'நியூ இயர், பொங்கல், குடியரசு தினம், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம், தீபாவளி' - இதெல்லாம் என்னதுன்னு தெரியுதா மக்களே? அத்தனையும் லீவு நாள். ஒவ்வொரு வருஷமும் காலண்டர் வந்ததும் என்ன பாக்கறோமா...இல்லையோ? கண்டிப்பா இந்த லீவு நாள்களை செக் பண்ணிடுவோம்.
இந்த லீவெல்லாம் எந்தத் தேதில வருதுங்கறது எல்லாம் முக்கியம் இல்லை...எந்தக் கிழமைல வருதுங்கறது தான் முக்கியம். 'யாரு கண்ணு பட்டுச்சோ...என்னவோ?' 2023 வருஷத்துல வந்த முக்கால்வாசி லீவுங்க சனி, ஞாயித்துக்கிழமைகள்ல தான் வந்துச்சு.
ஆமாங்க...வருஷத்தோட முதல் நாள் மற்றும் முதல் லீவான நியூ இயர் வந்ததே ஞாயித்துக்கிழமையில தான். 'அப்போவே நெஞ்செல்லாம் புண்ணாயிடுச்சு'. சரி...இது போனா போகட்டும்...நமக்கு தான் பல்க் லீவு பேக்கேஜ் 'பொங்கல்' இருக்குதுலன்னு பாத்தா, அது வந்ததும் ஞாயித்துக்கிழமை. பொங்கலோட அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் திங்கள்கிழமைல வருதுனு பாத்தா, அதுக்கு ஸ்கூல், காலேஜ்க்கு மட்டும்தான் லீவாமே...ஆபிஸுக்கு கிடையாதாமே.
என்ன உங்களோட பெர்சனல் வருத்தமெல்லாம் இங்க எட்டிப்பார்க்குதுன்னு நீங்க நினைக்கறது ஹெவியா இங்க கேக்குது. ஆனா தமிழ்நாட்டுல இருக்க மொத்த மக்கள் தொகையோட முக்கால்வாசி பேர் சார்பாதான் இங்க பேசிட்டு இருக்கேங்கறதை பதிவு செய்ய விரும்புறேன்.
அதுக்கப்புறம் வந்த குடியரசு தினம்...வியாழக்கிழமை வந்து புண்பட்ட நெஞ்சுக்கு லைட்டா ஆயின்மென்ட் போட்டுட்டுப் போச்சு. அடுத்து வந்த ரெண்டு மாசமான பிப்ரவரியும், மார்ச்சும் எப்போதும் போல வறண்ட பாலைவனமா ஒரு லீவுகூட இல்லாம கடந்து போச்சு. ஒரு லீவுகூட இல்லன்னு சொன்னதும் சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமை வந்துச்சுலன்னு உங்க மண்டை மேல பல்ப் எரியுதா? அதெல்லாம் வந்துச்சு தான் பாஸ்...ஆனா ஏதாவது விசேஷம் அல்லது பண்டிகை தினம் வந்து லீவு வந்துச்சாங்கறது தான் முக்கியமே.
எப்படியோ தமிழ் மாதிரியே இனிமையாவும், கருணையாவும் ஏப்ரல் மாசம் வந்த தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமைல வந்து மூணு நாள் லீவை வாரி வழங்குச்சு. அந்த மாசமே வந்த ரம்ஜான் சனிக்கிழமைல வந்து லைட்டா வருத்தத்தைத் தந்தாலும், தமிழ் புத்தாண்டுக்கு கிடைச்ச மூணு நாளு லீவு மனசை தேத்தி விட்டுச்சு.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு மே மாசத்துல வந்த ஒரே ஒரு லீவான மே தினம் திங்கள்கிழமை வந்து நம்மள காப்பத்திடுச்சு. ஜூன் மாசம் ஒண்ணும் இல்லாமப் போக, ஜூலை மாசம் கடைசில 29-ம் தேதி வந்த மொஹரம் பண்டிகை சனிக்கிழமை வந்தது 'ரொம்ப வருத்தம்பா'.
