விஜயகாந்த் - தமிழ் சினிமா, அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத பெயர். நெடிய பயணம் அது. நடிகர், கட்சித் தலைவர், நடிகர் சங்கத் தலைவர் போன்ற பல முகங்கள் கொண்டவர். ஆச்சர்யமாக எல்லோராலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார்.
சினிமாவிற்கு வந்ததெல்லாம் திட்டமிட்டதல்ல. அப்பாவிற்கு அடங்கிய பிள்ளையாக ரைஸ் மில்லை கவனித்துக் கொண்டிருந்தார். மீதமிருந்த நேரம் எல்லாம் நண்பர் மன்சூரின் பட விநியோக அலுவலகத்தில் பேசிக் கொண்டிருப்பார். அங்கே தான் கிளம்பியது சினிமா ஆசை. கட்டுக்கோப்பான உடம்பு, கண்ணுக்குள் வந்து சரியும் சிகை, எங்க வீட்டுப் பிள்ளையை 70 தடவை பார்த்து கற்ற ஆர்வம், அருகில் இருந்த நண்பர்கள் தூண்டிக்கொண்டே இருக்க பொறுக்க முடியாமல் மன்சூரிடம் சினிமா வாய்ப்பு கேட்டார் விஜயராஜ். சென்னைக்கு வந்த மன்சூர் இயக்குநர் எம்.ஏ.காஜாவிடம் விஜியை அறிமுகப்படுத்தி வந்த படம் தான் 'இனிக்கும் இளமை'. எதிர்மறை கதாநாயகனாகத் தோன்றி கதாநாயகனாக வெற்றிக் கொடி கட்டியதெல்லாம் வரலாறு.
முதல் பட வாய்ப்புக்குப் பிறகு அடுத்தடுத்து வாய்ப்பெல்லாம் குவிந்துவிடவில்லை. உடன் நண்பன் இப்ராஹிமோடு சேர்ந்து கொண்டு பட கம்பெனிகளுக்கு ஏறி இறங்க வாய்ப்புகள் வராமல் பயணம் நீண்டு கொண்டேயிருக்கிறது. அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைக்க `தூரத்து இடிமுழக்கத்தில்' அவர் மீதான பார்வை கூடுகிறது. தொடக்கத்திலிருந்தே ஆக்சனில் கவனம் சேர்க்கிறார். அழகாய் சிவப்பாய் சாக்லேட் பாய் இமேஜில் ஹீரோக்கள் வந்து கொண்டிருக்கும்போது கருப்பாக நம் அண்டை வீட்டார் மாதிரி வந்து சேர்ந்தார் விஜயகாந்த். ரஜினி எம்ஜிஆரின் பாணியை பின்பற்றிப் போக இன்னும் காரசாரமாய் மக்களின் பிரச்சனை பேசினார் விஜயகாந்த். ஆக்சன், மக்கள் பிரச்சனைகளை எடுத்து வைத்து பேசியதில் அவரை அரசியலுக்கும் இழுத்து வர ஆசைப்பட்டார்கள் ரசிகர்கள். நண்பன் இப்ராஹிம் அடியொற்றி வர கருத்து சொல்ல வேண்டிய படங்களை அவரை வைத்தே தயாரித்தும் கொடுக்க உயரப் பறந்தது விஜயகாந்தின் கொடி. ஆரம்பத்திலிருந்தே கருணாநிதியின் பாசத்திற்கு உட்பட்ட தம்பியாக பழகி தங்கப் பேனா பரிசளிக்கிற அளவுக்கு அன்பு காட்டியவர். அவர் ஆட்சிக்கே பிற்பாடு கண்டனம் எழுப்பி புறப்பட்டது எல்லாம் மற்றொரு வரலாறு. ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் அவ்வப்போது கொடுத்த மறைமுக சங்கடங்களை கண்டு அஞ்சாமல் நியாயம் என்று படுவதைத் தயக்கமின்றி வெளிப்படுத்தியவர்.
