Vijayakanth: “என் காம்பவுண்டுக்குள்ளே வந்த யாரும் பசியோட போகக் கூடாது!” - 1986-ல் விஜயகாந்த் பேட்டி

எம்.ஜி.ஆர். அல்லது கமலைப் போல சிவப்பான அழகு கிடையாது. சிவாஜி அல்லது ரஜினி போன்ற நேர்த்தியான, சற்று வித்தியாசமான முகமும் இல்லை. நம்மில் ஒருவரைப் போல் சாதாரணமான தோற்றம். (ஏதோ கொஞ்சம் வெயிட் போட்டதுகூட அண்மையில்தான்!) ஒரு தொழிற்சாலையிலேயோ, அரசு அலுவலகத்திலேயோ, தனிப்பட்ட வியாபாரத்திலேயோ பார்க்கக்கூடிய முகங்களில் ஒன்று. கலரும் நல்ல கறுப்பு! ஆனால், இந்த முகம்தான் அண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதிலும், பட்டிதொட்டிகளிலெல்லாம் போஸ்டர்கள் மூலமாகவும் ராட்சத பேனர்கள் மூலமாகவும் கம்பீரமாக நின்றவண்ணம் நம்மைப் பார்த்துப் புன்னகை புரிகிறது!

விஜயகாந்த்... இன்றைக்கு சினிமா விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை! எழுபது படங்களுக்கு மேல் நடித்துவிட்ட விஜயகாந்துக்கு இன்று தமிழகமெங்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்கள். ‘இவர் நடிச்சா, போட்ட காசு கட்டாயம் வரும்’ என்ற ‘கேரண்டி' உடைய நட்சத்திரம்.

திரையுலகில் விஜயகாந்தின் வளர்ச்சி ஆச்சரியமானது. தன்னம்பிக்கைக்கும், கடுமையான உழைப்புக்கும் ஓர் உதாரணம்! 1986-ம் ஆண்டில் விஜயகாந்தை அவரது தி.நகர் அலுவலகம்-கம்-வீட்டில் சந்தித்தோம்.

Vijayakanth | விஜயகாந்த்

பர்ணசாலை மாதிரி கூரை போட்ட ஓர் அறையில், தரையில் பாயை விரித்தபடி கையைத் தலைக்கு உசரம் வைத்தபடி படுத்திருந்தார் விஜயகாந்த். அந்த அறைக்குள் மூன்று திசைகளிலும், பெரிய சைஸில் விஜயகாந்த் படங்கள், ஓவியங்கள்.

காலை வேளையில் அரைத் தூக்கத்திலிருந்தவரை எழுப்பி உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தோம். செயற்கையாக இல்லாமல், இயல்பாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘என்னைப் பத்தி இந்த ஒன்பது வருடங்கள்ல, பல கோணங்கள்ல ஏராளமான செய்திகள் வந்திருக்கு. இப்ப படுத்துக்கிட்டிருந்தப்ப, புதுசா உங்களுக்குச் சொல்ல என்ன இருக்குன்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்...’’ என்று ஆரம்பித்தார். பிறகு தொடர்ந்து, ‘‘இப்ப எனக்குக் கிடைச்சிருக்கிற ஓரளவு 3 நட்சத்திர அந்தஸ்துக்கான உண்மையான காரணம் என்னவா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?’’ என்று நம்மைக் கேட்டார்.

"ஒரு கிராமத்து இளைஞனின் முரட்டுத்தனத்துடன் ‘ஆக்ஷன் ஹீரோ'வா ஒரு முத்திரையை, விடாமுயற்சியுடன் பதித்திருக்கிறதுனாலே..?’’ என்று தூண்டி விட்டோம்.

‘‘அதெல்லாம் சினிமாவில் தொடர்ந்து நடிச்சப்புறம்! நான் சொல்ற காரணம் வேற! இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க.

முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.

ராதிகாவுடன் விஜயகாந்த்

முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்.

‘அகல் விளக்கு' படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு' படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன்.

இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை! டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டறை' படத்துக்கு என்னை புக் பண்ணினார். ‘ஒருதலை ராகம்' படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் நடிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் ‘நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கனும்’னு சொல்லிட்டார்.

Vijayakanth | விஜயகாந்த்

‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் ‘வாஷ்' பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். ‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர்.

மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் ‘சாட்சி' படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘

ஜில்லென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார் விஜயகாந்த்...

‘‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன.

‘பார்வையின் மறுபக்கம்' படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை’ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க... நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை!

விஜயகாந்த், ராதிகா
இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க'னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை.

தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்' என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே ‘தங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்கிற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?’’