ஆகஸ்ட் மாசத்துல சுதந்திர தினம் செவ்வாய்க் கிழமை வந்தது 'சீக்கிரம் எந்திரிச்சு ஆபிஸ் கிளம்பணும்'னு இல்லாம கொஞ்சம் சுதந்திரமா தூங்கறதுக்கு உதவுச்சு.
அடுத்ததா செப்டம்பர். கிருஷ்ண ஜயந்தி புதன்கிழமையும், விநாயகர் சதுர்த்தி ஞாயித்துக்கிழமையும் வந்துச்சு. ஆனா விநாயகரோட கருணையா, அரசோட கருணையான்னு தெரியல...விநாயகர் சதுர்த்திக்கு திங்கள்கிழமையும் லீவு கிடைச்சுது கொஞ்சம் ஆறுதல். அதே மாசம் மிலாடி நபி வியாழக்கிழமை வந்து அதுவும் லீவு வாங்கித் தந்துடுச்சு.
அக்டோபர் மாசம் வந்த காந்தி ஜயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமினு மூணுமே வார நாள்லேயே வந்து நமக்கு நன்மையை வாரி வழங்கிடுச்சு. அப்புறம் டிசம்பர்ல வந்த கிறிஸ்துமஸும் திங்கள்கிழமை வந்தது நன்மை தாங்க.
என்னது அக்டோபர் அப்புறம் டிசம்பரா...இடையில வந்த நவம்பர் எங்க...அதுல வந்த தீபாவளி எங்கன்னு? நீங்க கேக்கறது கேக்குது. ஆனா இந்த வருஷம் வந்த லீவு கொடுமைகளின் உச்சமே அதுதான். தீபாவளி வந்ததே ஞாயித்துக்கிழமையில. இந்த உண்மைய மெல்லவும் முடியாமா, முழுங்கவும் முடியாம தவிச்சவங்க பல பேரு.
2023 தான் இப்படிப் போயிடுச்சு. 2024 எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு மனசை தேத்திகிட்டு பார்த்தா அதிசயம்...அற்புதம்...ஆச்சர்யம்.
'ஆரம்பமே அமர்க்களம்'ங்கற மாதிரி ஜனவரி மாசம் வர்ற நியூ இயர், பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், தைப் பூசம், குடியரசு தினம்னு அத்தனையுமே வார நாள்களேயே வந்து அருமையா தொடங்குது 2024.
பிப்ரவரி மாசம் ஒரு லீவும் இல்லைனா கூட, ஏப்ரல் மாசம் வர ரம்ஜான் வியாழக்கிழமை வர்றது கொஞ்சம் சந்தோஷம். 2024ல தமிழ் புத்தாண்டு தன்னோட கருணையைக் கொஞ்சம் கம்மி பண்ணி ஞாயித்துக்கிழமை வந்தாலும் 'தமிழ் வாழ்க'.
மே தினம் புதன்கிழமை, பக்ரித் திங்கள்கிழமை, மொஹரம் புதன்கிழமை, சுதந்திர தினம் வியாழக்கிழமை, கிருஷ்ண ஜயந்தி திங்கட்கிழமை, விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமை, மிலாடி நபி திங்கள்கிழமை, காந்தி ஜயந்தி புதன்கிழமை, ஆயுத பூஜை வெள்ளிக்கிழமை, விஜயதசமி சனிக்கிழமை, தீபாவளி வியாழக்கிழமை, கிறிஸ்துமஸ் புதன்கிழமைன்னு கிட்டத்தட்ட எல்லா பண்டிகைகளும் வார நாள்கள்ல வந்து 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி' மொமென்ட்டை வாரி வழங்க வெயிட் பண்ணிட்டு இருக்கு.
அதனால இந்த லீவுங்க சந்தோஷத்தை வாரி வழங்குற மாதிரியே, 2024 முழுவதும் உங்களுக்கு சந்தோஷம் வந்து கொட்ட அட்வான்ஸ் வாழ்த்துகள் மக்களே!
from விகடன்
Comments