இந்த எபிசோடில் தங்க முயலை வைத்து ஒரு விளையாட்டு. ‘முயல்’ என்று பாசிட்டிவ்வாக சொல்லி ஒவ்வொரு சுற்றையும் ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ்.
ஆனால் எவருமே தங்களின் வெற்றிக்காக ‘முயல’வில்லை. மாறாக எதிர் தரப்பின் வீழ்ச்சிக்காக விளையாடினார்கள். தங்க முயலை ‘தங்க’ளுடன் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியதற்கு மாறாக எதிரி தோற்றால்போதும் என்று திட்டம் வகுத்தார்கள். குழு மனப்பான்மை இந்த ஆட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’ என்கிற ரீமிக்ஸ் பாடலைப் போட்டு ‘டிக்கெட் டூ பினாலே’ டாஸ்க்கை வார்ம்-அப் செய்தார் பிக் பாஸ். கோர்ட்டில் அழைப்பது போல ‘விசித்ரா மேம்’ என்று ரவீனா மூன்று முறை கத்தியும் மேம் கிச்சன் பக்கம் வரவில்லை. ‘இந்த அநியாயத்தையெல்லாம் பாருங்க மக்களே. இந்த டிராமாவிற்கு முடிவு கட்டுங்க’ என்று விஷ்ணு அனத்திக் கொண்டிருந்தார். தினேஷிடம் பேசும்போது மட்டும் விசித்ரா பற்றி புகார் செய்யும் விஷ்ணு, விசித்ராவிடம் தனியாகப் பேசும் போது இணக்கம் காட்டுகிறார். போலவே கடந்த வாரத்தில் பூர்ணிமாவிடம் கண்கலங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இந்த வாரத்தில் பூர்ணிமாவை மீண்டும் எதிரி பட்டியலில் சேர்த்துவிட்டார். (ஜெஸ்ஸியைக் காணவில்லை). போலவே பூர்ணிமாவும் விஷ்ணு மீது கொலைவெறியில் இருக்கிறார்.
சபையை ஒன்று கூட்டிய பிக் பாஸ், ஸ்கூல் மாணவர்கள் மாதிரி ‘எழுந்து நில்லுங்க’ என்றார். `டிக்கெட் டூ பினாலே' டாஸ்க்குகளுக்காகப் போட்டியாளர்களுக்கு கோச் போல உத்வேகம் தருகிறாராம். ‘உங்களுக்கு நீங்களே பலமா கைத்தட்டிக்கங்க. வெல்கம் டூ டிக்கெட் டூ பினாலே. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு முதன் முறையாக பத்து போட்டியாளர்கள் இதில் இருக்கீங்க. இந்த வாரத்தில் பல போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு மதிப்பெண்ணும் வெற்றி வாய்ப்பை நோக்கி நகர்த்திச் செல்லும். நிக்சன், பூர்ணிமா, தினேஷ் ஆகிய மூவரும் ஏற்கெனவே பாயின்ட் பெற்றிருக்கிறார்கள். இதில் வெல்வதின் மூலம் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிப்பது மட்டுமல்ல. வெற்றியை நோக்கியும் நகர முடியும். இந்த டாஸ்க்கின் மூலம் முதல் ஃபைனலிஸ்ட் தேர்வாவார். போலவே எவிக்ஷனும் இருக்கும். முழு மனசோடு களம் இறங்குங்க” என்று சொல்ல அனைவரும் உலகக் கோப்பை வீரர்கள் போல முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டார்கள்.
ஆரம்பித்தது ‘டிக்கெட் டூ பினாலே’
TTF-ன் முதல் டாஸ்க். இதற்கான லெட்டரை அர்ச்சனா படிக்க, ‘காது கேளாதவர்களுக்கான’ தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அதை சைகையால் காட்டிக் கொண்டிருந்தார் விஜய். இருவரும் இந்த டாஸ்க்குகளில் பங்கு பெற முடியாது என்பது நாம் அறிந்ததே.
முதல் டாஸ்க்கின் விபரம் இதுதான். ஆளுக்கு ஒரு தங்க முயல் தரப்படும். தனித்தனி நிறங்களில் தரப்பட்ட கற்களை வைத்து அதனைச் சுற்றி கோட்டை கட்ட வேண்டும். அதிர்ஷ்ட குலுக்கலின் மூலம் மூன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் மட்டும் எதிரேயுள்ள மேடையில் நிற்க வேண்டும். பஸ்ஸர் அடித்ததும் ஓடிச் சென்று கோட்டையைக் கலைத்து முயலை கைப்பற்ற வேண்டும். மறுபடியும் பஸ்ஸர் அடிப்பதற்குள் மேடையில் வந்து நிற்காவிட்டால் அவர் அவுட். போலவே தன்னுடைய முயலைப் பறிகொடுத்தவரும் அவுட். இறுதியில் அதிக முயல்களை கைப்பற்றியவர் ஆட்டத்தின் வெற்றியாளர்.
