சின்ன சின்னச் சண்டைகள், சமாதானங்கள், நகைச்சுவைகள் என்று இந்த எபிசோட் கலவையான உணர்ச்சிகளுடன் சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக ரவீனா மாமியாராகவும் அவருடைய பெண் ஜோவிகாவை காதலிக்கும் இளைஞனாக விஷ்ணு நடித்த நாடகம் ஜாலியான பட்டாசு. இது போன்ற பகுதிகளை அடிக்கடி உருவாக்கலாம்.
அடுத்த வார கேப்டனாக நிக்சன் தேர்வு. என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். பூர்ணிமாவின் ‘கதை நேரம்’ உண்மையிலேயே அருமை. பிராவோவின் கதை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக வெற்றி பெற்றது, இளைய தலைமுறையின் மாறுபட்ட சிந்தனையைக் காட்டுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
மாயாவின் செருப்பை சுவர் மீது தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. பிக் பாஸ் என்கிற பெயரின் மீது செருப்பைப் போடுவதின் மூலம் உலகத்திற்கு ஏதாவது செய்தியை உணர்த்த பூர்ணிமா விரும்பினாரோ, என்னவோ. இதெல்லாம் நண்பர்கள் குழுமத்தில் பொதுவாக நடக்கிற விளையாட்டு. இதைப் போய் துண்டாக எதற்கு எடிட்டிங் டீம் காட்டியது என்று தெரியவில்லை. பூர்ணிமாவும், மாயாவும் இத்தனை நெருக்கமான தோழிகளாக இருந்தாலும் இன்னமும் ஏன் ‘வாங்க.. போங்க’ என்று விளித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வடிவேலு மொழியில் சொன்னால் ‘உறுத்துதே!’
மொழியியல் ஆராய்ச்சியாளர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத, என்ன மொழியென்றே தெரியாத சத்தத்தில் ஒரு பாடல் ஒலித்தது. நாள் 54. விஷ்ணுவும் விக்ரமும் சக போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர்களைச் சூட்ட வேண்டும் என்கிற மார்னிங் டாஸ்க் தரப்பட்டது. இது சுவாரசியமாக இருந்தது. மாயாவிற்கு வைக்கோல் போர், பூர்ணிமாவிற்கு ‘சைதை தமிழரசி’, அக்ஷயாவிற்கு பருத்தி மூட்டை (எத்தனை முறை வெளியே அனுப்பிச்சாலும் மறுபடியும் குடோனுக்கே வந்துடுது!), சுரேஷிற்கு பதனி.. பதனி.., போன்ற ரகளையான பட்டப்பெயர்களை விஷ்ணு வழங்கினார்.
மணி - ரவீனா ஜோடிக்கு buy one, get one என்று பண்டிகை கால சலுகைத் திட்டம் மாதிரி விக்ரம் சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தார் ரவீனா. விசித்ராவிற்கு தண்ணி லாரி, (குழாயடிச் சண்டை), தினேஷிற்கு இம்சை அரசன் போன்ற அடையாளங்கள் வழங்கப்பட்டன. விக்ரம் எவ்வாறு மற்றவரின் பின்னால் ஒளிந்திருந்து சண்டை போடுவார் என்பதை சுரேஷ் ஜாலியாக நடித்துக் காட்டினார். ‘தொட்டாற்சிணுங்கி’ என்று அர்ச்சனாவிற்கு விஷ்ணு பெயர் சூட்டியதை அவர் ரசிக்கவில்லை.
‘அழுகாச்சிதான் என் அடையாளமா?’ - விஷ்ணுவிடம் ஆக்ரோஷமாக மோதிய அர்ச்சனா
இது தொடர்பாக விஷ்ணுவிடம் அர்ச்சனா வாக்குவாதம் செய்தது நன்று. ஆரம்ப நாட்களில் அவர் நிறைய அழுது கொண்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே அவரது அடையாளம் அல்ல. அதிலிருந்து நகர்ந்து இன்று மற்றவர்களை அவதானிப்பதிலும் உத்திகளை யூகிப்பதிலும் நிறைய முன்னேறியிருக்கிறார். அதைப் பற்றியும் மற்றவர்கள் பேச வேண்டும். நடிப்பு டாஸ்க்கில் அர்ச்சனா அழுததை மட்டுமே சுரேஷ் செய்து காட்டினார். இப்போது விஷ்ணுவும் அதையே ஒரு அடையாளமாக சுட்டிக் காட்டுவதை அர்ச்சனா எதிர்ப்பது நன்று. இல்லையென்றால் சீசன் முழுக்க இதையே தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.
