திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்திருக்கிறது நெக்னா மலைக்கிராமம். நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவைப்போல் இருக்கிற நெக்னாவுக்குச் செல்ல வேண்டுமானால், மலையடிவாரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபயணமாகத்தான் செல்ல வேண்டும்.
நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்களை டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலையில் இருக்கின்றனர் நெக்னா கிராம மக்கள். இந்த நிலையில், நெக்னா மலைக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு சமீபத்தில் இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அவர் குடும்பத்தினர் தீப்பந்த வெளிச்சத்தில் டோலியில் அவரைப் படுக்க வைத்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் பத்திரிகைகளில் செய்தியாகி, பலரையும் கவலைக்குள்ளாக்கியது. பிரபல சின்னத்திரை நடிகர் பாலாவையும் இந்தச் செய்தி சென்றடைந்தது. இந்த நிலையில், புதிதாக ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்து நெக்னா மலைக்கிராம மக்கள் நீண்ட காலமாகப் படும் துயரத்தை துடைத்தெறிந்திருக்கிறார் பாலா. ஆம்புலன்ஸுடன் நேற்று நெக்னாவுக்கே நேரில் சென்ற பாலாவுக்கு மலைக்கிராம மக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
ஊர் மக்களிடம் ஆம்புலன்ஸை ஒப்படைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய பாலா, ‘‘இதுக்கு முன்னாடி நாலு ஆம்புலன்ஸ் கொடுத்திருக்கிறோம். ஆனாலும், இந்த ஐஞ்சாவது ஆம்புலன்ஸ்தான் ரொம்பவே ஸ்பெஷல். ராஜேஸ்வரின்னு ஒரு அக்கா பிரசவ வலியில துடிச்சதாகவும், தீப்பந்தம் கொளுத்தி அந்த வெளிச்சத்துலயே மலையில இருந்து கீழே கொண்டு வந்ததாகவும் செய்திகளில் படிச்சேன். விசாரிச்சிப் பார்க்கிறப்போ, வாகன வசதி இல்லாத மலைக்கிராமம்னு தெரியவந்துச்சு.
இதுக்கு முன்னாடியும் நிறைய பேரை இந்த மாதிரி தூக்கிட்டு வரும்போது, மலைப் பாதையிலயே குழந்தை பிறந்திருக்காம். இரவு நேரத்துல தூக்கிட்டு வரும்போது, வழியில பாம்புக்கூட கடிச்சிடும்னு கேள்விப்பட்டேன். அதான், ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கேன். இனிமே, நம்ம வண்டி இருக்கு. தூக்கிட்டு வர வேண்டிய அவசியமும் இல்ல. யாரும் கஷ்டப்படவும் வேணாம். இந்த மலை ரோட்டுல ஜீப், ஆம்புலன்ஸ் மாதிரியான வண்டிங்க மட்டும்தான் போக முடியுது. என்கிட்ட காசு மட்டும் இருந்துச்சினா, ரோட்டையும் இப்பவே போட்டுக் கொடுத்திடுவேன். ஆனா, என்கிட்ட அந்த அளவுக்குக் காசு இல்ல. என்ன இருந்தாலும், இன்னைக்கு எனக்கு மிகவும் திருப்தியான நாள்’’ என்றார் இனிமையான புன்முறுவலோடு!
from விகடன்
Comments