"விஜய் பட ஷூட்டிங் நிக்கக்கூடாதுன்னு என்னை பென்ஸ் கார்ல அனுப்பினார்!" - விஜயகாந்த் குறித்து வையாபுரி

நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். திரையுலகினர், கட்சி தொண்டர்கள் எனப் பலரும் அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று அவரின் உடல் அவரின் கட்சி அலுவலக வளாகத்திலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்துடனான தங்களின் அனுபவங்களைப் பல திரைப் பிரபலங்களும் பகிர்ந்துவரும் இவ்வேளையில், அவரைப் பற்றிய சில நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் நடிகர் வையாபுரி.

"அவரை மூணு விஷயத்துல எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலாவது நாங்க எல்லோரும் ஒரு முறை மதுரைக்குப் போயிருந்தோம். எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் ரயில்ல பத்திரமாகக் கூட்டிட்டு போய் விழாவைச் சிறப்பாக முடிச்சார். அங்கிருந்து திரும்பி வரும்போது ரயில்ல சாப்பாடு கிடைக்கல. உடனடியாக ரயிலை நிறுத்தச் சொல்லி இறங்கி, அவரே கேட் கதவைத் தாண்டிப் போய் ஒரு தூக்குவாலில என்னென்ன இருக்கோ அவ்ளோ சாப்பாடுகளையும் வாங்கிட்டு வந்தார். யாருமே பசியோட இருக்கக்கூடாதுங்கிறதுதான் கேப்டனோட எண்ணம்.

வையாபுரி

இரண்டாவதாக, காவிரி பிரச்னைக்காக நாங்க எல்லோரும் நெய்வேலி போயிருந்தோம். அங்க அத்தனை பேரும் பஸ்லதான் போனோம். அவ்வளவு நபர்களையும் அழகாகக் கூட்டிட்டு போய் திருப்பி அழைச்சுட்டு வந்தார். இதெல்லாம் இந்தியாவுக்குள்ள நடந்தது. ஒரு முறை நடிகர் சங்க விழாவுக்காக சிங்கப்பூர், மலேசியா போயிருந்தோம். அங்க விமான நிலையத்தோட வாசல்ல நின்னு எல்லோரும் உள்ள அனுப்பிட்டு கடைசியாகத்தான் கேப்டன் உள்ள வந்தார்.

இதுமட்டுமில்லாம முதல்ல மலேசியாவுல இந்த நிகழ்வை முடிச்சிட்டு அன்னைக்கு இரவே பஸ்ல சிங்கப்பூர் கூட்டிட்டுப் போனாங்க. ரஜினி சார், கமல் சார் தொடங்கி லைட்மேன் உட்பட பல டெக்னிசியன்ஸ் சுங்கச்சாவடிக்கு பக்கத்துல இருக்கிற கழிவறையைத்தான் யூஸ் பண்ணாங்க. பாகுபாடு இல்லாம எல்லோரும் ஒற்றுமையாகச் செயல்பட்டாங்க.

இதுக்கப்புறம் சிங்கப்பூர்ல விழாவை முடிச்சிட்டு இரவு நேரத்துல கிளம்பினோம். இங்கயும் எல்லோரையும் அனுப்பிட்டு கடைசிலதான் கேப்டன் பஸ்ல வந்தார். அப்போ கடைசி சீட்தான் இருந்தது. அந்த கடைசி சீட்ல நானும் கேப்டனும் உட்கார்ந்துட்டு வந்தோம். அழகாகக் கூட்டிட்டு போய் அழகாகத் திருப்பி கூட்டிட்டு வந்தார். இந்த மாதிரி எடுத்த விஷயத்தைச் சரியாக முடிப்பதில் அவர் மிகத் திறமையானவர். எங்களைப் பத்தி பத்திரிகைல ஏதாவது எழுதியிருந்தா அந்தப் பத்திரிகைக்கு போன் பண்ணி, 'இப்படி எழுதியிருக்கீங்க, இதுக்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன்'னு எங்க சார்புல நின்னு பேசுவார். அதுதான் கேப்டன்!

அதுக்குப் பிறகு 'கள்ளழகர்' படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல கேப்டன் சொல்லிதான் நான் நடிச்சேன். அந்தச் சமயத்துல நான் பிஸியாக இருந்தேன். 'கள்ளழகர்' படத்தோட பாடல் ஷூட்டிங் மூணு நாள் நடந்தது. அப்போ அடுத்த நாள் விஜய் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தோட ஷூட்டிங் இருந்தது. கேப்டன் என்கிட்ட 'வையாபுரி, இங்க லேட் பண்ணிடுவாங்க. காலைல நீ அங்க ஷூட்டிங் போகணும். நான் வேற எதாவது ஏற்பாடு பண்றேன்'னு சொன்னார். அதுக்கு பிறகு என்னை மணிவண்ணன் சாரோட பென்ஸ் கார்ல ஷூட்டிங் அனுப்பி வச்சார்.

விஜயகாந்த் | Vijayakanth

என் கல்யாணம் வடபழனி கோயில்ல நடந்துச்சு. அங்க கேப்டன் வரணும்னு அவசியம் இல்ல. அங்க வந்து தாலி, மோதிரம் எடுத்துக் கொடுத்து என் கல்யாணத்தை நடத்தி வச்சாரு. அவர் தேர்தல்ல ஜெயிச்சு எதிர்கட்சி தலைவரானதும் அவரைச் சந்திக்கக் குடும்பத்தோட போனேன். அப்போ அவர் என்கிட்ட, 'ஜெயலலிதா அம்மாவைப் பார்த்துட்டு வந்துட்டியா'னு கேட்டார். நான், 'இல்ல, அப்பாயிண்மென்ட் கேட்டிருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களைச் சந்திக்கலாம்னு வந்தேன்'னு சொன்னேன்.

அதுக்கு கேப்டன், 'இல்ல, நீ முதல்ல அவங்களைதான் பார்க்கணும்'னு சொன்ன பெரிய மனசு அவருக்கு. அவர் கோபப்பட்டா கண்டிப்பாக அதுல ஒரு நியாயம் இருக்கும். இன்னைக்கு எல்லோரும் அழறாங்க. மீம்ஸ் போட்டவங்ககூட அழறாங்க. அன்னைக்கு அவரின் மனம் குலையாமல் வைத்திருந்தால் இன்னும் கேப்டன் அதிகமாக வாழ்ந்திருப்பார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

விஜயகாந்த், வையாபுரி, பிரேமலதா

ஜூனியர் ஆர்டிஸ்ட்டில் தொடங்கிப் பெரிய நட்சத்திரங்களை வரைக்கும் யாருக்கு என்ன பிரச்னைனாலும் எந்த நேரத்திலும்கூட போன் பண்ணி அதைத் தீர்த்து வைப்பார் கேப்டன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் வையாபுரி.



from விகடன்

Comments