விசித்ரா பகிர்ந்து கொண்ட ஒரு கசப்பான அனுபவம்தான், இந்த எபிசோடின் உண்மையான பூகம்பத் தருணம். பணியிடங்களில் பெண்கள் எவ்வாறெல்லாம் பாலியல் அத்துமீறல்களால் அவதிப்படுகிறார்கள் என்பதற்கு விசித்ராவின் அனுபவம் ஒரு நல்ல உதாரணம்.
பெண்கள் மீது ஆபாசமான நகைச்சுவைகளைச் சொல்லி மகிழ்பவர்கள், தொடர்ந்து சீண்டுகிறவர்கள், தங்களின் பலம், அதிகாரத்தைக் கொண்டு பாலியல் அத்துமீறல்களைச் செய்பவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியவர்கள். கண்டனங்களுக்கும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட வேண்டியவர்கள்.
பாலியல் குற்றம் செய்பவர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் துறைகளில் திறமைசாலிகளாக இருக்கலாம். அதையொட்டி அவரின் குற்றத்திற்காக மற்றவர்கள் பரிந்து பேசுவதை விடவும் முறையற்ற செயல் ஒன்று இருக்க முடியாது. மதம், சாதி, பாலினம், செல்வாக்கு போன்று எந்தவொரு அரசியலும் பாலியல் குற்றங்களின் இடையில் வருவதற்கு பொதுச் சமூகம் அனுமதிக்கக்கூடாது. அதையொட்டி ஒருவரின் குற்றத்தை மூடி மறைக்க முயலக்கூடாது. இதை ஆதரித்துப் பேசுவதும் ஒருவகையில் குற்றத்திற்கான உடந்தைதான்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘ரஞ்சிதமே… ரஞ்சிதமே’ என்கிற பாடலுடன் நாள் 51 விடிந்தது. பார்வையாளர்களின் கருத்துக் கணிப்பின்படி இந்த வாரம் முழுக்க விஜய் நடித்த திரைப்படங்களிலிருந்து ‘வேக்கப் பாடல்’ ஒலிபரப்பாகுமாம். இதைத்தான் பூகம்பம் என்று பிக் பாஸ் முன்னரே எச்சரித்தாரோ, என்னமோ. இந்தப் பாடலுக்கு கை பம்பு அடிப்பது போன்ற பாவனையுடன் மக்கள் ஆவேசமாக நடனம் ஆடினார்கள்.
மாயா மீது பூர்ணிமா பொசசிவ் ஆக இருப்பது குறித்த விசித்ராவின் கிண்டல், அதை பாவனையாக மறுக்கும் பூர்ணிமா, ரவீனா ஆடும் சேஃப் கேம், மிக்சர் பார்ட்டிகளை வெளியே அனுப்ப பிக் பாஸ் பிளான் பண்ணுவதாக சொல்லும் விஷ்ணு ஆகிய வம்புகளைத் தொடர்ந்து வீட்டில் பூகம்ப சத்தம் கேட்டது. ‘சூப்பரப்பு… டாஸ்க் ஆரம்பித்து விட்டது. இனி ஆட்டம் களை கட்டும்’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் பந்தை உருட்டி விளையாடும் டாஸ்க்கை தந்தார் பிக் பாஸ். (ஓ…இதுதான் அந்த பூகம்பமா?!)
