Bigg Boss 7 Day 87: `நிக்சன் - விஜய் டாஸ்க்கில் ஏமாற்றினார்களா?' - வெளியாகுமா குறும்படம்...

TTF டாஸ்க் ஒன்று, குழு மனப்பான்மையோடும் விரோதத்தோடும் நடந்து முடிந்தது. அதற்கு மாறாக டாஸ்க் இரண்டு, கலகலப்பாகவும் இணக்கமாகவும் நடந்ததில் மகிழ்ச்சிதான். என்றாலும் இதிலும் சில உள்குத்துக்கள் இருந்தன. மிதமான தாக்குதல்கள் இருந்தன.

இந்த இரண்டாவது டாஸ்க், ஏறத்தாழ சரியான முறையில் நடந்து முடிந்ததாக மெயின் எபிசோடில் காட்டப்பட்டாலும், முழு நாள் காட்சிகளின் வழியே பார்க்கப்பட்டபோது நிக்சனின் மோசடிக்கும் வெற்றிக்கும் நடுவரான விஜய் உதவி செய்ததாக விமர்சனங்கள் எழுகின்றன. அகம் டிவிக்கு முன்னதாகவே பரபரப்பான குறும்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிவிட்டன. இதில் உண்மையிருந்தால் நிக்சனின் வெற்றி நிச்சயம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீட்டின் குழு மனப்பான்மை பல காட்சிகளில் வெளிப்படுகிறது. மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகிய மூவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றுகிறார்கள். தினேஷ் எங்கிருக்கிறாரோ அதன் எதிர்தரப்பில் விசித்ரா இருப்பார். எனவே மாயா குழுவில் இப்போதைக்கு அவர் இருக்கிறார். விஜய்யும் இந்த அணியில்தான் இருக்கிறார். அந்தப் பக்கம் பார்த்தால் தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஆகிய நால்வரும் ஒரு டீமாக இருக்கிறார்கள். எல்லை தாண்டி வந்து ரவீனா இந்தப் பக்கமும் சமயங்களில் பேசி விட்டுச் செல்வார். அர்ச்சனாவின் நிலைமைதான் திரிசங்கு சொர்க்கம். இப்போதைக்கு மாயா கட்சியின் அனுதாபியாக இருக்கிறார். இதுதான் தற்காலிக நிலவரம். விஷ்ணு, மணி, ரவீனா ஆகிய மூவரும் இணைந்து எதிர் டீம் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். “மாயாக்கா கூட நீங்கதான் முதன்முதல்ல சண்டை போட்டீங்க” என்று ஏதோ வரலாற்று சாதனை போல புள்ளிவிவரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ரவீனா. அந்தப் பெயரைக் கேட்டாலே விஷ்ணுவிற்கு கொலைவெறி வந்துவிடும். எனவே உஷ்ணமானார்.

தினேஷ், விஷ்ணு

“இன்னிக்கு வரைக்கும் அவங்க ஃபேக்காத்தான் ஆடறாங்க தேவை இருக்கற வரைக்கும்தான் ஒருத்தரை வெச்சுப்பாங்க. இல்லைன்னா தூக்கி எறிஞ்சுடுவாங்க. அவங்க கமாண்ட்ல உன்னைக் கொண்டு வந்துடுவாங்க. நான் அவங்க பப்பெட் கிடையாது. சீரியஸான நட்புல்லாம் நான் வெச்சுக்க மாட்டேன். பூர்ணிமால்லாம் மணியைத்தான் டார்கெட் பண்ணுவா. என் பக்கம்லாம் வர மாட்டா. என்னை நேரடியா தாக்காது. கன்னிங் கேம். நெகட்டிவ் பாயிண்ட்” என்று விஷ்ணு நீளமாக வம்பு பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த அறையில் பூர்ணிமா என்ட்ரி.

எனவே புறணிக்குழு டாப்பிக்கை மாற்றி வேறு எதையோ பேசி ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசியது அரசல் புரசலாக பூர்ணிமா காதில் விழுந்திருக்குமோ, என்னமோ, தன் டீமிடம் சென்று “சேர்ந்து ஆடறோம்ன்னு நம்மளச் சொல்றாங்க. ஆனா அவங்கதான் சேர்ந்து ஆடறாங்க” என்று அனத்தினார்.