ஏற்கெனவே வீடு இரண்டு தரப்புகளாகப் பிரிந்திருப்பது நமக்குத் தெரியும். எனவே ஆட்டத்தில் அந்தப் போக்கு மிக உக்கிரமாக எதிரொலித்தது. ஒவ்வொருவருமே தங்களுக்காக விளையாடாமல், குழுவாக இணைந்து எதிர் தரப்பை டார்கெட் செய்தார்கள். கேட்டால் ‘நீயும்தானே ஆரம்பித்தாய், செய்தாய்’ என்று நியாயம் கற்பித்தார்கள். அதுதான் ஸ்ட்ராட்டஜி என்றார்கள்.
விசித்ராவிற்கு தினேஷை தோற்கடிக்க வேண்டும் என்று வெறி. பூர்ணிமா விஷ்ணுவின் மீது கொலைவெறியில் இருந்தார். விஷ்ணுவும் அவ்வாறே இருந்தார். ஆனால் ‘உங்களுடைய கற்களை எடுக்க மாட்டேன்’ என்று விசித்ராவிற்கு வாக்களித்திருந்தாராம். எனவே கடைசி வரை விசித்ராவின் கோட்டை கலைக்கப்படாமல் இருந்தது. மணியும் விஷ்ணுவும் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள்.
குழு மனப்பான்மையுடன் நடந்த போட்டி
முதல் சுற்று ஆரம்பித்தது. இதில் ஆட தேர்வானவர்கள், நிக்சன், விசித்ரா, பூர்ணிமா. நிக்சன் தினேஷை டார்கெட் செய்ய, பூர்ணிமாவோ முதலில் ரவீனாவை வீழ்த்துவதில் முனைப்பாக இருந்தார். அது வெற்றி பெற்றது. முயலைப் பறிகொடுத்ததால் ரவீனா முதல் சுற்றில் வெளியேற்றம். ‘எனக்கு கஷ்டமா இருக்கு’ என்பதையும் சிரித்துக் கொண்டே சொன்னார் ரவீனா.
விளையாட்டு இடைவெளியில் பூர்ணிமாவைப் பற்றி கன்னாபின்னாவென்று புறணி பேசிக் கொண்டிருந்தார் விஷ்ணு. “அடுத்த ரவுண்ட்ல நான் வந்தா முதல்ல நிக்சனை முடிச்சிடுவேன். பூர்ணிமா பயங்கர தந்திரம். மாயாவைத் தாண்டிடுவா போல. மாயாவாவது வெளிப்படையா முரண்படுவாங்க. ஜெயிச்சா கம்யூனிட்டிக்கு 50 லட்சம் தருவேன்னு ஏன் பொய்லாம் சொல்லி ஜெயிக்கணும்?” என்பது விஷ்ணுவின் அனத்தல்.
இரண்டாவது சுற்று ஆரம்பித்தது. “என்னைத்தான் டார்கெட் பண்ணுவாங்க’ என்று யூகித்தார் பூர்ணிமா. இதில் ஆடத் தேர்வானவர்கள் பூர்ணிமா, தினேஷ், விசித்ரா. முதலில் ஓடிய தினேஷ் நிக்சனின் கற்களைத் தூக்கினார். விசித்ராவிற்கு தினேஷை தோற்கடித்தால் போதும். எனவே அதை எடுத்தார். பூர்ணிமா மணியை டார்கெட் செய்தார். விசித்ரா மிகவும் சிரமப்பட்டு ஓடி ஓடி கற்களை காலி செய்து முயலை எடுத்துக் கொண்டு வருவதற்குள் பஸ்ஸர் அடித்து விட்டது. எனவே விசித்ரா அவுட். “முயலை அங்கயே வெச்சிருங்க” என்றார் பிக் பாஸ். எனில் விசித்ராவின் நோக்கம் நிறைவேறவில்லை.
மூன்றாவது சுற்றில் பூர்ணிமா, விஷ்ணு, மணி ஆகிய மூவரும் களத்தில் இறங்கினார்கள். விசித்ரா விட்டு விட்டு வந்திருந்த முயல் எடுக்க எளிதாக இருந்தது. எனவே விஷ்ணு ஓடி அதைக் கைப்பற்றினார். ஆனால் பூர்ணிமாவும் மணியும் பரஸ்பரம் டார்கெட் செய்து கொண்டிருந்தார்கள். முயல் எடுப்பதைப் பற்றி கவலைப்படவில்லை. விஷ்ணுவிற்கு 2 முயல் கிடைத்தது. இந்தச் சமயத்தில் விஷ்ணு புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். மணியின் கற்களை எட்டி உதைத்தார். கற்கள் அடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இருந்தால் அப்படியே தூக்குவது எளிது. ஆனால் பரவலாக விழுந்தால் சேகரிப்பது கடினம்.