சில விநாடிகள் கழித்துத் தொடர்ந்தார் விஜயகாந்த்: ‘‘தங்கள் படங்கள்ல ஒரு நாளாவது என்னை நடிக்க வெச்சு, அதுக்குப் பிறகு அந்தப் படத்தையே கேன்ஸல் பண்ணிட்டு, ‘விஜயகாந்துக்கு நடிக்க வரலை. அதனாலதான் அந்தப் படத்தை எடுக்கலை’னு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கணும்னு இன்னிக்கும் ஆசைப்படற பெரிய மனிதர்கள் இருக்காங்க தெரியுமா? அதே சமயம் இவங்களே பினாமி மூலம் கால்ஷீட் கேட்கறதும் உண்டு. அவங்க மேலேயே நான் கோபப்படலை, நடிகைகள் மேலா கோபப்படப் போறேன்..?

இன்னிக்குச் சொல்றேன், எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை.

Vijayakanth | விஜயகாந்த்

‘‘இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?’’

‘‘அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்' கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன். இதெல்லாம் நான் நடிகனாகறதுக்கு முன்னாடியே! நான் சாப்பாடு போடறதை விளம்பரம் பண்ணியா போடறேன்..? அதேமாதிரி என் சொந்தப் படமான ‘உழவன் மகன்' ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது. கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை...’’

‘‘இன்றுவரைக்கும் உங்கள் நடிப்புத் திறமையை நிரூபிக்கிற மாதிரி படங்கள் வரலையே... முக்கால்வாசிப் படம் மசாலாதான்... உங்க வீக்னெஸ் உங்களுக்கே தெரியவேதான் பல பொது விஷயங்களில் ஈடுபடுகிறீர்களா? குறிப்பாக, தமிழ் மொழிக்காகக் குரல் கொடுப்பது. முன்பு இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்தது. சாலிக்கிராமத்திலுள்ள உங்கள் வீட்டருகே இலவசத் திருமண மண்டபம், இலவச மருத்துவமனையைத் திறந்தது...’’

கேள்வியை முடிக்குமுன் குறுக்கிட்டு, ‘‘என் நடிப்புத் திறமையை நிரூபிக்கச் சில படங்களில் நடித்திருக்கிறேன். ‘வைதேகி காத்திருந்தாள்', ‘ஊமை விழிகள்', ‘அம்மன் கோவில் கிழக்காலே', ‘வசந்த ராகம்' போன்ற படங்களில் நடித்த எனக்கு ஏராளமான பாராட்டுகள், விருதுகள் கிடைத்தன. சென்ற வாரம் எனக்குக் கிடைத்த ஃபிலிம்ஃபேர் விருதுகூட ‘அம்மன் கோவில் கிழக்காலே' படத்துல நடிச்சதுக்குத்தான் கிடைச்சது. என்னைத் தேடி வர்றவங்க கூட விஜயகாந்தை வெச்சு வியாபார ரீதியில் வெற்றிப் படங்களை எடுக்கத்தான் யோசிக்கிறாங்க. ஏன்னா, பொதுவா நான் ஆக்‌ஷன் ஹீரோ. எதிர்காலத்துல நிச்சயம் நல்ல ரோல்கள்ல நடிப்பேன்.

திசை திருப்பறதுக்காக சோஷியல் சர்வீஸ்ங்கறதெல்லாம் ரொம்ப மிகையான கற்பனை. ஒரு வங்கி அதிகாரியோ ஒரு பிஸினஸ்மேனோ சமூகப் பிரக்ஞையோடு பொது விஷயங்களில் ஈடுபட்டால் இந்தக் கண்ணோட்டத்தோடு நாம் பார்க்கறதில்லை. அவங்களுடைய பொதுநோக்கைப் புகழ்றோம். ஒரு நடிகன் மட்டும் பொதுக் காரியத்தில் ஈடுபட்டால் ஏன் இவ்வளவு கற்பனைகள்? மாணவனாக இருந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல கலந்துக்கிட்டு பஸ்ஸை மறிச்சவன் நான்.

வைதேகி காத்திருந்தாள்

சின்ன வயசிலிருந்து மனசுல பதிஞ்சுட்ட பழக்கம் மாதிரிதான் தமிழுணர்வும். நான் நடிகனாக இல்லாவிட்டாலும் தமிழைப் பத்தி பேசுவேன். அந்தப் பாதிப்புலதான் இலங்கைப் பிரச்னையின்போது உண்ணாவிரதப் போராட்டம் இருந்தேன். இதுக்கெல்லாம் என் தொழில் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தப்பு? சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் நாமே சாப்பிட முடியுமா? இன்றைய நிலைமைக்கு நம்மால் நாலு பேருக்கு உபகாரமா இருக்க முடியுது. மருத்துவமனைன்னா, பெரிய ஹாஸ்பிடல் இல்லைங்க. ஒரு சின்ன டிஸ்பென்ஸரி. அந்த ஏரியாவிலுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு, லேசான உடல்நலக் குறைவுக்கு மாத்திரை மருந்து கொடுக்கறோம். அவ்வளவுதான்... ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்குங்க. இந்த மாதிரிச் செயல்கள் மட்டும் ஒரு நடிகனை நிலையா நிக்க வைக்க முடியாது. பொதுச் சேவை செய்யற நடிகர்கள் எல்லாருமே கோட்டையில போய் உட்கார்ந்துடவும் முடியாது. அதனால், அந்த மாதிரி பப்ளிசிட்டி எண்ணமெல்லாம் நிச்சயமா எனக்குக் கிடையாது.’’