ஆரம்பித்தது பூகம்ப டாஸ்க் -1
ஐந்து அடுக்குகளைக் கொண்ட டிரேவில் பந்தை இடதும் வலதுமாக சாய்த்து சாய்த்து டிரேவின் முனைக்கு கொண்டு வந்து கீழே இருக்கும் பக்கெட்டில் 5 பந்துகளை சரியாக போட வேண்டும். மொத்தமுள்ள 14 பேரில், குறைந்தபட்சம் 10 பேர் ஜெயிக்க வேண்டும். முதலில் விஷ்ணுவும் தினேஷும் துணிச்சலாக களம் இறங்கினார்கள். ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு சுதாரித்துக் கொண்டார்கள். முதல் பந்தை வெற்றிகரமாக போட்டார் விஷ்ணு. மக்கள் பதட்டத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஸ்டியரிங் பிடித்து பஸ் ஓட்டுவது போல் இப்பொழுதே அந்த டாஸ்க்கை கற்பனையில்செய்து வார்ம்-அப் ஆகிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
கிரிக்கெட் போட்டியை டிவியில் வேடிக்கை பார்க்கும் 10 வயது சிறுவன், ‘என்னடா பால் போடுறான்?’ என்று பிரபல பௌலர் குறித்து சலித்துக் கொள்வதைப் போல, இந்த டாஸ்க்கை வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ், “இந்த இடத்துல ஸ்லோவா ஆடணும்” என்று சோபாவில் உட்கார்ந்து டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னதான் முயற்சித்தாலும் இந்த டாஸ்க்கில் விஷ்ணுவும் தினேஷூம் தோற்றார்கள். வெளியே வந்த தினேஷ் அதன் நுட்பங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘என்னை வில்லனாக காண்பிக்கிறாங்க’ என்று நூற்றியோராவது முறையாக அனத்தி சாதனை செய்தார் பூர்ணிமா. ‘நான் பெட்டரான பிளேயர். ஆனா அர்ச்சனாவை ஹீரோவா காண்பிக்கிறாங்க. நினைக்க நினைக்க காண்டாகுது” என்று பூர்ணிமா புலம்ப “முதல் அடி எனக்குத்தான் விழுது” என்று மாயா சொல்வது உண்மை. “ஆனா மன உளைச்சல் எனக்குத்தான் அதிகம். உங்களுக்குப் புரியல” என்று புலம்பலைத் தொடர்ந்தார் பூர்ணிமா.
சூட்சுமமாக ஆட வேண்டிய பிக் பாஸ் ஆட்டம்
பூர்ணிமா இப்படி தொடர்ந்து அனத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நமக்கு காட்டப்படாத கோணங்களும் இருக்கிறதா என்று தெரியவில்லை. பிக் பாஸ் டீம் ஒவ்வொரு எபிசோடையும் எப்படி சமைத்து தருகிறார்களோ அப்படித்தான் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். 24 மணி நேர வடிவத்தைப் பார்த்தாலும் கூட இதேதான். எடிட்டிங் உருட்டு அப்படி. ஆனால் காட்சிகளின் இடைவெளியை வைத்து என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை சற்று மெனக்கிட்டு பார்த்தால் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஆட்டத்தை பூர்ணிமா தனியாக ஆடி இருந்தால் இப்படி புலம்ப நேர்ந்திருக்காது.
பிக் பாஸ் ஆட்டம் என்பது வீம்பு பிடித்த குதிரையில் சவாரி செய்ய முயல்வது போல. மேலே ஏறச் சென்றால் மூர்க்கமாக கீழே தள்ளிவிடும். முன்னே போனால் கடிக்கும். பின்னே சென்றால் உதைக்கும். ஒருவர் மிக ஆக்ரோஷமாக ஆடினால் மக்களிடம் எளிதில் கெட்ட பெயர் சம்பாதிக்கும் விபத்து அதிகம். அதற்குப் பயந்து அடக்கி வாசித்தால் கேமராவில் தெரியாமலேயே போய் விடுவோம். அதற்காக இயல்புத்தன்மையையும் விட்டுக் கொடுக்க முடியாது. இவற்றிற்கு இடையில் எங்கேயோ ஒரு சூட்சுமமான மீட்டர் இருக்கிறது. அதை வெற்றிகரமாக கைப்பற்றுபவர்கள்தான் நீண்ட நாட்கள் தொடர முடியும். அப்படியே தாக்குப் பிடித்தால் டைட்டில் கூட கைப்பற்றலாம். (உதாரணம்: ரித்விகா)
பந்து உருட்டும் டாஸ்க்கில் மக்கள் சிரமப்படுவதால் எக்ஸ்ட்ரா டைமை கருணையுடன் தந்தார் பிக் பாஸ். இரண்டாவது சுற்றில் ஆடுவதற்காக நிக்சனும் மணியும் சென்றார்கள். நிக்சன் திறமையாக ஆடத் தொடங்கினார். கூல் சுரேஷ் பெயரை சொன்னவுடனேயே பந்து தடுமாறி விழுந்தது. அந்தப் பெயரின் ராசி அப்படி. இருவருமே வெற்றிகரமாக இந்த டாஸ்க்கை முடித்தார்கள்.