முதல் டாஸ்க்கை அலசிப் பிழிந்து காயப் போட்ட போட்டியாளர்கள்

நாள் 87. ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்கிற பழைய பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘மாமா.. மாப்ளே’ என்று மணியும் தினேஷூம் பரஸ்பரம் சீண்டிக் கொண்டு நடனம் ஆடிய காட்சி நல்ல காமெடி. “நேத்தி நடந்த கேம் எனக்கு ஒண்ணுமே புரியலை. நீங்களும் ஒண்ணும் சொல்லித் தர மாட்டேன்றீங்க. நான் என்னத்த விளையாடறது. இந்த வாரத்தை எப்படி கழிக்கப் போறேனோ?” என்று விசித்ரா புலம்பிக் கொண்டிருக்க “நீங்க நல்லாத்தான் ஆடறீங்க. அவங்கதான் கிரிமினலா யோசிக்கறாங்க” என்றார் விஜய்.

‘வெளில எல்லாத்தையும் பார்த்துட்டு வந்திருக்கேன். உங்க ஒவ்வொருத்தவரையும் வெச்சு செய்யப் போறேன்’ என்று ரீஎன்ட்ரியில் முழக்கமிட்ட விஜய், ஆரம்ப ஆக்ஷனைத் தாண்டி மறுபடியும் பெட்டிப் பாம்பாய் அடங்கியிருக்கிறார். விசித்ராவின் புலம்பலைக் கேட்டு வெளியில் இருந்த தினேஷ் கிண்டலாக முணுமுணுக்க “கேம் ஆடத்தெரியலைன்னா வெளிய கிளம்ப வேண்டியதுதானே?” என்றார் விஷ்ணு. எனில் நேற்று எதற்காக விசித்ராவின் கோட்டையைக் காப்பாற்றுவதாக வாக்கு தந்து அதை நிறைவேற்றினார்?

அர்ச்சனா, விஜய்

மார்னிங் ஆக்டிவிட்டி. டாஸ்க் 1-ல் நடந்தவை பற்றி ஒவ்வொருவரும் பேச வேண்டுமாம். எனவே கடைத்தெருவில் வைத்து கட்டுச்சோற்றை ஒவ்வொருவரும் அவிழ்க்க ஆரம்பித்தனர். முதலில் வந்தா விசித்ரா “தினேஷ் அவுட் ஆகணும். அவர் முயல் கிடைக்கணும். என் கோட்டைக்கு டேமேஜ் ஆகக்கூடாது.. அது எல்லாமே நடந்துச்சு. குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்று வெற்றிப்புன்னகையுடன் சொல்லி அமர்ந்தார். அடுத்தபடியாக ‘முயல் ராஜா’ விஷ்ணு எழுந்து வந்தார். “மைண்ட் கேமை புரிஞ்சுக்கிட்டு ஆடினேன். யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணலை (எதே?!) கூடவே அதிர்ஷ்டமும் இருந்தது” என்று கலந்து கட்டி சொல்லி அமர்ந்தார்.

அடுத்து வந்த மணி “தனியாத்தான் ஆடினேன். (மறுபடியும் எதே?!) ஆனா இங்க சில போ் ஹெல்ப் வெச்சிக்கிட்டாங்க. அதனால நானும் வெச்சுக்கிட்டேன். மத்தபடி டான்ஸ் மாராத்தான்ல நடந்ததெல்லாம் அப்பவே முடிஞ்சு போன விஷயம். மறுபடியும் அதைக் கிளறாதீங்க” என்று முடிக்க, அடுத்த வந்த பூர்ணிமா வழக்கம் போல் ஒரு நீளமான பொழிப்புரையை நிகழ்த்தினார்.