ஜெயலலிதாவை எச்சரிக்கை செய்யும் விதமாக சைகை காட்டியபோது ஊரே அதிர்ந்தது. கூட்டணி விவகாரத்தில் கறார் நாட்டினார். எதிர்க்கட்சித் தலைவராகவும் இடம் பிடித்தார். 'அஞ்சா நெஞ்சன்' என்று குறுகிய காலத்தில் அரசியலில் புகுந்து பத்து சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை தக்க வைத்ததால் அவரை ஆளாளுக்கு கூட்டணியில் இழுக்க பார்த்ததெல்லாம் அவ்வப்போது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. ஆளும் கட்சியோடு அனுசரித்துப் போகாமல் வழக்கம்போல் வேகம் காட்டியதில் ஜெ.வோடு கூட்டணி உடைந்தது. அவருடைய எம்எல்ஏக்களை இழுத்ததில் பலம் குறைந்தார். ஆனாலும், ஜெ.வின் அரசை எதிர்த்து நின்றதில் அவரே முதல் வரிசையில் இருந்தார்.
'களத்தில் கேப்டன்' எனும் விகடனின் விஜயகாந்த் மக்களை சந்திக்கும் தொடருக்காக அவரோடு ஒன்பது வாரம் பயணித்ததெல்லாம் பெரும் அனுபவம். அவரது நிஜமான சமூக நேசமும், ஜனத்திரள் பாசமும் அப்படியே கண்கூடாக தெரிந்தது. விவசாயத் தோழர்களோடு புழுதிப் புயலாக வயல் காடுகளில் வரிந்து கட்டி அவர் இறங்கியதில் பாசாங்கே இல்லை. காமிராவைத் தேடி அவர் அலையவே இல்லை. உச்சி வெயிலில், ரேஷன் கடை வரிசையில் கலந்து, மின்சாரம் மறந்த நெசவாளர் வீடுகளில் தங்கி சாலையோர மக்களோடு சாப்பிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் திரிந்து, மூத்த மகன் போல தாய்மார்களின் குடும்ப கதை பகிர்ந்து ஈழத் தமிழர் முகாம்களில் அங்கிருந்த மக்களின் கண்ணீரைத் துடைத்து, கதைத்து... இப்படி ஒவ்வொரு வாரமும் விஜயகாந்த் எடுத்த உண்மையான அக்கறையும் அதற்காக முன்னெடுத்த முழக்கங்களும் அவருக்குள் இருக்கும் களப்பணியாளரை கண்முன் நிறுத்தியது. எங்கு கூப்பிட்டாலும் ஆர்வமாக வந்தார். சாலைகள் போடாத ஊர்களுக்கும் நடந்தே வந்தார்.
விலைவாசி முதல் மின் பற்றாக்குறை வரை அந்தந்த வாரத்தில் முக்கியமான பிரச்சனைகளை மக்களோடு நின்று அலசியதும், அதற்காக அரசியல் அரங்கில் குரல் கொடுத்ததும் அன்றைய விகடனில் ஆரவாரமான செய்தி.
தெருவில் வந்து போராடும் துணிவும், இறங்கி உதவும் கனிவுமே விஜயகாந்தின் எதிர்காலத்துக்கான வழிகாட்டி விளக்குகளாக இருந்தது. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி விஜயகாந்தின் அதிரடி ஆளுமைக்கு பாராட்டு அதிகம். அவரே அரசியலில் யாரும் கணிக்க முடியாத பரம பதமாக இருந்தார். இறங்கினால் என்ன ஆகும்? என குழப்பமும் பயமுமாக பல பேர் பயந்து ஓடிய போது `எண்ணித் துணிக கருமம்' என இறங்கி அடித்ததுதான் விஜயகாந்தின் சக்ஸஸ் ஃபார்முலா.