பொறியலில் மறியல் செய்த கூல் சுரேஷ்
அடுத்ததாக பொறியலில் ஒரு மறியலை ஆரம்பித்தார் சுரேஷ். அது அவரது அழுகையில் போய் முடிந்தது. இந்த விவகாரத்தை இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அன்றைய மதிய உணவில் மெயின் மெனு சிக்கன். அசைவப் பழக்கம் இல்லாத சிலருக்கு மட்டும் கேரட் பொரியல் தனியாக செய்யப்பட்டது. அதில் மிகுதியாக இருந்ததை தாய்ப் பாசத்துடன் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பிரித்துக் கொடுத்தார் விசித்ரா. மற்றவர்களின் தட்டைப் பார்த்து விட்டு சுரேஷ் போய் கேட்கும் போது “வெஜிடேரியன்களுக்குன்னு தனியா செஞ்சிருக்காங்க. இருந்தா வாங்கிக்கங்க” என்று தினேஷ் முன்னெச்சரிக்கையாகச் சொன்னது சுரேஷ் மனதை வருத்தமடைய செய்திருக்க வேண்டும். “இங்க வாங்க தரேன்” என்று விசித்ரா அழைத்தார். அதை வாங்கிச் சாப்பிட்டு முடித்தாலும் சுரேஷின் மனவருத்தம் போகவில்லை.
பின்னர் முகத்தைக் கோணி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார் சுரேஷ். இது மற்றவர்களுக்கு உள்ளூர சிரிப்பையும் வெளியே திகைப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம். “வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடுங்க. இதுக்கு ஏன் கஷ்டப்படறீங்க?” என்று சமாதானப்படுத்தினார்கள். “பொறியலுக்காகவா அழுவாங்க ஒரு பெரிய மனுஷன்?” என்றார் நிக்சன்.
உணவு சமைக்கத் திட்டமிடும் போது சைவ உணவுக்காரர்கள் தங்களுக்காக சமைப்பது உலக வழக்கம்தான். அந்த உணவு மிகுதியாக இருந்தால் மற்றவர்களுக்கு பங்கிடலாம். ‘அது கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி’ என்றுதான் மற்றவர்கள் இருக்க வேண்டும். “எனக்கு வெஜிடேரியன் வேண்டும்” என்று சுரேஷ் முதலிலேயே சொல்லி இருந்தால் அதற்கேற்ப பொருட்களை வாங்கியிருப்பார்கள். சமைத்திருப்பார்கள். ஆனால் அசைவ உணவு வழக்கமுள்ள சுரேஷ், ‘திடீரென்று பொரியல் கொடுங்கள்’என்று கேட்கும் போது அது சைவ உணவுக் காரர்களுக்கு போதாமையை ஏற்படுத்தக்கூடும். ‘மற்றவர்களுக்கு கொடுக்க இருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி இல்லாமல் போனது?’ என்பது சுரேஷின் ஆதங்கம்.
“வெஜிடேரியன் சமைச்சா.. அதுக்குண்டானவங்க மட்டும் வெச்சு சாப்பிடுங்க… பாவம் பார்த்து மத்தவங்களுக்கு கொடுக்காதீங்க” என்று தினேஷ் கறாராகச் சொல்வது ஒரு வகையில் சரி. விசித்ரா அப்படி பாசத்தில் தந்ததால்தான் இந்தக் குழப்பம் நேர்ந்தது. இந்த லாஜிக் விசித்ராவுக்கு புரியவில்லை. “கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்து கொண்டால் போகிறது. என்ன இப்போ?” என்று சொன்னார். இது வீடுகளில் சரி. ரேஷன் முறை கொண்ட பிக் பாஸ் வீட்டில் இப்படி தாராளமான பார்வையோடு செயல்படுவது சிக்கனைத்தான்… மன்னிக்கவும்... சிக்கலைத்தான் ஏற்படுத்தும்.
