இந்த சீசனில், இதர கேப்டன்களோடு ஒப்பிடும் போது தினேஷின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. எதையும் தர்க்கபூர்வமாக அணுகுகிறார். கறாராக இருக்க வேண்டிய இடத்தில் அதைக் காட்டுகிறார்.விதிகளைப் பின்பற்றுவதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார். கோபம் வந்தாலும் அதிகம் வெடிக்காமல் அடக்கமான தொனியில் தன் கடுமையான ஆட்சேபத்தைப் பதிவு செய்கிறார்.
இப்போதைய நிலைமையில் ‘இந்த சீசனின் பெஸ்ட் கேப்டன்’ என்று தினேஷை உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அவரிடமும் சில பாரபட்சங்கள், குறைகள், சறுக்கல்கள் இருக்கிறதா? அது இந்த எபிசோடில் புலப்பட்டதைக் கவனிக்க முடிந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
விசித்ரா பகிர்ந்து கொண்ட அனுபவத்தையொட்டி தினேஷிற்கும் அவருக்கும் பிறகு விவாதம் ஏற்பட்டது. ‘இது போன்ற விவகாரங்களில் நடிகைகள் என்றால் கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது’ என்று விசித்ரா சொன்னது உண்மை. ஒரு சராசரி பெண் பாதிக்கப்பட்டால் கூட சமூகம் அனுதாபத்துடன் பார்க்கிற சாத்தியங்கள் அதிகம். ஆனால் பிரபலங்கள், நடிகைகள் என்றால் ‘ஆமாம்.. இவங்களைப் பத்தி தெரியாதா?’ என்று முன்தீர்மான வெறுப்புடன் மலினமாக அணுகும். அதிலும் கவர்ச்சி நடிகைகள் என்றால் இன்னமும் மோசம்.
இந்த விஷயத்தையொட்டி தினேஷ் அநாவசிய விவாதம் செய்தது ரசிக்கும்படியாக இல்லை. ‘நீங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்து கொண்டு சென்றிருக்க வேண்டும். விட்டு விட்டீர்கள்..’ என்றெல்லாம் விசித்ராவை குறை சொல்லிக் கொண்டிருந்தார். பாதிக்கப்பட்டவரின் மீதே விசாரணைகளைச் செய்யும் அதே அபத்தத்தைத்தான் தினேஷூம் செய்கிறார். போராட்டக் குணத்தோடு அந்தப் பிரச்சினையை தொடர்ந்திருக்க வேண்டும் என்று தினேஷ் சொல்லும் கோணம் சரி. ஆனால் எல்லோருக்குமே இது சாத்தியம் கிடையாது. விசித்ரா அடிப்படையான பல புகார்களை செய்து அதைப் பின்தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தவர்கள் காட்டிய அலட்சிய மனோபாவம் காரணமாக வெறுத்துப் போய் விலகி விட்டார். அது சார்ந்த அனுதாபத்தை அவருக்குத் தருவதுதான் முறையானது.
தினேஷின் கிராஃப் கீழே சரிகிறதா?
“ஒவ்வொரு வாரமும் இதுபோல ஏதாவதொரு தலைப்பைக் கொண்டு வந்து கவன ஈர்ப்பு செய்கிறார்” என்று விசித்ரா குறித்து தினேஷ் பிறகு சொன்னது இன்னொரு அபாண்டம். மற்ற விஷயங்களை ‘கன்டென்ட்’ ஆக பார்ப்பதில் கூட நியாயமுண்டு. இப்படியொரு வலி மிகுந்த சென்சிட்டிவ்வான விஷயத்தையும் அதே போல் பார்ப்பது முறையற்றது. பல விஷயங்களில் சரியாக யோசிக்கும் தினேஷ், சமயங்களில் இப்படி தடுமாறி விடுகிறார்.
இப்படியொரு தீவிர வாக்குவாதம் இவர்களுக்குள் சென்று கொண்டிருந்தது. தினேஷ் உறுதியான தொனியில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ‘நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கா தெரியறீங்க’ என்று பூர்ணிமா பிரமிப்புடன் சொல்ல, ‘அவர் தோற்றத்தை வெச்சு சொல்றியா?’ என்று மாயா குறுக்கே ஒரு வில்லங்கமான கட்டையைப் போட்டார்.