இதனால் பூர்ணிமாவை தாமதப்படுத்த முடியும் என்கிற விஷ்ணுவின் நோக்கம் பிறகு நிறைவேறியது. அவுட் ஆன தினேஷ் வெளியில் நின்று விஷ்ணு, மணியை ஆதரித்து ‘இப்படி போ.. அதை எடு.. இங்கே போடு’ என்று கத்திக் கொண்டிருந்ததை அர்ச்சனா ஆட்சேபித்து ‘இது க்ரூப் கேம் மாதிரி தெரியுது” என்று சொல்ல “யாரு போவங்கன்றதுதான் கேம். உன் வேலையைப் பாரு” என்று எரிந்து விழுந்தார் தினேஷ்.
பூர்ணிமாவின் அநாகரிகமான செயல்
நான்காவது சுற்று. இதில் மணி, பூர்ணிமா, விஷ்ணு ஆகிய மூவரும் களமிறங்கினார்கள். விஷ்ணு 3வது முயலைக் கைப்பற்ற பூர்ணிமா அவுட் ஆனார். அவர் தன்னுடைய முயலை ஜெயித்தவரிடம் ஒப்படைக்க வேண்டும். கடும் ஆத்திரத்தில் இருந்த பூர்ணிமா இதனால் ‘தூ’வென்று துப்பி விட்டு முயலை மணியிடம் தூக்கிப் போட்டு வந்தார். பின்னர் அது விஷ்ணுவிற்குச் சென்றது. மணியின் கற்களை விஷ்ணு உதைத்து விட்டு வந்த தந்திரம் பூர்ணிமாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “நான் தினேஷை பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல” என்று விசித்ராவிடம் பூர்ணிமா கடுகடுக்க “அப்படியா சொன்னே?” என்று புரியாமல் விழித்தார் விசித்ரா.
கடைசி சுற்று. இதில் விஷ்ணுவின் கற்கள் நிறைய இருந்தன. மாயாவின் கற்கள் கொஞ்சம் இருந்தன. விசித்ராவின் கோட்டை தொடப்படாமல் அப்படியே இருந்தது. சீனியர் சிட்டிஸன் சலுகை போல. பஸ்ஸர் அடித்தது. விஷ்ணு ஓடிச் சென்று மாயாவின் கற்களை கிளியர் செய்து அந்த முயலை எடுத்துக் கொண்டார். பிறகு மணியின் முயலையும் எடுத்துக் கொண்டு மேடைக்கு வந்து அமர்ந்து விட்டார். மணியும் மாயாவும் ஒரே சமயத்தில் விஷ்ணுவின் கற்களை எடுக்க போட்டி போட்டார்கள். “அதிகமா எடுக்காத” என்று மணியிடம் கத்தினார் தினேஷ். விஷ்ணுவின் அதே தந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு கல்லை எடுத்து தூரமாக போட்டார் மாயா. பஸ்ஸர் அடிப்பதற்குள் மணி ஓடி வந்து விட மாயா அவுட்.
ஆக இறுதியில் அதிக முயல்களை வைத்திருக்கும் விஷ்ணுவிற்கு 3 பாயிண்ட்களும் அடுத்த இடத்தில் இருந்த மணிக்கு 2 பாயிண்ட்களும் மூன்றாம் இடத்தில் இருந்த மாயாவிற்கு ஒரு பாயிண்ட்டும் கிடைத்தது. அதிர்ஷ்டம், தந்திரம், உழைப்பு ஆகிய அனைத்தும் கலந்த கலவையாக இது இருந்தது. மணியும் விஷ்ணுவும் கூட்டணி அமைத்துக் கொண்டதால் விஷ்ணுவிற்கு அதிக முயல் கிடைத்தது.
“இது டீம் கேம்ன்னு சொல்லிட்டுப் போங்க. தனக்காக விளையாடுங்கன்னுதான் கமல் சார் சொன்னாரு” என்று நிக்சன் சொல்ல “நீங்களும்தானே பண்ணீங்க. போப்பா” என்று மல்லுக்கட்டினார் தினேஷ். “எனக்கு டிக்கெட் டூ பினாலே கூட வேண்டாம். ஆனால் விஷ்ணுவிற்கு கிடைக்கக்கூடாது. செமயா காண்டாவுது” என்றார் பூர்ணிமா. “நேர்மையா ஆடி ஜெயிச்ச ஒரு பாயிண்ட் எனக்குப் போதும்” என்றார் கையில் அடிபட்டிருந்த மாயா. “மணி தனக்காக ஆடலை” என்று நிக்சன் குற்றம் சாட்டியதை மணிக்கு முன்பாக முந்திக் கொண்டு ரவீனா மறுத்தார். ‘என்னப்பா இந்தப் பொண்ணு’ என்கிற மாதிரி சங்கடமாக பார்த்தார் மணி.