“ரவீனாவை மொதல்ல அடிக்கணும்ன்னு எந்த திட்டமும் போடலை. அதுதான் எடுக்க ஈஸியா இருந்துச்சு. ஆனா மணி கோட்டையை விஷ்ணு எட்டி உதைச்சு ஹெல்ப் பண்ணாரு. மாயாவுக்கு நான் அப்படி பண்ணலை. தனியா ஆடினேன். மணியோட முயலை நெனச்சிருந்தா எடுத்திருக்க முடியும். ஆனா நான் எடுக்கலை. ஏன்னா முயல் எடுக்கறதெல்லாம் மேட்டரே கிடையாது. தோத்துட்டா திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆடினது உலகத்திற்கு தெரியணும். அதற்காகவே யாம் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினோம்” என்கிற அருளாசியோடு அமர்ந்தார் பூர்ணிமா.

ரவீனா

அடுத்ததாக வந்த மாயா தத்துவத்தைப் பொழிந்தார். “நான் ஜெயிச்சது என் கைல இல்லை. தோத்ததும் என் கைல இல்லை. எல்லாம் மாயா. இது ஏதோ எலிமினேஷன் கேம் மாதிரி போச்சு. இதெல்லாம் நான் எப்பவோ பண்ணிட்டேன். ஸோ.. எனக்கு இன்ட்ரஸ்ட்டாவே இல்லை. மணி ஒரு கல்லை பின்னாடி எடுத்து சொருகிக்கிட்டாரு.. விஷ்ணு கல்லை எத்தினாரு.. நீங்க யாருன்னு காட்டிடீங்க. அது போதும்” என்று சொல்லி அமர “மணிதான் ஆக்சுவலா இந்த கேமோட வின்னர். விஷ்ணு ஸ்மார்ட்டா ஆடிட்டார். மணி முட்டாள் ஆயிட்டான். நடந்தது ஃபேர் கேம் கிடையாது” என்றார், அடுத்து வந்த விஜய். ‘மணியை விஷ்ணு ஏமாற்றி விட்டார்’ என்பதைத்தான் விஜய் சர்காஸ்டிக்காக ‘ஸ்மார்ட் ஆட்டம்’ என்றார் போலிருக்கிறது.

பூர்ணிமா

இந்த உரையாடல் முடிந்ததும் “நான் எனக்காக ஆடலைன்னு எப்படி சொல்றே?” என்று பூர்ணிமாவிடம் நேரடியாக சந்தேகம் கேட்டார் மணி. “நீ விஷ்ணுவிற்காக ஆடறது நல்லா தெரிஞ்சுது” என்று பூர்ணிமா நீளமாக விளக்கம் தர “அவங்க சொல்றதுதான் வேத வாக்கு. நீ டைமை வேஸ்ட் பண்ணாத” என்பது மாதிரி தூரத்தில் முனகிக் கொண்டிருந்தார் விஷ்ணு.

விசித்ரா, தினேஷ் - விநோதமான சமாதான உடன்படிக்கை

கிச்சன் ஏரியாவில் தினேஷூம் விசித்ராவும் ஒருவரையொருவர் ஜாலியாக பிறாண்டிக் கொண்டிருந்தார்கள். “இந்த யுத்தம் எப்போதுதான் முடியும்.. சொல்லுங்க சார்” என்று தன்னைச் சீண்டிய தினேஷிடம் கேட்டார் விசித்ரா. “நீங்க ஃபைனலுக்கு போவீங்கள்ல அப்ப” என்று நையாண்டியாகச் சொன்னார் தினேஷ். “நான் அன்பானவ சார்” என்று விசித்ரா சொல்ல “அன்புன்னா நான் வீக் ஆயிடுவேன். அதனாலதான் டெரர் மோடில் இருக்கேன்” என்றார் தினேஷ். எனில் அன்பெனும் ஆயுதத்தால் விசித்ரா தினேஷை வெல்லலாம்.