‘வெற்றிநடை டாஸ்க்ல உன்னைப் பத்தி பெருமையாத்தானே சொன்னேன். இது சும்மா தமாஷூ” என்று சமாளித்துப் பார்த்தார் விஷ்ணு. ”‘யாரைப் பத்தி சொல்லப்படுதோ அவங்களும் சிரிச்சாதான் அது ஜோக். ஹர்ட் ஆச்சுன்னா அது ஜோக் இல்ல. வீக்” என்றெல்லாம் அர்ச்சனா இறங்கி அடிக்கவே “ஓகே.. ஸாரி” என்று இறங்கி வந்தார் விஷ்ணு. இந்த வாக்குவாதத்தின் இடையில், சந்தடிசாக்கில் “நீங்களும் பூர்ணிமாவும் பேசிட்டே இருக்கீங்க.. நீங்க லவ்வர்ஸ்ன்னு யாராவது அடையாளப்படுத்தினா எப்படியிருக்கும்?” என்று சர்காஸ்டிக் குண்டூசியை திறமையாக செருகினார் அர்ச்சனா.
‘சென்சிட்டிவ்-ன்னு சொல்லியிருந்தா அதுலயே எல்லாமே அடங்கிடும்’ என்று அர்ச்சனா சொன்னதும் நன்று. நீண்ட நேரமாக மல்லுக்கட்டுக் கொண்டிருந்த அர்ச்சனாவிடம் ‘எமோஷனைக் குறை..’ என்கிற மாதிரி நிக்சனும் பூர்ணிமாவும் அறிவுரை சொன்னார்கள். தனக்கு வந்தால்தான் தெரியும், தலைவலியும் திருகுவலியும்.
அடுத்த வார கேப்டன் - நிக்சன்
மணியின் கையில் ரிமோட் கண்ட்ரோல் இல்லாதது மட்டுமே குறை. மற்றபடி ரவீனாவின் சானல்களை தன் இஷ்டத்திற்கு மாற்ற முயல்கிறார். “ஏன் நிக்சன் கிட்டலாம் போய் விளக்கம் சொல்லிட்டு இருக்கே?” என்று ரவீனாவிடம் மணி ஆட்சேபிக்க, சற்று நேரம் பொறுத்துப் பார்த்த ரவீனா, ஒரு கட்டத்தில் எரிச்சல் தாங்காமல் சொன்ன திருவாசகம். “நான் உங்களை விட ஸ்மார்ட்”
கேப்டனுக்கான வாக்கெடுப்பில் நிக்சன், விஷ்ணு, ஜோவிகா ஆகிய மூவரும் தேர்வானார்கள். ஜோவிகாவை கேப்டன் ஆக்கி விட வேண்டும் என்று ஒவ்வொரு வாரமும் மாயா கேங் தலைகீழாக முயன்று பார்க்கிறார்கள். ம்ஹூம்.. அது நடப்பதில்லை. இந்தப் போட்டியில் நிக்சனுக்கும் விஷ்ணுவிற்கும் இடையில்தான் கடுமையான போட்டி. ரேம்ப்பில் நடந்து வருவதற்குள் ஒவ்வொரு முறையும் தடுமாறினார் விஷ்ணு. பூர்ணிமா கைத்தட்டி உற்சாகப்படுத்தும் போது அந்த உற்சாகத்தைப் பற்றிக் கொண்டு விராட் கோலி மாதிரி விஷ்ணு வெற்றியடைந்திருக்க வேண்டுமே?! ம்ஹூம். கடைசி தருணத்தில் போராடி நிக்சன் வென்றார்.
உண்மையாகவே இந்த வாரத்தில் நிக்சனுக்கு பிறந்த நாள் பரிசு கிடைத்து விட்டது. “இத்தனை நாள் ஒரு மாதிரி இருந்துட்டோம். இனிமே சண்டையில மண்டை உடைஞ்சாலும் ஒரு கை பார்த்துட வேண்டியதுதான்” என்று புதிய கேப்டனாக உற்சாகமாகியிருக்கிறார் நிக்சன். பிக் பாஸிற்கே ஐடியா தரும் அளவிற்கு பேசும் நிக்சன், அடுத்த வாரத்தில் என்னென்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும்.