தினேஷ் குறித்து எல்லை மீறி விசித்ரா பேசிய புறணி
ஒருவழியாக இந்த ஆட்ட சச்சரவு ஓய்ந்தது. மக்களுக்கு ஏதாவது சுவாரசியமாக செய்ய வேண்டும் என்று இப்போதுதான் தோன்றியதுபோல. தொலைக்காட்சி சீரியல்களில் மாமியார்கள் செய்யும் சதிவேலைகளை முகத்தில் காட்டி விசித்ரா எக்ஸ்பிரஷன்கள் கொடுக்க, அதன் மைண்ட் வாய்ஸ்களை பூர்ணிமா காமெடியாக சொல்லிக் கொண்டிருந்தார். தொன்னூறுகளின் திரைப்படத்தில் நடிக்கும் போது பாடல் காட்சிகளின் இடைவெளிகளில் வைப்பதற்காக டான்ஸ் மாஸ்டர்கள் சொல்லித்தரும் ‘விவகாரமான’ அசைவுகளை வைத்து விசித்ரா செய்தது சுவாரசியமான காமெடி.
“என்னமோ இந்தப் பொண்ணு வந்து நியாயம் பேசுது. இது ஆட்டத்துல இருந்திருந்தா மத்தவங்களை வண்டை வண்டையா கேட்டிருக்கும்” என்று அர்ச்சனா பற்றி தினேஷ் சொல்ல அதை ரசித்து சிரித்தார் விஷ்ணு. இந்தச் சமயத்தில் விசித்ரா பேசிய ஒரு புறணி மிக மோசமானது. மட்டமானதும் கூட. “தினேஷ் என்னைப் பத்தி ரொம்ப மோசமா பேசிட்டே இருக்கார்” என்று அவர் சொன்னது வரையில் ஓகே. ஆனால் அதையும் தாண்டி “அவருக்கு வாழ்க்கையில் பியூர் லவ் கிடைச்சே இருக்காது. கிடைச்சத திருப்பித் தரவும் தெரியாத ஆளு. அன்பிற்கு தகுதியான ஆளும் அவர் இல்ல. நான் பண்றதெல்லாம் நடிப்புன்றாரு. எல்லாமே நடிப்பா” என்று தினேஷின் தனிப்பட்ட விவகாரத்தையொட்டி விசித்ரா பேசியது ரசிக்கும்படியாக இல்லை. இது தினேஷின் காதில் விழுந்திருந்தால் ஒரு பூகம்பமே வெடிக்கும்.
தன்னை யாராவது ஒரு சொல் சொல்லி விட்டால், தினேஷ் முகத்தில் அடிப்பது போல் பதில் பேசுவதும். அப்பட்டமான வெறுப்பைக் காட்டுவதும் உண்மைதான். ஆனால் அதை ஆட்டத்திற்கு உள்ளாக மட்டுமே எதிரொலிக்க வேண்டும். தனிப்பட்ட விஷயங்களில் போய் தாக்கக்கூடாது. இதே விஷயத்தை விசித்ராவிற்கு செய்தால் நிச்சயம் சும்மா விட மாட்டார்.
விசித்ராவிற்கு இந்த ஆட்டத்தின் சில தந்திரங்கள் புரியவில்லை. விஷ்ணு விளக்கமாக சொன்ன ஒரு பாயிண்ட்டை எடுத்துக் கொண்டு வந்து எதிர் தரப்பில் விசாரித்து விட்டு ‘என்னமோ போங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை” என்று சிரிப்புடன் சலித்துக் கொண்டார்.
“உங்களுக்கு வாக்கு தந்தபடியே உங்க கல்லை எடுக்கலை” என்று விசித்ராவிடம் பெருமிதமாக சொன்ன விஷ்ணு, விசித்ரா அகன்ற பிறகு “ராஜமாதா அங்க போய் என்ன பேசிட்டு இருக்காங்களோ.. நாம ஜெயிச்சதுல எதிர் பார்ட்டிக்கு வயித்தெரிச்சல் போல. எனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது?” என்று மணியிடம் ஜாலியாக அனத்திக் கொண்டிருந்தார்.
ஸ்ட்ராட்டஜி என்கிற பெயரில் தனது வெற்றியைக்கூட பின்னால் தள்ளி விட்டு எதிரணியை வீழ்த்துவதில் இவர்கள் காட்டிய முனைப்பு பற்றி இந்த வார பஞ்சாயத்தில் நிச்சயம் விசாரணை செய்யப்படும் என்று தெரிகிறது. அடுத்தடுத்த டாஸ்க்குளில் இன்னமும் என்னென்ன கலவரங்கள் ஏற்படுமோ?!
from விகடன்
Comments