இன்னொரு புதிய புறணியை ஆரம்பித்தார் விஷ்ணு. “வெளில போனா நாமதான் டச்ல இருப்போம். அவங்க நிச்சயம் இருக்க மாட்டாங்க. பிச்சிப்பாங்க” என்று அவர் ஆருடம் சொல்ல “அதெல்லாம் நான் நிறைய பார்த்துட்டேன். எத்தன பிக் பாஸ் ஷோக்கு கோரியோ பண்ணியிருப்பேன்” என்றார் மணி. “இதுவரைக்கும் நடந்த சீசன்ல எல்லாம் ஒருத்தர் எவிக்ட் ஆயிட்டா எல்லோருமே ஃபீல் பண்ணுவாங்க.

விசித்ரா

இந்த சீசன்லதான் ‘ஹப்பாடா.. ஒரு டிக்கெட் காலின்னு சந்தோஷப்படறாங்க” என்று கீச்சுக்குரலில் ரவீனா சொன்னது உண்மைதான். பிக் பாஸில் சீசனுக்கு சீசன் வன்மமும் சுயநலமும் பெருகிக் கொண்டே போகிறது.

டிக்கெட் டு பினாலே - டாஸ்க் இரண்டு அறிவிக்கப்பட்டது. முயல் சற்று வளர்ந்து விட்டது போல. எனவே ‘முயல் மேக்ஸ்’ என்பது அதன் பெயர். ஆக்டிவிட்டி ஏரியாவில் பரமபதம் மாதிரியான கோடுகள் வரையப்பட்டிருக்கும். கார்டுகளில் உள்ள குறிப்புகளின் படி போட்டியாளர்கள் நகர வேண்டும். பச்சை நிற அட்டை என்றால் அதிலுள்ளதை செய்ய வேண்டும். சிவப்பு நிற அட்டை மற்றவர்களை செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் விதி. வெற்றியும் தோல்வியும் ஒரே கணத்தில் மாறக்கூடிய சுவாரசியமான ஆட்டம் என்பதால் இந்த டாஸ்க் பெரிதும் கலகலப்பாகச் சென்றது.

நிக்சனுக்குத் தொடர்ந்து எலிமினேஷன் கார்டு எப்படி கிடைத்தது?

முதல் கார்டை எடுத்த நிக்சனுக்கு ‘ஒரு அடி பின்னால் போக வேண்டும்’ என்று குறிப்பு வந்தது. அது சிவப்பு அட்டை என்பதால் மற்றவருக்கு அந்தக் குறிப்பை அவர் தர வேண்டும். இப்போதுதான் முதல் கட்டத்தில் ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது. பிறகு எங்கிருந்து பின்னால் நகர்வது? எனவே ‘அந்தக் கார்டு செல்லாது’ என்று அறிவித்தார் பிக் பாஸ். (ஆரம்பமே நல்ல சகுனம்!). அடுத்த ரெட் கார்டு விசித்ராவிற்கு. ‘இரண்டு பேரை இடம் மாற்ற வேண்டும்’. மணி மற்றும் விஷ்ணுவை மாற்றினார். “இன்னமும் பின்னாடி போகணும்னா அப்படியே வீட்டுக்குத்தான் போகணும்” என்று ஜோக் அடித்தார் பூர்ணிமா.

மூன்றாவது கார்டில் ஆட்டம் களை கட்டியது. ஆம். ரவீனாவிற்கு வந்தது எலிமினேஷன் கார்டு. தனக்குத்தான் வந்தது போல என்று அவர் முதலில் அலறி விட்டார். பிறகுதான் தெரிந்தது, அது ‘ரெட் கார்ட்’ எனவே மற்றவரைத்தான் எலிமினேட் செய்ய வேண்டும். அதனால் உற்சாகமான ரவீனா “நேத்திக்கு என்னை அடிச்சவன்னலாம் முன்னாடி வந்து நில்லுங்க. அவங்க மூஞ்சையெல்லாம் நான் பார்க்கணும்” என்று காமெடி செய்தார். மாயா தயாராக கையை உயர்த்தினார். அதுவொரு நல்ல தந்திரம்.