பொதுவாக நகைச்சுவை உணர்வு உள்ளவர்களின் மறுபக்கம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். எளிதில் மனம் புண்படுவாாகள். ‘உணவுக்காக இப்படி நிற்க வேண்டி வந்ததே’ என்கிற சுயபச்சாதாபத்தில் சுரேஷ் கலங்குவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக ‘நான்வெஜ் உணவு தரவில்லை’ என்றுதான் அடி தடியே நடக்கும். வெட்டுக்குத்திற்கு போன சம்பவமெல்லாம் உண்டு. ஆனால் உலக வரலாற்றிலேயே கேரட் பொறியலுக்கு ஒருவர் மனம் புண்பட்டது இதுதான் முதன்முறை.
‘வாழ்க்கை ஒரு வட்டம்’
இதில் சுரேஷிற்குமான பாடமும் உள்ளது. ஆயில் இல்லாத சப்பாத்தியை அக்ஷயா கேட்டதால் இரண்டு எபிசோடுகளுக்கு அவரை வறுத்து எடுத்தார் சுரேஷ். ‘அப்படியெல்லாம் ஸ்பெஷலா சமைக்க முடியாது. இது ஒன்றும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல’ என்றெல்லாம் அதிரடியாக பேசி அக்ஷயாவின் வாயை மூடினார். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல சுரேஷிற்கும் அதே அனுபவம் இன்று வந்து சேர்ந்திருக்கிறது. அவருக்கு மட்டும் அல்ல, இது நமக்கும் கூட ஒரு பாடம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். அரசன் அன்றே கொல்வான். பிக் பாஸ் தெய்வம் இரண்டு எபிசோடுகள் கழித்து தண்டனை கொடுக்கும்.
மாயாவும் பூர்ணிமாவும் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட ஒரு பிரத்தியேகமான சைகை மொழியில் பேசுகிறார்கள். பல சமயங்களில் அவை புரிவதில்லை. சுரேஷ் அழுததை பாவனையாக மாயா கிண்டல் செய்ய, “இப்படித்தான் முன்ன ஒன்னு அழுதுட்டே இருந்தது. அதை மறுபடியும் வர வச்சிடுவோமா?” என்று பூர்ணிமா சொன்னது வினுஷா குறித்ததாக இருக்கலாம். “அது வந்தா நாம வெளியே போகணுமே” என்றார் மாயா. பிறகு விஷ்ணு குறித்து இருவரும் கிளுகிளுப்பாக ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘அவன் நல்ல பையன்.. யோசிச்சு சொல்லுங்க. அவருக்கு உங்களைப் பிடிச்சிருக்கு” என்றார் மாயா. விஜய் டிவி ராமர் பாணியில் இதைச் சொல்ல வேண்டும் என்றால் ‘மாயூ… நீங்க இப்ப செஞ்சிட்டு இருக்க காரியத்துக்கு என்ன பெயர் தெரியுமா?’
பந்துருட்டும் டாஸ்க் தொடர்ந்தது. விசித்ராவும் அர்ச்சனாவும் அடுத்து செல்வதற்கு தயார் ஆனாார்கள். “ஒருவர் தோற்றால் கூட அடுத்து வருபவர்களுக்கு பிரச்சனையாகி விடும். எனவே நபர்களை யோசித்து அனுப்புங்கள்” என்று முன்னெச்சரிக்கை தந்தார் பிக் பாஸ். தயாராக எழுந்து விட்ட விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தடுத்தால் நன்றாக இருக்காது, பிறகு பிரச்சினையாகி விடும் என்று மக்கள் கருதினார்களோ என்னமோ. அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். “உங்களுக்கு ஆட்சேபம் இருந்தா இப்பவே சொல்லிடுங்க” என்று விசித்ரா சொன்ன பிறகும் அந்தக் கூட்டணியையே அனுப்பியது தவறான முடிவு. ஒருவேளை அதுதான் ஸ்ட்ராட்டஜியோ என்னமோ!.