வீட்டு வாசலில் விழுவது போதாதென்று, கேப்டன் டாஸ்க்கிலும் தொடர்ச்சியாக சறுக்கி விழும் ஜோவிகா, தோல்வி காரணமாக அழுது கொண்டிருக்க மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள். (‘என் பொண்ணுக்கு தொடர்ச்சியா தோல்வி கிடைக்கறதுல ஏதோ ஒரு உலக சதி இருக்கு. நான் சானல் மேல கேஸ் போடப் போறேன்’ என்று அடுத்ததாக வனிதாக்கா ஒரு வீடியோ போடாமல் இருக்க வேண்டும்!)
‘காஃபி பொடியோட ஒரு காரக்குழம்பு கல்யாணம்” - பூர்ணிமாவின் க்யூட்டான அனுபவம்
போட்டியாளர்கள் எதிர்கொண்ட பூகம்பத் தருணங்கள் வரிசையில் பூர்ணிமாவின் அனுபவம் நடைமுறை அதிர்ச்சியுடன் இருந்தது. ஆனால் கேட்பவர்களிடம் பரிதாபத்தைக் கோராத தொனியில் சிரிக்கச் சிரிக்க இதை பூர்ணிமா விவரித்தது நன்று. அவரது அனுபவத்தைக் கேட்ட போது ‘புது வசந்தம்’ திரைப்படம்தான் நினைவிற்கு வந்தது. நான்கு இளைஞர்களுடன் ஒரு பெண் தங்கியிருந்தாலும் அது ஆரோக்கியமான நட்பாக இருக்க முடியும் என்கிற கண்ணியமான சாத்தியத்தை வலுவாகப் பதிவு செய்த படம்.
“ஐ.டில ஜாப் கிடைச்சு, காதல் கல்யாணம் பண்ணி, காஃபிபொடி காரக்குழம்போட லைஃப்ல செட்டில் ஆயிடணும்ன்றதுதான் என்னோட சாதாரண கனவு. ஆனா ஐடில வேலை போயிடுச்சு. வீட்டிலயும் சொல்ல முடியாது. செலவுக்கு பணம் அனுப்பணும். குறைஞ்ச செலவுல வாடககைக்கு வீடு தேட வேண்டிய கட்டாயம். 11 ஆம்பளைப் பசங்க. நான் மட்டுமே பொண்ணு. அவங்களால துளி பிரச்சினை கூட இல்லை. தங்கம் அவங்க. ஆனா சுத்தியிருக்கறவங்க என்னைப் பத்தி மோசமா பேசி போலீஸ் வரைக்கும் புகார் செஞ்சுட்டாங்க. மறுபடியும் வீட்டிற்காக அலைஞ்சேன். வீடு கிடைக்க சிரமமா இருந்தது’ என்ற பூர்ணிமா, “பேச்சுலரா இருக்கற ஒரு ஆம்பளைப் பையனுக்கு கூட எப்படியாவது வீடு கிடைச்சுடும். ஆனா ஒரு பொண்ணுக்கு அப்படி கிடைக்காது” என்று சொன்னது முக்கியமான செய்தி.
“ஒரு சின்ன டவுனில் இருந்து கிளம்பி, நம்பிக்கை குறைவா இருந்த ஒரு பொண்ணுக்கு இன்னிக்கு சென்னைல சொந்த வீடு, கார் இருக்கு” என்று பூர்ணிமா தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து சொன்ன போது, ஏதோ நாமே அதை சம்பாதித்ததைப் போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. வெல்டன் மை பாய்!. ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்..’ என்கிற பாரதியின் வரிகளை கெத்தாக சொல்லி தன் உரையை முடித்துக் கொண்டார் பூர்ணிமா.
கதை நேரத்தில் கோல்டன் ஸ்டார் வென்ற பிராவோ
‘யாருடைய கதை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது?’ என்பதை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு கோல்ட் ஸ்டார் பரிசாகக் கிடைக்கும். இதில் அதிகமான சென்சிட்டிவைக் கொண்டது விசித்ராவின் கதைதான். எனவே அதற்குத்தான் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் “பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பாலியல் கொடுமைகள் நிகழ்கின்றன. இதைப் பதிவு செய்த பிராவோவின் அனுபவம்தான் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது” என்று அர்ச்சனா முன்வைத்த பாயின்ட்டை பின்னர் பலரும் வழிமொழிந்தார்கள்.
