Bigg Boss Tamil: டைட்டில் வின்னர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? பிக் பாஸ் சீசன் வாரியாக ஒரு பார்வை!
பிக் பாஸ் சீசன் 7 நடந்து முடிந்திருக்கிறது. வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து டைட்டிலை வென்ற முதல் போட்டியாளர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் அர்ச்சனா.
ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் முடிந்த பிறகு அதன் டைட்டில் வின்னர்கள் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருப்பார்கள். இதுவரை பிக் பாஸில் டைட்டில் அடித்தவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள், என்னென்ன புராஜெக்ட்களைக் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
ஆரவ்:
முதலாவது தமிழ் பிக் பாஸ் சீசனின் டைட்டிலை வென்றவர் ஆரவ். பிக் பாஸ் என்ட்ரிக்கு முன்பே சில திரைப்படங்களில் ஆரவ் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரவிற்குப் பெரிய அளவிலான வரவேற்பை ஏற்படுத்தித் தந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கதாநாயகனாக 'மார்க்கெட் ராஜா' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான 'கலகத் தலைவன்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த இப்படத்திற்குப் பிறகு தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி' திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்து வரும் ஆரவ், சமீபத்தில் அஜித்துடன் அஜர்பைஜானில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ரித்விகா:
'மெட்ராஸ்', 'கபாலி' ஆகிய திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பெரிதும் பரிச்சயமானவர் ரித்விகா. பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர், அதன் பிறகு 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு', ' சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகிய திரைப்படங்களிலும் 'நவரசா' ஆந்தாலஜியிலும் நடித்திருந்தார். கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கையை மையப்படுத்திய '800' திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் வழக்கறிஞர் உடையை அணிந்து அவரின் புதிய படத்திற்கான கெட்டப் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
முகேன் ராவ்:
சுயாதீனப் பாடகராகதான் முதலில் பலருக்கும் அறிமுகமானார் முகேன் ராவ். சில மியூசிக் வீடியோக்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்று டைட்டில் அடித்த முகேன் ராவ், சூரியுடன் இணைந்து 'வேலன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 2021-ம் ஆண்டு வெளியானது. இதன் பிறகு ஹன்சிகாவுடன் 'மை3' என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். தற்போது 'வெற்றி', 'மதில் மேல் காதல்', 'காதல் என்பது சாபமா', 'ஜின்' ஆகிய புராஜெக்ட்களை கைவசம் வைத்திருக்கிறார்.
ஆரி அர்ஜுனன்:
'நெடுஞ்சாலை', 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' ஆகிய திரைப்படங்களின் மூலம் பரிச்சயமான ஆரி, பிக் பாஸ் நான்காவது சீசனின் டைட்டிலை வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரின் செயல்கள் பெரிதளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. பிக் பாஸுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமன்றி 'அலேகா', 'பகவான்' ஆகிய திரைப்படங்களில் இவர் நடிப்பதாக அறிவிப்பு முன்பே வெளியாகியிருந்தது. சேரனின் கம்பேக் டைரக்ஷனான 'சேரனின் ஜர்னி' வெப் சீரிஸிலும் ஆரி சமீபத்தில் நடித்திருந்தார்.
ராஜு:
'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' ஆகிய சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் கவனம் பெற்ற ராஜு, நடிகர் கவினின் 'நட்புனா என்னனு தெரியுமா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் டைட்டில் வென்றவர் அதன் பிறகு சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் நடித்திருந்தார். பிரமாண்டமான முறையில் நிகழும் இசை வெளியீட்டு விழாக்களில் தொகுப்பாளராக இவரை இப்போது பார்க்க முடிகிறது. சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உதவி இயக்குநர் வேண்டி ஒரு பதிவிட்டிருந்தார்.
அசீம்:
'மாயா', 'பிரியமானவள்', 'பூவே உனக்காக' ஆகிய சீரியல்கள் மூலம் பெரிதும் பிரபலமடைந்த அசீம் 6வது பிக் பாஸ் சீசனின் டைட்டிலை வென்றிருந்தார். தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் அதே வடிவிலான காமெடி ஜானர் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்திற்கான பூஜையும் போட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
அர்ச்சனா:
தொகுப்பாளராக தனது கரியரைத் தொடங்கிய அர்ச்சனா, அதன் பிறகு ராஜா - ராணி 2 சீரியலில் நடித்தார். சின்னத்திரையில் இவருக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பிறகு 7வது சீசன் பிக் பாஸில் வைல்டு கார்டு போட்டியாளராகப் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருக்கிறார். தற்போது இவர் நடித்திருக்கிற 'டிமான்ட்டி காலனி - 2' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
இதுமட்டுமன்றி ரன்னர் அப்பாக வந்தவர்கள், முன்னறே வெளியேறியவர்கள் எனப் பலரும் தற்போது சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். சான்றாக, ஹரிஷ் கல்யாண், சாண்டி, கவின் என்று இந்த லிஸ்ட் நீள்கிறது.
from விகடன்
Comments