ஒரு பெண்ணுக்கு நிகழும் பாலியல் கொடுமைக்கு நிகரானது, ஆணுக்கு நிகழும் பாலியல் கொடுமை. அதைப் பற்றிய விழிப்புணர்வும் உரையாடலும் இங்கு குறைவாக இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பாலியல் சீண்டல்கள், ஆண் குழந்தைகளின் மீது நிகழும் வாய்ப்புகள் அதிகம். இந்த எபிசோடில் வெளிப்பட்ட பிராவோவின் கசப்பான அனுபவம், இந்த விஷயத்தைத்தான் உணர்த்தியது.
துணிச்சல் உள்ள பெண்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அனுபவத்தை பொதுவில் பகிரலாம். நீதி கேட்டு வெளிப்படையாக போராடலாம். ஆனால் ஆண்களால் அதைக் கூட சட்டென்று செய்து விட முடியாது. கேலிக்கு ஆளாவோமோ என்கிற கூடுதல் மனஉளைச்சல் காரணமாக மறைத்து விடும் வாய்ப்பே அதிகம். இந்தச் சூழலில் மாற்றம் வேண்டும். மனபாதிப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியானதுதான்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘வீட்டுக்குள்ள ஏதோ பிரச்சினைப்பா. உன்னைக் கூப்பிடறாங்க’ என்று நிக்சனை பதட்டத்துடன் அழைத்தார் விக்ரம். ஆனால் அந்தப் பதட்டம் ஒரு பாவனையே என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. என்னமோ ஏதோ என்று வீட்டிற்குள் சென்ற நிக்சனுக்கு ஆனந்த அதிர்ச்சி. அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிக் பாஸ் கேக் அனுப்பியிருந்ததைத்தான், மக்கள் ‘சர்ப்ரைஸ் பார்ட்டியாக’ கொண்டாடினார்கள். ‘ஒரு நாள் முதல்வர்’ போல, ஒரு நாளைக்கு நிக்சனை வீட்டின் கேப்டன் ஆக்கலாம்’ என்று பிறந்த நாள் பரிசைத் திட்டமிட்டார் தினேஷ். அது உண்மையான பரிசா அல்லது ‘இவங்களை கட்டி மேய்ச்சது போதும்ப்பா. ஒரு நாள் லீவு எடுத்துக்கலாம்’ என்கிற சலிப்பா என்று தெரியவில்லை.
‘கச்சா முச்சா’வென்கிற ஒரு பாடலுடன் நாள் 53 விடிந்தது. சுரேஷ் கீழே விழுந்து கிடக்கிறாரோ என்று அதிர்ச்சியுடன் பார்த்தால், இல்லை. பாடலுக்கு தரையில் உருண்டு நடனம் ஆடுகிறாராம். ‘உருட்டு அப்படி’ என்கிற ஷாப்பிங் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இதில் தோற்றால் அடுத்த வார நாமினேஷனில் ஒருவரை சேர்க்கலாம் என்று பிக் பாஸ் அறிவித்ததும் ‘அடிச்சதுடா லக்கி சான்ஸ்’ என்று வீடு மகிழந்தது.
தினேஷ் மீது வலுக்கும் எதிர்ப்பு உணர்ச்சிக்கு என்ன காரணம்?
‘சிறப்பான கேப்டன்’ என்று கடந்த வாரத்தில் பெயர் வாங்கிய தினேஷை, இப்போது வீட்டில் உள்ள பெரும்பாலோனோர் எதிர்ப்புணர்ச்சியோடு பார்க்கத் துவங்கி விட்டார்கள். தினேஷ் காட்டும் பாரபட்சங்கள் ஒருபுறம் இருக்க, விதிகளை அமல்படுத்துவதில் அவர் காட்டும் கறார்த்தனம் பகைமையை அதிகரித்து விட்டது. அது மட்டுமல்லாமல் வீட்டின் கூட்டணிகளும் மாறி விட்டன. இந்தக் கூட்டணி மாற்றங்களை இருக்கிற இடமும் கூட தீர்மானிக்கிறது.
