விளையாடப் போகிறேன் என ஒரு வசனம் பேசியிருப்பேன். படத்தில் நான் பேசிய வசனங்களுக்குப் பின்னால் இருக்கிற அரசியலையை இயக்குநர் எனக்கு விவரித்துவிட்டார். இதனை 'ஹுயூமராக கொண்டு செல்ல வேண்டாம் சீரியஸாக பேசுங்கள்' எனவும் கூறிவிட்டார்." எனப் பேசி முடித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. படத்தில் புல்லட் பாபு கதாபாத்திரமும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடப் போவதாக ஒரு வசனத்தை பேசி விளையாட்டு அரசியலை நய்யாண்டி அடித்திருப்பார். இதனை தொடர்புடுத்தி அவரிடம் கேட்கையில் சிரித்துக் கொண்டே, " எனக்கு வெஸ்ட் இண்டீஸில் எப்போதும் லாராதான் ஃபேவரைட். அதுக்குப் பிறகு கிறிஸ் கெய்ல் பிடிக்கும்." என்றார்.

Saju Navodaya

மேலும், "மலையாளப் படங்களில் நடிக்கும் போது எனது வசனங்களை நானே கவனித்து பேசிவிடுவேன். ஆனால், தமிழில் எனக்கு பின்னிருந்து ப்ராம்டிங் செய்தார்கள். சினிமாவில் உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் ஆதரவு மிகவும் முக்கியம். அது எனக்கு இந்த படத்தில் முழுமையாக கிடைத்தது. எனக்கு தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினிகாந்த் என பலரையும் பிடிக்கும். நான் அனைத்து தமிழ் படங்களையும் பார்ப்பேன். குறிப்பாக எனக்கு சமுத்திரக்கனியை ரொம்பப் பிடிக்கும். எனக்கு அவரை நேரில் பார்த்து பேச வேண்டும் என ஆசை இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரான பா. இரஞ்சித்தின் படங்களும் எனக்கு பிடிக்கும். அவருடைய கபாலி திரைப்படத்தில் தொடங்கி அனைத்து திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்." என்றார்.

தன்னுடைய மலையாளப் சினிமா பயணம் குறித்து பேசத் தொடங்கியவர், "நான் மலையாளத்தில் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். அதன் பிறகு மம்முட்டி, மோகன் லால், ஜெயராம் என பலருடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படத்திற்கு கிடைத்த மாதிரி ஒரு அறிமுகக் காட்சி எனக்கு வேறு எந்த படங்களிலும் கிடைக்கவில்லை." என்றவர், "மம்முட்டி எனக்கு உதவியாக இருப்பார். படப்பிடிப்பு தளங்களில் வசனங்களை பேசும் வடிவத்தை கற்றுக் கொடுப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்றைய காட்சிக்கான வசனங்களை மேம்படுத்துவார். டப்பிங்கிலும் எனக்கு உதவியாக இருப்பார். இப்படியான ஏற்ற இறக்கத்துடன்தான் பேச வேண்டும் என கற்றுக் கொடுப்பார். அவருடன் இருப்பது எப்போதும் ஜாலிதான்." என்றவர் மலையாள பிக் பாஸின் இரண்டாவது சீசனிலும் பங்கேற்றிருந்தார்.

Saju Navodaya

அது தொடர்பாக பேசுகையில், "நாம் பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் பிக் பாஸ் முதலாவது சீசனின் ஃபைனலில் பெர்ஃபார்ம் செய்திருந்தேன். இதன் பிறகுதான் இரண்டாவது சீசனில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான் அதற்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில்லை. ஃபிரஷாகதான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றேன். அதுவும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது." எனப் பேசி முடித்தவரிடம் அடுத்த படங்கள் பற்றிக் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், " நான் இப்போது நடிகர் தயான் ஶ்ரீனிவாசன் படத்தில் நடித்து வருகிறேன். அதுதான் என்னுடைய அடுத்த ரிலீஸ். தமிழில் இப்போது வரை வேறு எந்த படங்களிலும் நான் கமிட்டாகவில்லை." எனப் பேசி படக்குழுவினருக்கு நன்றி கூறி விடைபெற்றார்.



from விகடன்

Comments