“ஹலோ.. நான் மென்ட்டலி ஸ்ட்ராங்குன்னு சொன்னேன். அவர் சொல்றதுல ஒரு நம்பிக்கை தெரியுது. ஏன் நான் சொல்றத திரிச்சு எதையோ சொல்றீங்க.. எனக்குப் பிடிக்கலை” என்று பூர்ணிமா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அவருக்கு முத்தா கொடுத்து மன்னிப்பும் கேட்டு சமாதானக் கொடியை உயரே பறக்க விட்டார் மாயா. வேறு யாராவது என்றால் மாயா இப்படி கீழே இறங்கி வந்திருக்க மாட்டார்.
சர்க்கரையைப் பதுக்கிய பூர்ணிமா, ஜோவிகா
‘நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும்’ என்கிற வாடகை டாக்குமென்ட் பாடலுடன் நாள் 52 விடிந்தது. கோல்டன் ஸ்டார் பெற்றவர்களின் பட்டியல் வெளியே வைக்கப்பட்டிருந்தது. மூன்று ஸ்டார்களைப் பெற்று மணி முதலிடத்தில் இருந்தார். அநியாயம். ரவீனாவை கண்ட்ரோல் செய்து கொண்டிருப்பதை விடவும் வேறு எதையும் மணி சிறப்பாக செய்யவில்லை. ‘என்னோட ஸ்டாரை நான் விஷ்ணுவிற்கு கொடுத்து விடுவேன்’ என்று சொல்லி விஷ்ணுவிற்கு இன்ப அதிர்ச்சி தந்தார் பூர்ணிமா. ‘கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன்’ என்று ரஹ்மானின் நல்ல பாட்டை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விஷ்ணு இளிப்புடன் பாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘கேட்க நல்லாவேயில்ல’ என்ற பூர்ணிமா, சட்டென்று மாற்றி ‘பாடுங்க. நல்லாத்தான் இருக்கு” என்றார். எனில் விஷ்ணுவை ஓட்டுகிறாரோ, என்னமோ.
‘கேப்டனுக்கு நான் நிக்கப் போறேன். ஆதரவளிங்க’ என்று விசித்ராவிடம் கேன்வாஸ் செய்து கொண்டிருந்தார் விஷ்ணு. ‘ஜோவிகா நிக்கறான்னா.. அவளுக்கு போட மாட்டேன். உனக்குத்தான் என் வாக்கு” என்று விசித்ரா சொன்னதில் இருந்து ஜோவிகா மீது இன்னமும் கோபத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது.
அடுத்த ஷாப்பிங் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். இதில் தோற்றால் சர்க்கரை மற்றும் உப்பு மட்டுமல்லாது அது தொடர்பான உணவுப்பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருந்து அகற்றப்படுமாம். ‘டாஸ்க் விளையாடறது பிக் பாஸ் வீடு. நாங்க ஏன் சர்க்கரை, உப்பு இல்லாம கஷ்டப்படணும்?’ என்று ஆட்சேபித்த சின்ன வீட்டினர், சம்பந்தப்பட்ட பொருட்களை ஆங்காங்கே பதுக்க ஆரம்பித்தனர். இந்த திருச்சேவையை பூர்ணிமா துவக்கி வைக்க ஜோவிகா உட்பட பலரும் உற்சாகமாக பின்பற்றினார்கள். கூடவே விசித்ராவும்.
டாஸ்க்கில் தோற்றனர். ‘பிக் பாஸ்.. ப்ளீஸ்.. நீங்க ஸ்வீட் பெர்ஸன் ஆச்சே.. இன்னொரு சான்ஸ் கொடுங்க” என்று இவர்கள் திருட்டுக் கெஞ்சு கெஞ்ச, “கரெக்ட். நான் ஸ்வீட்தான். அதனாலதான் சர்க்கரை கேக்கறேன்” என்று பழைய ஜோக் தங்கதுரை ரேஞ்சுக்கு அபாரமாக கவுன்ட்டர் தந்தார் பிக் பாஸ்.