இரண்டு பேரும் ஆட்டத்தில் மிகவும் தடுமாறித் தோற்றார்கள். எனவே பூகம்ப டாஸ்க்கின் முதல் பகுதியில் வீடு தோல்வி அடைந்தது. எனவே அடுத்த வாரத்தில் ஒருவர் உள்ளே வருவதும் ஒருவர் வெளியே கூடுதலாக செல்வதும் உறுதியாகி விட்டது. மூக்கில் குத்தும் விஜய் வர்மா முதலில் வருவார் போலிருக்கிறது.
போட்டியாளர்கள் எதிர்கொண்ட பூகம்பத் தருணங்கள்
‘உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பூகம்ப தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று அடுத்த ஆட்டத்தை உதறி எடுத்தார் பிக் பாஸ். இது ஒரு வகையில் ‘அழுகாச்சி’ டாஸ்க். முதலில் வந்த தினேஷ் தனது மணவாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவு பற்றி உருக்கமாகத் தெரிவித்தார். நீண்ட காலமாக அது சார்ந்த மன உளைச்சலிலும் பிரிவுத் துயரத்திலும் இருந்தவர் இப்போதுதான் தன்னை மெல்ல மீட்டு எடுத்துக் கொண்டு வருகிறாராம். ‘அவங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்திருக்கும்' என்று இணையர் தரப்பையும் தினேஷ் யோசித்தது நல்லது.
அடுத்து வந்த விசித்ரா பகிர்ந்து கொண்டதுதான் இந்த எபிசோடின் உண்மையான பூகம்ப தருணம். ஒரு சினிமா படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல், வன்முறை தொடர்பாக நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை கலக்கமான முகத்துடன், ஆனால் உறுதியான குரலில் விசித்ரா பகிர்ந்து கொண்டது சிறப்பு.
“2001-ல் இருந்து நான் சினிமாத்துறையில் இருந்து காணாமல் போனேன். யாருக்கும் அதற்கான காரணம் தெரியாது. ஒரு டாப் ஹீரோவின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அது தொடர்பான பார்ட்டியில் என்னை சந்தித்த அந்த நடிகர் - என் பெயர் கூட அவருக்கு தெரியாது - நீங்க இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டு விட்டு பிறகு ‘என் ரூமிற்கு வாருங்கள்’ என்று வெளிப்படையாகவே அழைத்தார். அன்றிரவு நான் என் அறைக்குள் படுத்து தூங்கி விட்டேன். மறுநாளில் இருந்து எனக்கு பிரச்சனைகள் ஆரம்பித்தன. குடித்து விட்டு வந்து எனது அறைக் கதவை பலமாக தட்டுவார்கள். இன்னமும் கூட அந்த சத்தம் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது” என்று விசித்ரா சொன்ன போது அவர் ஆழ்மனதின் காயத்தை கேட்பவர்களால் உணர முடிந்தது.
தனது பேச்சை விசித்ரா தொடர்ந்தார். “ஹோட்டலின் நிர்வாகத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு நல்ல மனிதர், (விசித்ராவின் வருங்கால கணவர்) நான் கேட்டுக் கொண்டபடி அறையை தினமும் மாற்றிக் கொடுத்தார். பிறகு ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஸ்டண்ட் நபர்களில் ஒருவர் என்னை தொடர்ச்சியாக தப்பாக தொட்டார். ஸ்டண்ட் மாஸ்டரிடம் இது பற்றி புகார் செய்த போது அவர் என்னை பலமாக கன்னத்தில் அறைந்தார். எனக்கு கண்ணீர் வந்தது. திகைத்துப் போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பர்களிடம் போனில் கேட்டேன். ‘புகார் செய்யுங்கள்’ என்றார்கள் யூனியனில் கேட்ட போது “நீங்க நடிக்க வேண்டாம். திரும்பி வந்துடுங்க. ஒரு கடிதம் எழுதித் தாருங்கள்” என்று சொன்னார்கள்….
