சாவு வீட்டில் முளைக்கும் காதல் வெற்றி பெற சந்தானம் நிகழ்த்தும் பில்டப் நாடகங்களே இந்த `80's பில்டப்'.
80களில் நடக்கும் கதையில் எப்போதும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டும் சவால் விட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் சந்தானமும் அவரின் தங்கை சங்கீதாவும். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் தாத்தா மரணித்துவிட, சாவு வீட்டுக்கு வரும் உறவினர் பெண்ணான ராதிகா ப்ரீத்தியைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் சந்தானம். பிணத்துக்கான காரியங்கள் முடிப்பதற்குள் ராதிகாவே தனக்கு வந்து பிரபோஸ் செய்வார் என்று தன் தங்கையிடம் சவால் விடுகிறார் சந்தானம். இந்தச் சவாலில் ஜெயித்தது அண்ணனா, தங்கையா என்பதை காமெடி டிராமாவாகச் சொல்கிறேன் என்று இரண்டு மணிநேரங்கள் நம்மை விடாப்பிடியாகச் சோதித்து வெளியே அனுப்புகிறார் இயக்குநர் கல்யாண்.
கமல் ரசிகராக சந்தானம். ஆனால் கமல் மேனரிசத்தைவிட ரஜினியின் மேனரிசமே அவருக்குக் கச்சிதமாக வருகிறது. சில பல காமெடி கவுன்ட்டர்களால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டும் நம்மைச் சிரிக்க வைக்கிறார். மைக்கேல் தங்கதுரை உள்ளிட்ட சந்தானத்தின் நண்பர்கள் குழுவாக வருபவர்கள் செய்யும் காமெடியை விளக்க சந்தானத்தின் காமெடி பன்ச்சையே கடன் வாங்கிக் கொள்ளலாம். "கோவம் வரமாதிரி காமெடி பண்ணாதீங்க பாஸ்!" தங்கையாக வரும் சங்கீதாவின் பாத்திரம் ஆரம்பத்தில் அண்ணன் - தங்கை சண்டை என்று கலகலப்புக்கு உதவினாலும் ஒரு கட்டத்தில் அதுவே நம்மை டயர்டாக்கிவிடுகிறது. நாயகி ராதிகா ப்ரீத்தி மட்டும் கூட்டத்தில் சற்றே சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
இவர்கள் தவிர காமெடியன்களா, வில்லன்களா என்பது கடைசிவரை புலப்படாத வகையில் மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா என ஒரு தனி டீம் சும்மா வந்துவிட்டுப் போகிறது. வழக்கம்போல லேடி கெட்டப்பில் ஆனந்த்ராஜ். ஆனால், இந்த முறை அதீத எல்லை மீறிய இரட்டை அர்த்த காமெடிகள் அதிகம் எட்டிப் பார்க்கின்றன. அதனால் அவரின் நடிப்பும் படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
எமதர்மனாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். இவர்கள் நிகழ்த்தும் டிராமா மட்டுமே கொஞ்சம் ஆறுதல்! இங்கிலீஷ் திருடன் கூல் சுரேஷ், சுவாமிநாதன், மயில்சாமி, சேஷு, ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் இருந்தாலும் 'அதுல ஒண்ணும் இல்ல, கீழ போட்ரு' என ஆர்.சுந்தர்ராஜன் வசனத்தையே இவர்களுக்கும் விமர்சனமாகச் சொல்லிவிடலாம்.
அந்தக் காலத் திரையரங்கம், ரஜினி - கமல் கட்அவுட்கள், மாட்டு வண்டி பயணம் என 80ஸ் கிராமத்தை கண்முன் நிறுத்த கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குநர் ஏ.ஆர்.மோகன். பாடல்களிலும் பின்னணி இசையிலும் பாஸ் மார்க் வாங்குகிறார் ஜிப்ரான். இவர்கள் இருவரால்தான் படம் ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு மான்டேஜ் ஃபில்லர் ஷாட்கள், பாடல்களில் செயற்கையான காட்சியமைப்புகள் என்று சற்றெ தட்டுத் தடுமாறுகிறது. 128 நிமிடங்களுக்குள் படத்தை சுருக்கியதற்காக வேண்டுமானால் எடிட்டர் எம்.எஸ்.பாரதியைப் பாராட்டலாம்.
இயக்குநர் கல்யாண், தன் வழக்கமான காமெடி ரூட் மேல் நம்பிக்கைக் கொள்ளாமல் அதீத ஆபாசம் கொண்ட காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்பதாகத் தடம் மாறியிருக்கும் மற்றொரு படம் இது. அதுவும் அப்பாவின் எக்ஸ் லவ்வரை மகனே சைட் அடித்து சில்மிஷம் செய்வதாக இடம்பெற்றிருக்கும் காட்சிகள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கின்றன. அந்தக் குதிரை வண்டி சில்மிஷக் காட்சிகளும் அத்தகையதே! ஒரு கட்டத்தில் சந்தானமே தங்கதுரையின் காமெடியை 'இது எல்லாம் ஒரு ரைமிங்கா?' என விமர்சனம் செய்கிறார். நம் கேள்வியும் அதுவே! காமெடிதான் இப்படியென்றால் இதில் எதற்கு எமதர்மராஜா என்ற ஃபேன்டஸி கோணம் என்பது கடைசிவரை புலப்படவே இல்லை. 'அதுல ஒண்ணும் இல்ல, கீழ போட்ருங்க!'
அண்ணன் - தங்கையின் சவால்தான் மொத்தக் கதையும் என்றால் அவர்களுக்குள் நடக்கும் போட்டிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். ஆனால் அதில் எதுவுமே சீரியஸாக இல்லாமல், மொக்கையான சவால்களாகவே முடிந்துபோவதால் படம் எந்த விதத்திலும் சுவாரஸ்யம் என்ற கட்டத்தை எட்டவே இல்லை. அதிலும் தோற்றவர்கள் தாவணி உடுத்த வேண்டும் என்பதை எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு காமெடி என்று கடந்துபோவது? பெண்ணின் உடைகளை ஆண் உடுத்துவது அவனுக்கான தண்டனை, அவமானம் என்பது 80ஸையும் மிஞ்சிய பிற்போக்குத்தனம் சாரே! அதிலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்டாக பல நெடுங்காலம் ஃபார்வேர்டு மெசேஜாக ஓடி முடித்த ஒரு ஜோக்கை காட்சியாக வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது?
மெனக்கெடல் ஏதுமில்லாமல் `ஜோக்' என்று சொன்னாலே சிரித்துவிடுவார்கள், இரட்டை அர்த்தம் பேசினால் விசில் அடிப்பார்கள் என்று மனப்பான்மையை இயக்குநர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் ரசனை அதைக் கடந்து வந்துவிட்டது என்பதை உணரும் தருணம் இது!
from விகடன்
Comments