போட்டியாளர்கள் அனைவரும் 90’s கிட்ஸ்களாக இருந்தால் விசித்ராவின் கதைதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். ஆனால் 2கே கிட்ஸ், சம்பிரதாயமான யோசிப்பிலிருந்து வெளியே வந்து வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கான உதாரணம் இது. பெரும்பான்மையான வாக்குகளில் பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டு முதன் முறையாக கோல்டன் ஸ்டார் வென்றார். அதைப்போலவே வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொண்ட காரணத்திற்காக ‘மட்டன் சுக்கா’வையும் பரிசாக வென்றார். வெல்டன் மை பாய்!
ஜாலியாக நடந்த கலை நிகழ்ச்சிகள்
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரத்திற்காக வீடு மூன்று அணிகளாகப் பிரிந்து கலைநிகழ்ச்சி மூலம் பரப்புரை செய்ய வேண்டும். சின்னதாக இருந்தாலும் இந்த டாஸ்க் ஜாலியாக இருந்தது. இது போன்ற பகுதிகளை பிக் பாஸ் டீம் அடிக்கடி பிளான் செய்யலாம். டாஸ்க் துவங்குவதற்கு முன்பே மாயாவுக்கும் மணிக்கும் இடையில் ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. எந்த அணி முதலில் களத்தில் இறங்குவது என்பது தொடர்பாக ஒரு குழப்பம் ஏற்படவே, நடுவராக இருந்த மணியைப் பார்த்து ‘நீங்கள்லாம் ஒரு ஜட்ஜா?’ என்று மாயா ஜாலியாக கேட்டு விட்டார். இதனால் எரிச்சல் அடைந்த மணி “நீங்கள்லாம் ஒரு ஃபர்பாமரா.. நடிக்கத் தெரியல” என்று பதிலடி தந்தார். “இவங்க கூடல்லாம் நடிக்க முடியாது” என்று எரிச்சலுடன் ஒதுங்கினார் மாயா.
மாயாவிற்கும் மணிக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். இந்த லட்சணத்தில் மணியை நோக்கி எதையோ சொல்லி விட்டு ‘சும்மா ஜோக்’ என்று மாயா சொல்லலாமா? மணி பதிலடி தரும் போது மட்டும் ஏன் கோபம் வருவானேன்?.. டாஸ்க் முடிந்தும் புகைந்து கொண்டிருந்த இந்த விரோதம், பரஸ்பர மன்னிப்பிற்குப் பிறகு (தற்காலிக) முடிவிற்கு வந்தது.
மூன்று அணிகள் நடத்திய நாடகங்களில் ரவீனா, ஜோவிகா, விஷ்ணு, பிராவோ ஆகிய நால்வரும் இணைந்து நடத்திய பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. தசாவாதாரம் படத்தின் பாட்டி மாதிரி இருந்தார் ரவீனா. இவருடைய மகள் ஜோவிகாவாம். வீடு வாங்க விரும்பும் பேச்சுலரான விஷ்ணுவிற்கு அசலான சேல்ஸ்மேனே தோற்று விடுமளவிற்கு அக்ரஸிவ்வாக மார்கெட் செய்து கொண்டிருந்தார் பிராவோ.
தான் காதலிக்கும் பெண்ணுக்கு ‘சிங்கிள் மதர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘ஒரே அம்மா’ என்று சொல்லி காமெடியாக்கினார் விஷ்ணு. “மாப்ள” என்று விஷ்ணுவை ரவீனா அழைத்ததும் ஒட்டுமொத்த சபையும் வெடித்து சிரித்தது. இன்னொரு நாடகத்தில் பாட்டியின் உடல்மொழியை மாயா திறமையாக வெளிப்படுத்தினார். ஆனால் அந்த நாடகத்தில் சுவாரசியம் இல்லாததால் மாயாவின் நடிப்பு எடுபடவில்லை. இறுதியில் பிராவோ இருந்த அணி வெற்றி பெற்றது நன்று. தகுதியான வெற்றி.
சக நீதிபதியாக இருந்த அர்ச்சனா, ‘நீங்க ரெண்டு பேரும் பண்ணது குழந்தைத்தனமா இருந்தது” என்று மணியிடம் குற்றம் சாட்ட “உன்னை தொட்டாசிணுங்கின்னு சொன்னதுக்கு ஒரு மணி நேரம் வாக்குவாதம் பண்ணல்ல. அந்த மாதிரிதான் இதுவும்” என்று மணி பதிலடி தந்தது நன்று. இப்போதுதான் மணி வாயைத் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார்.
இன்று பஞ்சாயத்து நாள். கமலின் விசாரணை நடக்கும் தினம். என்னத்த சொல்லி!. பொறுத்திருந்து பார்ப்போம்.
from விகடன்
Comments