விசித்ராவின் கசப்பான அனுபவம்
“....இந்தச் செய்தி அப்போது மீடியாவில் நிறைய வந்தது. ஆனால் யாருமே எனக்காக பேச முன்வரவில்லை. ஒருவர் கூட இல்லை. எந்த நடவடிக்கையும் இல்லை. மறுபடியும் சங்கத்தை தொடர்பு கொண்ட போது ‘நீங்க ஏன் உடனே போலீசில் சொல்லவில்லை?’ என்று கேட்டார்கள். நடிகர் சங்க செயலாளரும் தலைவரும் இதை அலட்சியமாகவே அணுகினார்கள். ‘மறந்துட்டு வேலையை பாரு’ என்று உபதேசம் செய்தார்கள். அப்போதுதான் எனக்குள் தோன்றியது. ‘எதற்காக இந்த சினிஃபீல்ட்?’ என்று. ஆனால் இது நான் சிரமப்பட்டு கடந்து வந்த பாதை. என்றாலும் என்னுடைய வருங்கால கணவர் அப்போது கேட்ட ஒரு கேள்வி என் மனதை உலுக்கியது. ‘மரியாதை இல்லாத இடத்தில் நீங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?’ அதற்குப் பிறகுதான் முடிவு செய்தேன். திரைத்துறையை விட்டு விலகி வந்தேன். அவரே எனக்கு ஒரு மரியாதையான வாழ்க்கையை அமைத்துத் தந்தார். என் கணவர்தான் என்னுடைய உண்மையான ஹீரோ” என்று உணர்ச்சிகரமாக தனக்கு ஏற்பட்ட கொடுமையான அனுபவத்தை சொல்லி முடித்தார் விசித்ரா. ரவீனா உட்பட பலரும் எழுந்து வந்து அணைத்து ஆறுதல் சொன்னார்கள்.
“...இதை ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து உடனே ரிப்போர்ட் செய்ய வேண்டும். தாமதித்தால் நீதி கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகத்தான்” என்று விசித்ரா சொன்னது ஒரு வகையில் மிகவும் சரியான கருத்து. மறுப்பே கிடையாது. ஆனால் துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே தங்களின் உடனடி ஆட்சேபத்தை வெளிப்படுத்துவார்கள். தைரியமாக புகார் செய்வார்கள்.
ஆனால் இதற்கான துணிச்சலும் பொருளாதார பின்புலமும் இல்லாதவர்களைப் பற்றியும் நினைத்து பார்க்க வேண்டும். எளிய குடும்பப் பின்னணி கொண்டவர்களின் நிலைமை பரிதாபம். மேலும் இத்தகைய சம்பவங்களில் ஏற்கெனவே பாதிப்பை அடைந்தவர்கள்தான் கூடுதல் பாதிப்பை அடைய நேரிடும். அவர்களைத்தான் நிறைய குறுக்கு விசாரணை செய்வார்கள். பழி சுமத்துவார்கள். இந்த நோக்கில் அச்சப்படுகிறவர்களின் சதவீதம்தான் அதிகம் அவர்களுக்கு எப்படி உடனே ரியாக்ட் செய்வது என்றே தெரியாது. மனதிற்குள் நிறைய புழுங்குவார்கள். நீண்ட காலம் கழித்து ஏதாவது ஒரு துணிச்சலான சந்தர்ப்பத்தில் அவர்கள் இதை பொதுவில் சொல்லும் போது அது சார்ந்த கரிசனையுடன் அதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர ‘நீ ஏன் அப்போதே சொல்லவில்லை என்று கேட்பது முறையற்றது. இந்த இடத்தில்தான் ‘மீ டூ’ போன்ற இயக்கங்களின் முக்கியத்துவம் வருகிறது.