பெரிய படிப்பு, பளிர் அழகு, மேதாவியான பேச்சுத்திறமை இப்படி எதுவுமே இல்லாத விஜயகாந்த் தமிழக அரசியலின் திசையை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்தது எப்படி? வெள்ளைக் காலரோடு ஏசி ரூம் அரசியல் நடத்தாமல் வேட்டியை மடித்துக் கட்டி வீதியில் இறங்கிய போராட்ட குணம் தான் அதற்கு ஒரே காரணம். எளிமையான வெளிப்படையான மனசும் திறந்த பேச்சும் அவரின் அடிப்படை வெற்றிக்கான அஸ்திரம்! ஈழ மக்களை நாங்கள் அவரோடு பார்க்க போகும்போது தன்னால் முடிந்த உதவியாக அரிசி மூட்டைகளோடு அவர் வந்து சேர்ந்தது தான் ஆச்சர்யம். 'நீங்க இங்கே அரசியல் பேச வேண்டாம் கோரிக்கைகளை மட்டும் சொல்லுங்க அரசின் கவனத்திற்கு கொண்டு போய் நல்லது செய்கிறேன்' என அறிவார்ந்த மரபுடன் அவர் பேசியது இன்று வரை நினைவில் இருக்கிறது. மறுநாளே அமைச்சர்கள் போய் பார்த்து மக்கள் குறை கேட்டார்கள். இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களுக்கு மிகவும் நன்மையாக அமைந்து விட்டது அந்த 'களத்தில் கேப்டன்'.
எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. தேர்தலில் கூட்டணியின் கணக்கு தவறாகி தோல்வி அடைய ஓயாத உழைப்பிலிருந்த விஜயகாந்த் நோயின் பிடியில் சிக்கினார். அப்போதே அதை தீவிரமாகக் கவனித்திருந்தால் இன்றைய நிலைமையை தவிர்த்தே இருக்கலாம் என்கிறார்கள். துபாய், சிங்கப்பூரில் பெற்ற ஆலோசனைகள் உடல் உபாதைகளை மட்டுப்படுத்தி மட்டுமே வைத்தது. முதுகு தண்டு வலு இழந்ததால் நிற்கவோ தொடர்ந்து பிடிமானம் இல்லாமல் அவரால் உட்கார முடியவில்லை. திரையுலகிலும், அரசியல் பயணமும் அவரின் இடைவிடாத உழைப்பும் ஒரு காரணம்.
எம்ஜிஆருக்கு அடுத்து அவர் திரையுலகில் ஒரு இடம் பெற்றிருந்தார். நடிகர் சங்க கடனடைப்பு எத்தனையோ தலைவர்கள் பதவியேற்றும் விஜயகாந்தின் தலைமையிலேயே முடிந்தது. அத்தனை பேரையும் மலேசியா வரைக்கும் அழைத்துக் கொண்டு போய் கலை விழா நடத்தி பெருந்தொகை சேர்த்து சச்சரவு இல்லாமல் கடன் அடைத்ததெல்லாம் இமாலய சாதனை. அரசியலில் அவருக்கு எதிரிகள் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் கூட அவரின் ஈகை குணத்தையும் நல்ல மனதையும் குறை சொல்ல முடிந்ததில்லை.
அவருடையவை ஜனரஞ்சகமான படங்கள்தான் பக்குவமான 10 படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனாலும் தமிழ் திரைப்படத்தளத்தில் அவர் போல் ஒருவரில்லை. அவரைப்போல் மக்களை இறங்கி வந்து அணைத்து கொண்டவர் வேறொருவர் கிடையாது. நிறைகுறைகளைத் தாண்டி விஜயகாந்த் மனிதம் நிறைந்த மனிதராக இருந்திருக்கிறார். ஒரு தடவை எங்களையும் கடந்து மக்களின் பிரியத்தில் சிக்கினார். வயதானவர், அழுக்காகத் தெரிந்தவர், நோயாளிகள் என எந்த மக்களையும் பாரபட்சமாக பார்க்காமல் கை கொடுத்து அணைத்துவிட்டு, 'நீங்க எப்படி இருக்கீங்க; உங்க தேவை என்னனு தெரிஞ்சிக்க வந்தேன்' என்றார். ஒவ்வொரு ஊரையும் பார்த்துட்டு வீட்டுக்குப் போய் படுத்தா அன்னைக்கு புது விஜயகாந்தா மாறுறேன் என்று எங்களிடம் கண் கலங்கச் சொன்னார்.
அதுதான் விஜயகாந்த். மக்களுக்காக பரிந்து நின்ற கேப்டன். மனசும் வயிறும் குளிர `மீண்டு வாருங்கள் கேப்டன்!' என ரசிகர்களும், மக்களும் குரல் கொடுத்தனர். அந்தக் குரல்கள் உங்களுக்குக் கேட்கவில்லையா கேப்டன்!
from விகடன்
Comments