கறாராக ரெய்ட் நடத்திய ‘வாத்தி’ தினேஷ்
‘வாத்தி கம்மிங்’ என்பது மாதிரி தனது ரெயிடை ஆரம்பித்தார் கேப்டன் தினேஷ். மக்கள் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த சர்க்கரை பாக்கெட்டுகளை வெளியே எடுத்தார். பிஸ்கெட் பாக்கெட்டையும் அவர் தூக்க “ஐயா.. யாருக்காவது சுகர் இருந்தா அவரையும் தூக்கிடாதீங்க” என்று அலறினார்கள். விசித்ராவின் மருந்து கவருக்குள்ளும் சர்க்கரை ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. விதிமீறல் நிகழக்கூடாது என்கிற நோக்கில் தனது வேட்டையை கறாராக நிகழ்த்தினார் தினேஷ். ஆனால் ஸ்கூல் மாணவர்கள் மாதிரி சர்க்கரையை ஒளித்து கைமாற்றி விளையாடி வெறுப்பேற்றினார்கள். இதற்கு விசித்ராவும் உடந்தையாக இருந்தார்.
‘விதிமீறல் செய்யாதீர்கள். விளைவுகள் இருக்கும்’ என்று கடந்த வாரத்தில் கமல் எச்சரித்தும் வீட்டில் பல விதிமீறல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. பூர்ணிமாவும் மாயாவும் மைக்கை மறைத்து ரகசியம் பேசிக் கொள்கிறார்கள். இப்போது இந்த சர்க்கரை விவகாரம்.
சர்க்கரையை ஒளித்து வைத்து அதையே ஒரு ஜாலியான ‘கன்டென்ட்’ ஆக்க முயன்றது என்கிற கோணத்தில் சரி. ஆனால் அந்த உற்சாகத்தில், இது விதிமீறல் கேட்டகிரியில் வரும் என்பதை உணர மறந்து விட்டார்கள். இவர்கள் அடித்த கூத்தினால் தினேஷ் பயங்கரமாக காண்டாகி விட்டதில் நியாயம் உள்ளது. அவர்தான் பிறகு பதில் சொல்லியாக வேண்டும்.
‘நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்கிற ரேஞ்சில் செயல்பட்ட பிக் பாஸ், கேஸ் இணைப்பை பிடுங்கி விட்டு தன் கெத்தைக் காட்டினார். பதுக்கிய பாக்கெட்டுகளை எப்படி திரும்ப வைக்கலாம் என்று ஆங்காங்கே திருட்டுத்தனமான முயற்சிகள் நடந்தன. இது தினேஷை இன்னமும் கோபமாக்கியிருக்க வேண்டும். ‘அப்பவே யெல்லோ கார்டு தந்திருக்கணும். உங்க வயது மற்றும் அனுபவத்துக்கு 2 ஸ்பூன் சர்க்கரையெல்லாமா திருடுவீங்க.. திருட்டுப் பட்டத்தோட போகாதீங்க” என்றெல்லாம் மிகையான வார்த்தைகளில் விசித்ரா மீது அடக்கமான கோபத்தை வெளிப்படுத்தினார். இது விசித்ராவை எரிச்சல்படுத்தினாலும் பதிலுக்கு சரிக்குச் சரியான கோபத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. ஏனெனில் தவறு அவர் பக்கம் இருக்கிறது.
வினையில் முடிந்த விளையாட்டு
திருடிய பொருளை ஸ்டோர் ரூமில் திருப்பி வைக்க மாயாவும் விக்ரமும் திருட்டுத்தனமாக முயன்றார்கள். ஆனால் கதவு திறக்கவில்லை. அதை நேர்மையாக கேப்டனிடம் ஒப்படைப்பதுதான் சரியான விஷயம். இவர்களின் லூட்டி கூடிக் கொண்டே சென்றதால் ‘போய் மன்னிப்பு கேட்டு எதையாவது பண்ணிக்கங்க' என்று டென்ஷனில் ஒரமாக அமர்ந்து விட்டார் தினேஷ். “பசிக்குது தல. இவங்க பண்ற தப்புக்கு சம்பந்தமே இல்லாதவங்க ஏன் பாதிக்கப்படணும்.. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்குது. நானும் இனிமேல் பண்ணப் போறேன். நான் மட்டும் என்ன அங்கிள்ஸா?” என்று பசியில் நிக்சன் பொருமிக் கொண்டிருந்தார். அவருக்கும் விசித்ரா மீதுதான் அதிக கோபம்.