பூர்ணிமா குழுவிற்கும் விசித்ராவிற்கும் இடையில் கடந்த நாட்களில் கடுமையான விரோதம் புகை போல பரவியிருந்தது. ஆனால் இப்போது பூர்ணிமா சின்ன வீட்டிற்குள் வந்திருப்பதால் விசித்ராவுடன் புதிதாக நட்புக் கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறார். ‘மேம். மேம்’ என்று விசித்ராவை இதுவரை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு ‘மேமின்’ அதீதமான செயல்பாடுகள் இப்போது நெருடலை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அவர் தினேஷின் ஆதரவாளராக இருக்கிறார். எந்த இடத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்ப மாறி விடுவதல்ல நேர்மை. எங்கிருந்தாலும் சரியான நிலைப்பாட்டைப் பின்பற்றுவதுதான் நேர்மை.
தினேஷ் மீது வீட்டாருக்கு எழுந்திருக்கும் மெஜாரிட்டியான எதிர்ப்புணர்ச்சிக்கு பின்னணி என்னவாக இருக்கும் என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.
சர்க்கரை பதுக்கல் விவகாரத்தில் விசித்ரா பிரதான குற்றவாளியல்ல. பூர்ணிமா ஆரம்பித்ததை மற்றவர்கள் உற்சாகமாக பின்பற்றினார்கள். ஆனால் வீட்டின் மூத்தவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் விசித்ரா, இதை அழுத்தமாக கண்டித்திருக்க வேண்டும். விளையாட்டிற்குக்கூட இதற்கு உடன்பட்டிருக்கக்கூடாது. ‘விதிமீறல் விசித்ரா’ என்று தனக்கு கிடைத்திருக்கும் அவப்பெயரை இதன் மூலம் சிறிதாவது துடைத்திருக்க அவர் முயன்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது அவருக்கு பூர்ணிமா குழுவின் ஆதரவு தேவையிருப்பதால் கண்டும் காணாமல் விட்டு விட்டார். இதுவே பூர்ணிமா எதிர் தரப்பில் இருந்திருந்தால் வன்மையாக கண்டித்திருப்பார்.
சர்க்கரை பதுக்கியது, வீட்டில் இருந்த இனிப்புகளை லபக்கென்று வாயில் போட்டுக் கொண்டது போன்றவற்றை ஏறத்தாழ அனைவருமே செய்தார்கள். ஆனால் விசித்ராவிடம் மட்டும் மிகையான வார்த்தைகளைக் தினேஷ் கொட்டியது நிச்சயம் தவறு. ‘உங்க பர்சனல் லைஃப்லயும் ஈகோ இருக்கக்கூடாது’ என்கிற விசித்ராவின் அதீதமான கமெண்ட், தினேஷின் கோபத்தைக் கிளறியிருக்க வேண்டும். அது அவருடைய சென்சிட்டிவ் பாயிண்ட்.
அதனால்தான் சர்க்கரை விவகாரத்தில் விசித்ராவை மட்டும் தினேஷ் கூடுதலாக டார்கெட் செய்திருக்கக்கூடும். பெரும்பாலான விரோதங்களுக்குப் பின்னால் கன்னாபின்னாவென்று பழைய கணக்குகள் சிக்கலாக பின்னியிருக்கின்றன. இந்த நாளின் கோபத்திற்குப் பின்னால் மூன்று வாரத்திற்கு முந்தைய சம்பவம் ஒன்று புதைந்திருக்கிறது. ஒருவிதமான தொடர்ச்சியோடு பார்த்தால்தான் இது புரிகிறது. ‘உங்களுக்கு நிகழ்ந்த வன்முறையைப் பிரச்சினையை ஏன் நீங்கள் தீவிரமாக பின்தொடரவில்லை?’ என்கிற தினேஷின் அபத்தமான கேள்விதான், விசித்ராவின் அந்த அதீதமான கமெண்ட்டிற்கு காரணமாக இருக்கலாம்.
விதிகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்
கேப்டன் பொறுப்பை சரியாக கையாளாமல் போனதற்காகத்தான் விக்ரம், யுகேந்திரன், இரண்டாவது வார பூர்ணிமா போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். முதல் வாரத்தில் கறாராக இருந்த விஜய் பாராட்டப்பட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக விதிகளை கறாராக அமல்படுத்த தினேஷ் முயல்வது சரியானது. அந்த அளவிற்கு வீட்டில் விதிமீறல்கள் பெருகியிருக்கின்றன. பெரும்பாலும் சரியாகவே ஸ்கோர் செய்யும் தினேஷ், சில இடங்களில் சறுக்கி விடுகிறார். குறிப்பாக மணி, ரவீனா, சுரேஷ் ஆகியோருக்கு காட்டும் பாரபட்சம்.
விதிமீறல் என்பது பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமில்லை. நாட்டிற்குமே கேடு தருவது. எந்தவொரு விதியும் சமூகத்தின் பொது நன்மைக்காகத்தான் கொண்டு வரப்படுகிறது. பொதுச் சமூகம் அதைப் புரிந்து கொண்டு தன்னியல்பாக விதிகளை பின்பற்றுவதுதான் முதிர்ச்சியின் அடையாளம். ஆனால் நடைமுறையில் அப்படியா இருக்கிறது? உதாரணத்திற்கு போக்குவரத்து விதிகளையே பார்ப்போம். விபத்து நிகழக்கூடாது, டிராஃபிக் ஜாம் ஆகக்கூடாது என்பது உள்ளிட்ட பல பொது நன்மைகளுக்காகத்தான் போக்குவரத்து விதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் நடைமுறையில் அவை சரியாகப் பின்பற்றப்படுகிறதா? சிறிது இடைவெளி கிடைத்தாலும் மற்றவர்களை இடித்துக் கொண்டு பயணிக்கும் அவசரம்தான் எங்கும் தென்படுகிறது. இந்த அவசரம்தான் பெரிய விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது என்பது தெரிந்தும் சுயநலப் போக்கு கண்களை மறைத்து விடுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நிகழ்வதும் இதுவே. கடுமையான எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றிற்குப் பின்னரும் விதிகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. டாஸ்க்கில் தோற்றால் சர்க்கரை அகற்றப்படும் என்பது விதி. இது சொல்லப்பட்ட பின்புதான் ஆட்டம் நடக்கிறது. அடிப்படையான உணவை பிடுங்குவது நியாயமா என்றால் இல்லை. டூத் பிரஷ் விவகாரத்தில், அடிப்படையான விஷயத்தை மறுக்கலாமா என்று கமல், மாயாவைக் கண்டித்தார். அடிப்படையான உணவான சர்க்கரையைப் பறிக்கலாமா என்று பிக்பாஸை கேள்வி கேட்க முடியாது. பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை நிரந்தர விதி என்ற ஒன்று கிடையாது. அடிப்படை வசதிகளை போட்டியாளர்களிடமிருந்து அகற்றி, அதன் மூலம் உருவாகும் பகைமைகளை, நெருக்கடிகளை போட்டியாளர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் அல்லது பலியாகிறார்கள் என்பதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான அம்சம்.
தினேஷை நாமினேட் செய்த போட்டியாளர்கள்
சர்க்கரையை இப்போதைக்கு அகற்றி இருந்தாலும் இரண்டு நாட்களில் பிக் பாஸ் நிச்சயம் அவற்றைத் திருப்பித் தந்திருப்பார். ‘அப்படியா உங்களை பட்டினி போட்டுடுவேன்’ என்று தாயுள்ளத்தோடு (?!) சொன்னவர் அவர். இந்த குறைந்தபட்ச தியாகத்தை (ஆரோக்கிய நோக்கில் இது நல்லதும் கூட) கூட செய்யத் தயாராக இல்லாமல் ஒரு சிறிய வசதியைக் கூட இழக்கத் தயாராக இல்லாமல் இருப்பது இவர்களின் சொகுசான மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. தட்டை கழுவும் சாதாரண வேலைக்கு கூட பல மணி நேரத்திற்கு பஞ்சாயத்து கூட்டுகிறார்கள்.
