பருத்தி வீரன் படம் தொடர்பான விவகாரத்தில் தன்னை திருடன் என திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விமர்சித்திருந்த நிலையில் இயக்குநர் அமீர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும், பரப்பிய அவதூறுகளுக்கும், என்னைப் பற்றிக் கூறிய வரம்புமீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை. ‘பருத்திவீரன்’ தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்னை ”யூடியூப்” உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.
‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே. ‘பருத்திவீரன்’ திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர, அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர்.
அதன் பின்னரே, நான் எனது “TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், ‘பருத்திவீரன்’ படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்னையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.
‘பருத்திவீரன்’ திரைப்படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து ‘படத்தை நீங்களே வெளியிடுங்கள்’ என்று சொன்னவர்களும், அன்றும் வேடிக்கை பார்த்தார்கள். இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்தியவர்களும், முடித்து வைத்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இன்றளவும் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், 17 வருடங்களுக்கு முன்பு என் கை பிடித்து வாக்கு கொடுத்தவரின் அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான், இன்று சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன். நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.
உண்மை இப்படியிருக்க, ஞானவேல் என்னைப் பற்றி கூறிய விசயங்களால் நான் அடைந்த மன உளைச்சலை விட, என் குடும்பத்தாரே அவரால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போதிலும், நானும், என் குடும்பத்தாரும் இதையெல்லாம் கடந்து வந்து விடுவோம், துளியும் அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரை வழிநடத்தும் பெரியவர்கள், இதுபோல் யாரையும் அவதூறாக பொதுவெளியில் பேச வேண்டாம், என அவருக்கு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பூமியில், “அநியாயமும், அக்கிரமங்களும், அநீதியும் தலை விரித்தாடுகின்ற போது கண்ணன் அவதாரம் எடுப்பார்..” என்ற கீதையின் வாசகத்தைப் போல, தமிழகத்தில் நடக்கும் இந்நிகழ்வுகளுக்கு, அமெரிக்காவில் இருந்து நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமாகிய கணேஷ் ரகுவுக்கு என் உளப்பூர்வமான, கோடானகோடி நன்றிகள்.
‘பருத்திவீரன்’ தொடர்பான வழக்கு மற்றும் விபரங்கள் அனைத்தும் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாலும், அதில் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கிற நிலையில், என் பக்கம் நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எனக்கு ஆதரவளித்து, எனக்காக குரல் கொடுத்த, என்னைத் தெரியாத, என்னோடு உறவாடாத அனைத்து செய்தியாளர்களுக்கும், என் மீது அன்பு கொண்ட பொதுமக்களுக்கும் நிச்சயமாக நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன்.
என்றென்றும் அவர்களுக்கு நன்றி.‘பருத்திவீரன்’ பட பிரச்னை மீண்டும் மீண்டும் ’YOUTUBE” உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான், “மாயவலை” படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இனியும், இந்த பிரச்னை தொடர்பாக என்னை யாரும் அணுக வேண்டாம் என்று பணிவோடு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!” என்று குறிபிட்டிருக்கிறார்.
from விகடன்
Comments