அடுப்பு இன்னமும் ஆன் ஆகாததால் பிரெட்டை வைத்து மக்கள் சமாளிக்க தினேஷின் கோபம் அதிகரித்தது. நாளைக்கு என்ன பண்ணுவீங்க?’ என்று ஆட்சேபித்தார். 03:40 மணிக்கு ஒருவழியாக கேஸ் இணைப்பு வந்தது. ‘விசித்ரா மேமிற்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. நீங்க ஓவரா பேசிட்டீங்க. அவங்க கிட்ட மன்னிப்பு கேளுங்க’ என்று தினேஷின் கோபத்தில் பெட்ரோல் கேஸை பாய்ச்சினார் பூர்ணிமா.
“என்னை வெச்சு காமெடி பண்ணுவீங்க. நான் வந்து மன்னிப்பு கேட்கணுமா. நல்லா இருக்கே கதை. அதெல்லாம் முடியாது” என்று தினேஷ் மறுத்ததில் முழு நியாயம் உள்ளது. அவர்களின் அழிச்சாட்டியம் அந்த அளவிற்கு இருந்தது.
விசித்ராவின் வழக்கறிஞர் போல் செயல்பட்டு தினேஷிடம் பூர்ணிமா மன்னிப்பு கேட்கச் சொல்லி வாதாடுவது அப்பட்டமான முந்திரிக்கொட்டைத்தனம். கேப்டன்தான் இந்த விதிமீறலுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பது முன்னாள் கேப்டனாக அவர் உணர்ந்திருக்க வேண்டும். மேலும் விசித்ராவிற்கு மன்னிப்பு வேண்டுமென்றால் அவர் நேரடியாக கேட்டுக் கொள்ளட்டும். அவருடைய மௌத் பீசாக பூர்ணிமா மாறக்கூடாது. இத்தனை நாட்களாக விசித்ராவை கரித்துக் கொட்டி விட்டு, சின்ன வீட்டிற்கு ஷிப்ட் ஆனதால், விசித்ராவின் திடீர் விசுவாசியாக பூர்ணிமா மாறியிருப்பது ஒரு காமெடி. அர்ச்சனாவின் இடத்தைப் பிடிக்க நினைக்கிறாரோ, என்னமோ. இப்படி பல கோணங்கித்தனங்களை செய்து விட்டு ‘என்னை வில்லனா காண்பிக்கறாங்க’ என்று பூர்ணிமா அனத்துவது கூடுதல் காமெடி.
விசித்ராவின் ஓவர் போராட்ட அணுகுமுறை
“ஸாரி கேட்கறதுல என்ன ஈகோ.. ஸாரி சொல்ல கத்துக்கணும்..” என்றெல்லாம் இன்னொரு பக்கம் பொருமிக் கொண்டிருந்தார் விசித்ரா. சர்க்கரையை ஒளித்து வைத்து விளையாடியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா என்று தெரியவில்லை. ‘பர்சனல் லைஃப்ல கூட இவ்வளவு ஈகோ இருக்கக்கூடாது” என்றெல்லாம் விசித்ரா பேசியது ஓவர். இது தினேஷை கூடுதல் டென்ஷன் ஆக்கியது. ‘என் ஸாரிக்கு ஒரு வேல்யூ இருக்கு' என்று தினேஷ் சொல்ல “ஆமாம்.. ஒன்றரை கோடி ரூவா வேல்யூ” என்று உள்ளே இருந்து ஒழுங்கு காட்டினார் விசித்ரா.