பூர்ணிமா குழு சர்க்கரையைப் பதுக்கினாலும் அதனுடன் உடன்படாமல் நேர்மையாக அவற்றை வெளியில் எடுத்தது, ஒரு கேப்டனாக தினேஷின் கடமை. இல்லையென்றால் அவர் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். மேலும் தனது ஆட்டத்தில் ஸ்கோர் செய்யவே அவர் விரும்புவார். விசித்ராவும் இந்த விதிமீறலைத் தடுப்பதில் இணைந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். ‘விதிமீறல் விசித்ரா’ என்கிற அவரது இமேஜ் சற்று மாறியிருக்கும். ஆனால் பூர்ணிமா குழு செய்யும் ராவடிகளுக்கு உடந்தையாக நிற்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இப்போது இருக்கிறார். கறார்த்தனமும் பாரபட்சமும் தினேஷிற்கு இப்போது எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொடுத்திருப்பது எதிர்பார்த்ததுதான்.
‘டாஸ்க்கில் தோற்றால் ஒருவரை அடுத்த வாரத்திற்கு நாமினேட் செய்யலாம்’ என்று சொல்லப்பட்டதும் வீடு உற்சாகமாகி விட்டது. ‘கேப்டனையும் நாமினேட் பண்ணலாமா?’ என்று விஷ்ணு கேட்டது, மற்றவர்களுக்கான ஒரு நல்ல சிக்னல். பூர்ணிமாவும் உற்சாகமாக கேன்வாஸ் செய்ததில் தினேஷை டார்கெட் செய்வது எனவும், அதற்காக ஆட்டத்தில் தோற்பது எனவும் பெரும்பாலோனோர் முடிவு செய்து கொண்டார்கள். ஆனால் பூர்ணிமாவின் நெருங்கிய தோழியான மாயாவிற்கு இதில் உடன்பாடில்லை. என்றாலும் தோழியின் கோபமான சிணுங்கலை எதிர்கொள்ளவும் அவர் தயாராக இல்லை.
திட்டமிடப்படியே ஆட்டத்தில் தோற்று தினேஷை அடுத்த வார நாமிஷேனுக்குள் கொண்டு வந்தார்கள். சர்வைவல் கேம் என்கிற நோக்கில் இந்த ஆட்டமும் சுவாரசியமானதுதான். தினேஷ் உள்ளூற இதை எதிர்பார்த்துதான் இருந்தார். காட்சியில் காட்டப்பட்ட நபர்களை வைத்துப் பார்க்கும் போது அர்ச்சனா, நிக்சன், ரவீனா ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே தினேஷைத்தான் நாமினேட் செய்தார்கள். இதிலிருந்தே வீட்டில் உள்ள கூட்டணியின் தற்போதைய நிலவரத்தை உணரலாம். மாயா கூட தினேஷை எதிர்த்துதான் வாக்களித்தார். அவருக்கு தினேஷைப் பிடிக்கும். ஆனால் மணி-ரவீனா மீது காட்டப்படும் பாரபட்சம் பிடிக்கவில்லை என்பதுதான் காரணம்.
வாரா வாரம் வீட்டிற்குள் மாறும் வானிலை
“எனக்கு இந்த கேம் பிடிச்சிருக்கு’ என்று நாமினேஷனை முடித்து விட்டு உற்சாகமாக வெளியே வந்தார் விசித்ரா. தினேஷ் அடுத்த வார நாமினேஷனில் வந்திருப்பது அம்மணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தினேஷ் இரண்டாவது முறை கேப்டன் ஆனதற்கு கடந்த வாரத்தில் மகிழ்ச்சி அடைந்தவரும் இதே விசித்ராதான். ஆனால் வாரா வாரம் வீட்டின் வானிலை மாறிக் கொண்டே இருக்கிறது.