ரவீனா, விசித்ரா, நிக்சன்

தானே பலியாக முன்வந்தால் எதிராளி சற்று திகைத்துப் போவார். எனவே மிகுந்த தயக்கத்துடன் சிரித்துக் கொண்டிருந்த ரவீனா சட்டென்று தீர்மானித்து ‘விஷ்ணு’வை தேர்ந்தெடுக்க ‘ஏண்டா டேய்’ என்றபடி வெளியேறினார் விஷ்ணு. இதன் மூலம் தான் நியாயமான ஆட்டத்தை ஆடுவதாக வெளியுலகத்திற்கு நிரூபிக்க ரவீனா விரும்பினார் போல.

ஆறாவது கார்டாக நிக்சனுக்கு எலிமினேஷன் செய்யும் வாய்ப்பு வந்தது. அவர் மணியை வெளியே தூக்கினார். அடுத்த முறையும் நிக்சனுக்கு இதே அதிர்ஷ்டம் அடித்தது.இந்த முறை அவர் ரவீனாவை ஆட்டத்திலிருந்து விலக்கினார். தொடர்ந்து எலிமினேஷன் நடந்தால் ஆட்டமே தொடராது என்பதால் சம்பந்தப்பட்ட கார்டுகளை வெளியே எடுக்கச் சொன்னார் பிக் பாஸ்.

குறும்படத்தில் உண்மை வெளியாகுமா?

இப்படியாக இந்த ஆட்டத்தில் நிறைய சுவாரசியங்கள் நடந்தன. ஏறத்தாழ முன்னணிக்கு நகர்ந்து கொண்டிருக்கிறவர் சட்டென்று பின்வரிசைக்கு போக வேண்டியிருந்தது. தினேஷ் பல இடங்களில் விட்டுக்கொடுத்து ஆரோக்கியமான ஆட்டத்தை ஆடியது சிறப்பானது.

நிக்சனுக்கு முதல் முயல் கிடைத்தது. அடுத்ததாக தினேஷின் உதவியில் மாயாவிற்கு இரண்டாவது முயல் கிடைத்தது. விசித்ராவின் உதவி காரணமாக பூர்ணிமாவிற்கு மூன்றாவது முயல் கிடைத்தது. ஆக… ஆட்டத்தின் முடிவில் நிக்சனுக்கு 3 பாயிண்ட்டும் மாயாவிற்கு 2 பாயிண்ட்டும் பூர்ணிமாவிற்கு ஒரு பாயிண்ட்டும் கிடைத்தன. மொத்தம் நான்கு பாயிண்ட்டுகள் பெற்று பட்டியலின் வரிசையில் முதல் இடத்தில் நிற்கிறார் நிக்சன். இது இப்போதைய நிலவரம். “என்னோட நன்றிக்காக கிடைச்ச பாயிண்ட் இது” என்றார் மாயா. அவரும் தினேஷூம் ஒருமாதிரி இணக்கமாகி இருக்கிறார்கள்.

மாயா

ஆட்டம் முடிந்ததும் மக்கள் வெளியேறி ஆங்காங்கே நடந்த விஷயத்தைப் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். “நேத்தைய ஆட்டத்தோட பழிவாங்கல் இன்னிக்கு இருந்தது” என்றார் மாயா. ‘கருப்புச் சட்டைக்காரன் வேணுமின்னே என்னை வெளிய அனுப்பிச்சிட்டான். என் வயத்தெரிச்சல் சும்மா விடாது” என்று நிக்சனை ஜாலியாக சீண்டினார் ரவீனா. “இல்லாட்டி நீ என்னைப் போட்டிருப்பே. அதனாலதான்” என்று பதிலுக்கு ஒழுங்கு காட்டினார் நிக்சன்.

இந்த டாஸ்க்கில் எலிமினேஷன் கார்டில் நகத்தால் கீறி நிக்சன் அடையாளம் ஏற்படுத்தியதாகவும், அவர் முயலை அடைவதற்கு நடுவரான விஜய் உதவி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ துண்டுகள் சாட்சியங்களாக சமூகவலைத்தளங்களில் உலவுகின்றன. அவற்றில் உண்மை இருந்தால் நிக்சனின் வெற்றி கேள்விக்குறியாக மாறும். குறும்படம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.



from விகடன்

Comments