“எனக்கு ஸாரி கேட்கறதுல பிரச்னையில்ல. ஆனா மனமார கேட்கணும். தப்பு செஞ்சது இவங்க. ஆனா என்னை ஸாரி கேட்கச் சொல்றாங்க” என்று தினேஷ் சொல்வதில் நியாயமுள்ளது. கடந்த வார விதிமீறல் விஷயத்தில் தண்டனை இல்லாமல் விசித்ரா தப்பினார். ‘இதுக்கு ஏதாச்சும் பண்ணனும் சார்.. மன்னிப்பு கேட்டு ஈஸியா தப்பிச்சுடாறங்க' என்று தினேஷ் கேட்டுக் கொண்டார். மீண்டும் அது தொடர்கிறதே என்று தினேஷ் கோபம் அடைவதில் நியாயமுள்ளது. சற்று கூடுதலாக வார்த்தைகளை விட்டாரே தவிர தனது கோபத்தை கட்டுப்பாட்டுடன் அவர் வெளிப்படுத்தியது நன்று. இதே விஷ்ணு போன்றவர்கள் என்றால் கதகளி ஆட்டமே ஆடியிருப்பார்கள்.
“தினேஷ் மன்னிப்பு கேட்காம நான் சாப்பிட மாட்டேன்” என்று லுலுவாய்க்கு ஒரு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த விசித்ரா, பிறகு ரகசியமாக பெட்டில் அமர்ந்து பிரெட்டை மொக்கிக் கொண்டிருந்தார். “நீங்க சொல்றதால சாப்பிடறேன்” என்கிற சால்ஜாப்பு வேறு. ‘அஹிம்சை போராட்டத்தில் வெற்றி’ என்று கமல் ஒருமுறை சொன்னாலும் சொல்லி விட்டார், விசித்ராவின் போராட்ட அலப்பறை தாங்கவில்லை.
பூகம்ப டாஸ்க் 2-ல் விஷ்ணு + ஜோவிகா கூட்டணி வெற்றி பெற்றது. பந்து உருட்டும் திருவிழா விளையாட்டிற்கெல்லாம் ‘பூகம்பம்’ என்று பெயர் வைத்து இத்தனை பில்டப் தந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டின் வாசற்படிக்கும் ஜோவிகாவிற்கும் ராசியே இல்லை. வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஓடி வந்த ஜோவிகா, வாசற்படியின் அருகே சறுக்கி விழுந்தார். “இந்த டாஸ்க்கில் அக்ஷயா போகட்டும்ன்னு நிக்சன் சொல்லிட்டு இருந்தான். அதனால டாஸ்க்ல வெற்றி பெற்றதற்காக நிக்சனின் முகத்தில் சந்தோஷமே இல்ல’ என்று மணியிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார் ரவீனா. அக்ஷயாவின் மீதான திடீர் ‘நிக்சன்’ பாசம் கவலைக்குரியது.
‘இவங்களை வெச்சு மேய்க்கறதுக்குள்ளே’...
வாக்குமூல அறைக்கு தினேஷை அழைத்த பிக் பாஸ் ‘தன்னிச்சையாக முடிவு செய்து’ வீட்டு வேலைக்கான அணிகளை பிரிக்கச் சொன்னார். அதற்கான குறிப்புகளையும் பிக் பாஸே தந்தார். பொதுவாக தன்னம்பிக்கையுடன் செயல்படும் தினேஷ், இம்முறை சற்று சொதப்பினார். ‘வேக்அப் பாடலுக்கு எழுந்திருக்காதவங்க, ஆடாதவங்க, டாஸ்க் லெட்டர் படிக்கும் போது லேட்டா வர்றவங்க’ போன்றவர்கள் பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியில் இருக்க வேண்டும். சிலர் இதை ஆட்சேபிக்க தினேஷ் அவர்களை கன்வின்ஸ் செய்ய முயன்றார். ‘நான் என்ன சொன்னேன்.. சுயமாத்தானே முடிவு எடுக்கச் சொன்னேன்’ என்று இந்தச் சமயத்தில் தலையிட்டார் பிக் பாஸ். ‘ஓகே பிக் பாஸ்’ என்று சொன்னாலும் தினேஷின் தடுமாற்றம் விலகவில்லை.
படுக்கையை ஒழுங்காக வைத்திருக்காதவர்கள் என்கிற பட்டியலில் நான்கு பெயர்களைச் சொல்லும் போது விசித்ராவும் ஜோவிகாவும் கடுமையாக ஆட்சேபித்தார்கள். “நான் வேலை செய்ய மாட்டேன்” என்று மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுத்தார் விசித்ரா. “என் படுக்கைதான் எப்பவும் ஒழுங்கா இருக்கும். இப்ப சின்ன வீட்டுக்கு வந்து சமையல் வேலை செய்யறதால டைம் கிடைக்கலை” என்று இந்தத் தேர்வை மறுத்தார் ஜோவிகா.