‘ஸ்டார்களை வைத்து இருவரை நாமினேட் செய்யலாம் என்கிற கலந்துரையாடலில் மணி மற்றும் ரவீனா யாருடைய பெயரைச் சொன்னார்கள்?’ என்பதற்கான விடையை அறிய மாயாவிற்கும் பூர்ணிமாவிற்கும் குறுகுறுப்பு ஏற்பட்டது. அதற்கான விடை அவர்களுக்குத் தெரியும். என்றாலும் கலந்துரையாடலில் பங்கெடுத்து முடிவை அறிவித்த விஷ்ணுவின் வாயால் உண்மையை அறிந்து கொண்டார்கள். மாயாவின் பெயரைத்தான் மணி சொல்லியிருப்பார் என்பது வெளிப்படை. மாயா இதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டார். தக்க சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவாராக இருக்கும்.
“நீங்க பண்றதெல்லாம் பிடிக்குது. ஆனா ஸ்ட்ரிக்ட்டா தெரியுது” என்று தினேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரவீனா. ‘இதெல்லாம் ரொம்ப அடிப்படை. இதையே ஃபாலோ செய்யலைன்னா எப்படி?” என்று சலித்துக் கொண்டார் தினேஷ். தினேஷை நாமினேட் செய்த சுரேஷ் “நீங்க பண்றதெல்லாம் 200% கரெக்ட்டு. ஆனா நடைமுறைக்கு ஒத்துவராது” என்று சொன்னவர், அதற்காக சொன்ன உதாரணம்தான் ‘நச்’சென்று இருந்தது. ‘இந்தியன் தாத்தா ஸ்ட்ரிக்ட்டா பண்ணதெல்லாம் அவரோட பையனுக்கே பிடிக்கலையே?’
இந்தச் சமயத்தில் தினேஷ் சொன்ன ஒரு விஷயம் கவனிக்கத் தகுந்தது. ‘ஹெட்மாஸ்டர் மாதிரி நான் நடந்துக்கறதா சொல்ற இவங்களேதான், பிக் பாஸ் ஷோ மூலமா சமூகத்திற்கு ஒரு முக்கியமான கருத்தை சொல்றேன்னு சொல்றாங்க” என்று இதிலிருந்த முரணை சுட்டிக் காட்டினார். பாலியல் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு பிக் பாஸ் வீட்டின் வழியாக வெளிப்படுவது எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் விதிகளை நேர்மையுடன் பின்பற்றுவது.
வோல்ஃப் கேங் என்று தினேஷ் சொல்வது யாரை?
வீட்டில் மூன்று பிரதான குழுக்கள் இருந்தாலும் தனி இயக்கமாகவே செயல்படும் மாயாவும் பூர்ணிமாவும் இன்னொரு பக்கம் பேசிக் கொண்டிருந்தார்கள். “நாம என்ன பண்ணாலும் நமக்கு எதிர்ப்பாகத்தான் ஆகுது’ என்று அனத்திய பூர்ணிமாவிடம் “தினேஷை இப்ப நாமினேட் பண்ணியிருக்கவே கூடாது. அதுக்குப் பதிலா வீக்கான பிளேயரை அடிச்சிருக்கலாம்” என்றார் மாயா.
“தினேஷை எவிக்ட் பண்றது என் நோக்கமில்ல. அவர் அடுத்த வாரத்திற்கு கேப்டன் ஆகக்கூடாது. அவ்வளவுதான். அதுக்காக சின்ன வீட்ல எல்லார் கிட்டயும் பேசி ரெடி பண்ணேன். நான் சொல்லித்தான் மொத்தமாவே தினேஷைத்தான் நாமினேட் பண்ணாங்க’ என்று பூர்ணிமா பீற்றிக் கொள்ள “இருந்தாலும் விஷ்ணு ஓவர் ஆக்ட் பண்ணி சொதப்பிட்டாரு” என்று மாயா சொல்ல, அதை ஆமோதித்த பூர்ணிமா, பிறகு வெட்கத்துடன் “என்ன இருந்தாலும் he is a good guy” என்று சிணுங்க, “ஹலோ. உங்க லவ்வையெல்லாம் வெளில வெச்சுக்கங்க. ஆட்டத்துல வரக்கூடாது” என்று மாயா பாவனையாக கண்டிக்க, விஷ்ணுவை வைத்து இவர்கள் இருவரும் ஆடும் சீண்டல் ஆட்டம், ஒரு வகையில் க்யூட் ஆகத்தான் இருக்கிறது.