‘‘உங்க வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே ரசிகர் மன்ற ஆபீஸ், ஏராளமான இளைஞர்கள் வராங்க... பொது நோக்குன்னெல்லாம் பேசற நீங்க ஏராளமான இளைஞர்களை வேறு வேலை வெட்டிக்குப் போகவிடாம, உங்க பின்னாடியே சுத்த வெச்சு, உங்க வளர்ச்சிக்கு அவங்களைப் பயன்படுத்திக்கறது ஒருவித ‘எக்ஸ்ப்ளாய்டேஷன்' இல்லையா..?’’

‘‘தயவுசெய்து பயன்படுத்திக்கிறேன்னு சொல்லாதீங்க. என் படத்தைப் பார்த்து ஏராளமான இளைஞர்கள் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கறாங்க. வேண்டாம்னாலும் அவங்க கேக்கப் போறதில்லே! சரி, வெச்சாச்சு... இப்படி என் பெயரிலே மன்றம் வெச்சிருக்கறவங்க ஓர் அடிதடி, கலாட்டானு இறங்கினா, உடனே ‘விஜயகாந்த் ரசிகர்கள் கலாட்டா’னு பேப்பர்ல வருமில்லையா...? அதுக்காகத்தான் நாங்களே மன்றத்து இளைஞர்களை Guide பண்றோம். அதனால் அவங்களுக்கு ஒரு பொறுப்பு வருது. என் மேல் இருக்கற அன்பினால், நாம் தப்புப் பண்ணினா அது விஜயகாந்தைப் பாதிக்கும்னு புரிஞ்சுக்கறாங்க. ஏன், இளைஞர்கள் மன்றங்கள் ஆரம்பிக்கறாங்க? வேலையில்லாத் திண்டாட்டம், கிராமங்கள்ல மழை கிடையாது, விவசாயம் படுத்துருச்சு. வறட்சி... உழைக்க வழியில்லை. அந்த இளைஞர்கள் மனசுல மட்டும் ஆயிரம் கற்பனைகள். இந்த மன்றங்கள் மூலமாகத் தங்களுக்கு ஓர் அங்கீகாரம் தேடிக்கிறாங்க, அவ்வளவுதான். நாளைக்கு இந்த இளைஞர்களுக்குக் குடும்பம், பொறுப்புன்னு வந்தா, அவங்க கவனம் வேறு திசையில் திரும்பும்.’’

Vijayakanth | விஜயகாந்த்

பேச்சு மெதுவாக அரசியல் விவகாரங்களுக்குத் திரும்பியது. ‘‘அடிக்கடி தமிழுக்காக் குரல் கொடுக்கிறீர்கள். உங்கள் மன்ற இளைஞர்களில் பலர் தி.மு.க-வினர். கலைஞரேகூட, ‘நானிருக்கப் பயமேன்' படத் துவக்க விழாவில், நீங்கள் தி.மு.க. உறுப்பினராக இருந்தால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் தி.மு.க. அபிமானிதானே?’’

‘‘எல்லா கட்சியில் உள்ளவங்களும்தான் மன்றத்தில் இருக்காங்க. வெளியூர்களில் என் போஸ்டர்ல தலையில் காங்கிரஸ் கொடி, வலது கையில் தி.மு.க., இடது கையில் அ.தி.மு.க. கொடியெல்லாம் போடறாங்க! கலைஞர், நான் அவர் தம்பியா இருந்தால்கூட மகிழ்ச்சின்னும் அன்னிக்குச் சொன்னார். ‘தமிழ்’னு சொல்லத் தமிழனா இருந்தாலே போதும். அரசியல் முத்திரை தேவையில்லை. நான் இப்பத்தான் சினிமாவுல கொஞ்சம் முன்னுக்கு வந்துக்கிட்டிருக்கேன். அதுக்குள்ள கட்சி, அரசியல்னு கவனம் திரும்பக்கூடாது. எல்லார்கிட்டேயும் எனக்கு அபிமானம் உண்டு. கலைஞர் வசனத்தைப் பேசி நடிக்கமாட்டோமானு மனசுல ஏக்கம் உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜிலேருந்து எல்லாருமே அவர் வசனத்தைப் பேசியிருக்காங்க. நானும் ஒரு நடிகன். எனக்கு அந்த ஆசை இருக்கக் கூடாதா?’’

- சுதாங்கன்



from விகடன்

Comments