‘இதுதான் என் சாய்ஸ். பிக் பாஸ் எனக்குத் தந்த பவர்’ என்று கறாராக சொல்லாமல் அவர்களை கன்வின்ஸ் செய்வதிலேயே தொடர்ந்து ஈடுபட்டார் தினேஷ். “ஜோவிகா... நீங்க தர்ற விளக்கத்தினால், நீங்க செய்யற வேலை இப்ப வெளியில் தெரியும்தானே?” என்று தினேஷ் சொன்னது நல்ல டைமிங்கான சமாளிப்பு. புத்திசாலித்தனமான கன்வின்ஸிங்.
மணி, ரவீனா, சுரேஷ் பற்றி தினேஷ் எப்போதுமே குறை சொல்ல மாட்டார் என்று மக்கள் பிறகு பேசிக் கொண்டார்கள். இந்தப் பாரபட்சம் உண்மையென்றால் தினேஷின் கேப்டன்சியில் குறையுள்ளது என்றே பொருள். இந்த சீசனின் சிறந்த கேப்டன் என்று பார்த்தால் தினேஷ்தான் முதலிடத்தில் இருக்கிறார். லாஜிக்காக விளக்குவது. கன்வின்ஸ் செய்வது, கோபம் வந்தாலும் அதை அடக்கமான தொனியில் சொல்வது போன்று பல இடங்களில் ஸ்கோர் செய்து வருகிறார். ஆனால் அதை முழுமையாகச் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
‘இந்த விசித்ரா மேம் ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ?’ என்று தன்னுடைய குருவின் மீதே ஆட்சேபம் தெரிவித்து சலித்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. “ஆமாம்.. அவங்க பெட் சுத்தமா இருக்காது” என்று ஆமோதித்தார் சுரேஷ்.
“கடவுளே.. இவங்களை வெச்சு வேலை வாங்கறதுக்குள்ள போதும்.. போதும்ன்னு ஆயிடுது. ஷூட்டிங் வந்த மாதிரியே இருக்காங்க. ஒருவேலையும் செய்யறதில்ல. ஏதோ சொல்றதால நீ மட்டும்தான் செய்யறே” என்று வீடு பெருக்கிக் கொண்டிருந்த நிக்சனிடம் அனத்திக் கொண்டிருந்தார் தினேஷ். “ண்ணோவ்.. இவங்க வாங்கற சம்பளத்துக்கு நானா இருந்தா ஒட்டுமொத்த வீட்டையும் பெருக்குவேன்” என்று நிக்சன் சொன்னது “மூணு ரூவா. மூணு ரூவாடா.. அதைக் கொடுத்தா நைட்டு முழுக்க கண்ணு முழிச்சு வேலை பார்ப்பேன். கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேலை பார்க்க மாட்டேன்னு சொல்ல வெச்சிட்டியே. டேய் தகப்பா’ என்று அனத்தும் ‘சின்ன தம்பி’ கவுண்டமணி காமெடி நினைவிற்கு வந்தாலும், கடுமையான உழைப்பிற்கு தயாராக இருக்கும் அடித்தட்டு மக்களிடம் இருக்கும் போக்கை நிக்சனிடம் பார்க்க முடிந்தது.
“என் கேப்டன்சியை காலி பண்ணணும்னு முடிவு பண்ணிட்டாங்க.. அதுக்கான வேலைகளைத்தான் பண்றாங்க” என்று தினேஷ் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். இந்த விதிமீறல் விஷயத்திற்கு, இந்த வாரத்திலாவது கமல் ஒரு முடிவு கட்டினால் சரி. ‘மக்கள் மேலயும் இவங்களுக்கு பயமில்ல. பிக் பாஸ் மேலயும் இல்ல. உங்க மேலயும் இல்ல சார்’ என்று கமலின் விசாரணை நாளில் அர்ச்சனா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
இந்த வாரம் வெளியேறப் போவது யார்? தினேஷ் சிறந்த கேப்டனா? அவரது செயல்பாடுகள் குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
from விகடன்
Comments