பாலியல் சீண்டல்களுக்கு உடனடி நடவடிக்கை அவசியம்
ஒரு பொதுவெளியில் விசித்ராவிற்கு நடந்த வன்முறை சம்பவத்திற்கே அவருக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் தனி அறைகளில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ரகசியமாக நடக்கும் கொடுமைகளுக்கு பெண்களால் எப்படி சாட்சியம் தர முடியும்? செல்வாக்கு உள்ளவர்கள் இதை எளிதில் மறைத்து விடுவார்கள். ஒரு பெண் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமையை வெளியில் சொல்கிற போது சந்தேகத்தின் பலனை அவருக்கு உடனே தருவதுதான் அடிப்படையான மனிதநேயம். ஏனெனில் பெண்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பழிவாங்குதலுக்காக வீண்பழி சுமத்த ஒரு பெண் பயன்படுத்த மாட்டாரா என்றால் அதுவும் நிகழும்தான். ஒரு ஆண் மீது சொல்லப்படும் பாலியல் குற்றத்தை சமூகம் எளிதில் நம்பிவிடும். அந்த ஆணுக்கு அது நிரந்தர அவமதிப்புக் கறையாக படிந்து விடும். எனவே நிதானமான விசாரணையில் இந்த கோணத்தையும் மனதில் கொள்வது அவசியம். ஆனால் “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஒரு பெண் கதறும் போது உடனடி ஆதரவு தருவதுதான் முக்கியமானது. பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை பிரதீப் விவகாரத்திலும் இதுதான் நடந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைதான் மிகையாக சென்று விட்டது. கடுமையான எச்சரிக்கையோடு முடித்திருக்கலாம். பிரதீப் அப்படி ஒன்றும் ஆபத்தான மனிதர் அல்ல. விகாரமாக தொடர்ந்து பேசுவார். சில சமயங்களில் மன்னிப்பு கேட்காமல் அடம்பிடிப்பார். மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் தொடர்வார். இந்தப் போக்கு மற்றவர்களுக்கு எரிச்சலைத்தான் தரும். (சமீபத்திய மன்சூர் அலிகான் விவகாரம் ஒரு நல்ல உதாரணம்).
விசித்ரா அனுபவத்தில் கூடுதலாக சொல்ல வேண்டியதும் ஒன்று இருக்கிறது. கவர்ச்சி நடனம் ஆடுபவர்கள், பாலியல் அழைப்புகளுக்கு எளிதில் இணங்கி விடுவார்கள் என்று பொதுச் சமூகம் மலினமான முன்தீர்மானத்தில் நம்புவதும் ஒருவகையான ஆணாதிக்கத்தனம்தான். கவர்ச்சி நடனம் என்பது ஒரு தொழில். அதற்காக அவர்கள் பாலியல் இச்சைகளுக்கு எளதில் உடன்பாடுவார்கள் என்கிற ‘taken for granted’ மனோபாவம் தவறானது. ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டாலும், அவருடைய சம்மதமில்லாமல் ஒருவர் வலுக்கட்டாயப்படுத்தினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்தான்.
பூகம்ப அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் டாஸ்க்கில் அடுத்து வந்தவர் மாயா. தான் ஒரு முறை தற்கொலை முடிவை நோக்கி நகர வேண்டிய நெருக்கடியான உளவியல் சூழலையும், அந்தச் சூழல் தானாக ஒத்திப் போடப்பட்டதையும் விளக்கி, “இப்ப அந்த முடிவைப் பத்தி நினைச்சா கண்றாவியா இருக்கு” என்று சொன்ன மாயா “எந்த நெருக்கடினாலும் வாழ்க்கையை உடனே முடிச்சுக்க திட்டமிட வேண்டாம். காத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல வெளிச்சம் பிறக்கும் என்கிற பாசிட்டிவான செய்தியுடன் தன் அனுபவத்தை பரிதாபத்தைக் கோராமல் சிரித்தபடி சொல்லி முடித்தார்.
“இந்த மாதிரி ஆளுங்க பண்றதாலதான் ஒரு குடும்பமே பாதிக்குது” என்று பிறகு விசித்ரா சொன்னது உண்மை. அவர் கலைத்துறையில் இருந்தே விலகும் சூழல் ஏற்பட்டது. அவருக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஒரு நல்ல மனிதர் கிடைத்ததால் அவருடைய வாழ்க்கை இப்போது நல்லபடியாக தொடர்கிறது. இல்லை என்றால் என்னவாகி இருக்கும்? ஒருவரின் பாலியல் விகாரமும் அத்துமீறலும் அவரால் பாதிக்கப்படும் நபரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தையே பாதிக்கிறது என்பதை பாலியல் குற்றங்களைச் செய்பவர்கள் உணர்ந்து மனம் திருந்த வேண்டும்.
from விகடன்
Comments