தாயும் மகளுமாக இருந்த விசித்ரா - அர்ச்சனாவை வீட்டின் அமைப்பு பிரித்திருக்கிறது. “தினேஷை நாமினேட் பண்ணதுல அர்ச்சனாவிற்கு சம்மதமில்லையோன்னு ஒரு டவுட் இருக்கு” என்று விஷ்ணுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விசித்ரா. “நீ ஏன் என்னை நாமினேட் பண்ணலை?” என்று அர்ச்சனாவிடம் தினேஷ் கேட்க “பாதுகாப்பான ஜோன்ல இருந்து சுத்தறவங்களைத்தான் மொதல்ல தூக்கணும். நீங்க கேப்டன் ஆகக்கூடாதுன்னு நெனச்சா அதை அடுத்த வாரம் கூட பண்ணிக்கலாம். ‘Worst performer’- ல ஓட்டுப் போட்டா வேலை முடிஞ்சது” என்று கெத்தாக பதில் சொன்னார் அர்ச்சனா. ‘பார்த்தீங்களாண்ணே.. எப்படி சரியான பாயிண்ட்டு?’ என்று இதை சுரேஷிடம் சொல்லி மகிழ்ந்தார் தினேஷ். பூர்ணிமாவிற்கான பதில் அர்ச்சனாவிடம் இருக்கிறது. தினேஷ் அடுத்த வாரமும் கேப்டனாக வரக்கூடாது என்றால் அதற்கு நாமினேட் செய்திருக்க வேண்டியதில்லை.
‘இந்த வாரத்துக்குள்ள பாருங்க.. வோல்ஃப் கேங்க்ல ஒண்ணு, ரெண்டு உடையும்” என்று ஆருடம் சொன்னார் தினேஷ். ஓநாய் என்று தினேஷ் குறிப்பிட்டது பூர்ணிமாவையா?! “மாயா ஏன் அண்டர்பிளே பண்றாங்க?” என்று ஆழமாக சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
பூகம்ப டாஸ்க்கில் வீடு தோல்வி - புதிய வரவுகள் நிச்சயம்
அடுத்த பூகம்ப டாஸ்க் துவங்கியது. என்ன பெரிய பூகம்பம்?! திருவிழாக்களில் சாலையோரத்தில் இருக்கும் கடைகளில் உள்ள ஆட்டம் மாதிரிதான். இதற்குத்தான் பூகம்பம், நிலநடுக்கம் என்று பயங்கரமாக பில்டப் தந்து விட்டார் பிக் பாஸ். இந்த ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பிற்கு மாயாவும் நிக்சனும் மட்டும் சென்றார்கள். மற்றவர்களால் அது இயலவில்லை. எனவே இந்த டாஸ்க்கில் தோல்வி. மொத்தமாக நடந்த மூன்று பூகம்ப டாஸ்க்குகளில் இரண்டில் வீடு தோல்வி அடைந்ததால், எத்தனை பேர் உள்ளே வருவார்கள், வெளியே போவார்கள் என்பது வார இறுதியில் தெரியுமாம். வாரம் முழுக்க விஜய் பாட்டு போட்ட ராசியோ, என்னமோ ‘மூக்குடைப்பு’ விஜய் உள்ளே வரப் போகிறார்.
போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட பூகம்பத் தருணங்களைப் பகிரும் டாஸ்க் தொடர்ந்தது. அடுத்த வந்த பிராவோ பகிர்ந்த அனுபவம், விசித்ரா சொன்னதற்கு நிகரானது. மீடியாவில் நுழைய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் தேடலைத் தொடர்ந்த பிராவோவிடம் “அதற்கு நான் பொறுப்பு” என்று வாக்களித்த ஒரு ஆசாமி, ஹோட்டல் அறையில் திடீரென்று பிராவோவிடம் பாலியல் ரீதியிலான அத்துமீறல் செய்ய ஆரம்பித்து விட்டிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பிராவோ, எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார். “இப்ப கூட அந்தப் பயம் என் கிட்ட அப்படியே இருக்கு. லிஃப்ட்ல வரும் போது சக ஆண் கூட வரதுக்கு கூட பயமாவே இருக்கும்” என்றது பரிதாபம்.
ஒரு பெண் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்ந்தால் கூட சமூகம் அதை அனுதாபத்துடனும் கோபத்துடனும் பார்க்கும். ஆனால் ஒரு ஆண் மீது இன்னொரு ஆண் நிகழ்த்தும் பாலியல் சீண்டல்களை நமட்டுச் சிரிப்புடன் பார்க்கும். இப்படியொரு சூழல் இருப்பதால், தான் எதிர்கொண்ட கொடுமையை ஒரு பெண் துணிச்சலாக பொதுவில் பகிர்வதைப் போல ஓர் ஆணால் துணிச்சலாக பகிர்ந்து விட முடியாது. தான் கேலிக்கு ஆளாவோமோ என்கிற அச்சத்துடன் மறைத்து விடுவான். பாதிக்கப்பட்டவருக்கே கூடுதல் வலியை அளிக்கும் சூழல் ஆண் எதிர்கொள்ளும் பாலியல் அனுபவங்களிலும் இருக்கிறது.
அடுத்து வந்த மணி “டான்ஸ் துறைல ஒரு மூலையிலாவது வந்து ஆட மாட்டோம்னு அதுக்காக ரொம்ப உழைச்சிக்கிட்டு இருந்தேன். அப்பதான் எங்க அப்பாவோட மரணம் நிகழ்ந்தது. அவருக்கு ஸ்மோக்கிங் பழக்கம் இருக்கு. நான் ஓரமா நின்னு ஆடிய அத்தனை வீடியோக்களும் அவர் போன்ல இருந்தது. அப்பதான் முடிவு பண்ணேன். ‘டான்ஸ்தான் என் கேரியர்ன்னு’. புகைப்பழக்கம் கொடியது” என்று கண்ணீருடன் தன் கதையைப் பகிர்ந்தார்.
தன்னுடைய சித்தப்பா பற்றி அறிமுக வீடியோவிலேயே பகிர்ந்திருக்கிறார் விஷ்ணு. இவரை பெரிய ஆளாக்கி பார்ப்பதுதான் சித்தப்பாவின் கனவாம். ஆனால் அவரது மறைவின் போது அருகில் இருக்க முடியாத சூழலை உருக்கமாகப் பகிர்ந்தார் விஷ்ணு. “அவரு பண்ணின கடைசி மொபைல் அழைப்பை எடுக்காம போயிட்டேன்ற குற்றவுணர்வு இன்னிக்கு வரைக்கும் இருக்கு” என்ற விஷ்ணுவின் உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒருவரின் வெளி நடவடிக்கைகளைப் பார்த்து அவர்களை நாம் மேலோட்டமாக மதிப்பிட்டு விடுகிறோம். ‘அவங்களுக்கு என்னப்பா.. ஜாலியா இருக்காங்க’ என்று நினைத்து விடுகிறோம். சிலரை அன்பு செய்கிறோம். பலரை வெறுக்கிறோம். வம்பு பேசுகிறோம். ஆனால் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் பிரத்யேகமான வலிகளும் துன்பங்களும் உண்டு. நம்மைப் போலவே அவர்களுக்கு உள்ளேயும் ஆழமான காயங்கள் உண்டு. அதைப் பார்க்கத் தெரிந்து விட்டால் யாரையும் வெறுக்கத் தோன்றாது.
இந்த வாரம் வெளியேறுவது ஒருவரா அல்லது இருவரா? யாரெல்லாம் வெளியயேற வாய்ப்புள்ளது என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!
from விகடன்
Comments