Kaala Paani Review: அந்தமான் தீவில் பரவும் கொடூர வைரஸ்; சமூக நீதியும் பேசும் சர்வைவல் த்ரில்லர்!

சூழல், சூழலியல், மனித உயிர்கள், உரிமைகள், உணர்வுகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அரசு மற்றும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை மையப்படுத்திய சர்வைவல் த்ரில்லர் கதைதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘காலா பாணி’ வெப்சீரிஸ்.

2027... அந்தமானில் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் சூழலில், ஒரே மாதிரியான அறிகுறிகளோடு 11 நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார்கள். இதனால் மிகக்கொடிய தொற்றுநோய் பரவிக்கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கும் சீஃப் டாக்டர் மோனா சிங், திருவிழாவை நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ஆனால், வலுவான ஆதாரங்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சூழ்ந்த, இவ்வளவு பெரிய திருவிழாவை நிறுத்தவேண்டுமா என்று மறுத்துவிடுகிறது அரசு. ஆனால், தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பிக்கிறது. தொற்றுநோய்க்குக் காரணம் யார், மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா, மாபெரும் அந்தத் திருவிழாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

Kaala Paani Review | காலா பாணி விமர்சனம்

விசாரணையிலேயே நோயை ஸ்கேன் செய்துவிடும் கூர்மை, பணியில் சமரசம் செய்துகொள்ளாத நேர்மை, பேச்சில் வெளிப்படும் தைரியம், சிகிச்சையில் அதீத அக்கறை, மக்களின் உயிர்காக்கப் போராடும் போர்க்குணம், தேடலில் திக் திக் டிடெக்டிவ் எனப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறார் டாக்டராக வரும் மோனா சிங்.

எவ்வளவு படித்தாலும் சாதிய ஒடுக்குமுறை இங்கே நிலவும்வரை உயரத்துக்குப் போகமுடியாது என்ற வலி மிகுந்த பின்னணி கதையோடு தாழ்வு மனப்பான்மையோடு சயின்டிஸ்ட்டாக வரும் ராதிகா மெஹ்ரோத்ரா, க்ளைமாக்ஸை நெருங்க நெருங்கப் பார்வையாளர்களிடமும் நெருங்கி தன்னை நிரூபித்துக் காட்டி கைதட்ட வைத்துவிடுகிறார்.

சுற்றுலாவுக்குக் குடும்பத்தோடு வரும் நான்கு கதாபாத்திரங்கள் சென்டிமென்டால் கண்கலங்க வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக, பிள்ளைகளைத் தேடும் காட்சிகளில் கொரோனா பேரிடர் சூழலை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார்கள். அதிலும், சிறுமி ஆராத்யா அஞ்சனாவின் நடிப்பு செம்ம க்யூட். "நான் தைரியமாத்தான் இருந்தேன்" என்று சொல்லும்போதே நம் கண்கள் குளமாகிவிடுகின்றன.

மோனா சிங், ராதிகா மெஹ்ரோத்ரா

ஏ.எஸ்.பியாக வரும் அமே வாக் நடிப்பு மட்டும் கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன், வில்லத்தனம், எள்ளல்தனம் என சினிமாக்களில் வரும் வழக்கமான கதாபாத்திரத்தைப்போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இக்கதையின் சதுரங்க வேட்டையில் ஆட்டநாயகன் சிரஞ்சீவியாக வரும் சுகந்த் கோயல்தான். கதையில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பதோடு, ஆரம்பம் முதல் முடிவுவரை இதயம் கனக்கச் செய்கிறார். பழங்குடி மக்கள் மீதான நகரத்து மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி ஈர்ப்பவர் இவர்தான். சமூக ஆர்வலர்களாக ஃப்ளாஷ்பேக்கில் வரும் இவரது அம்மா - அப்பா கதாபாத்திரங்கள் அத்தனை அழகு!

`திடீர் திடீர்ன்னு சாவுறாங்களே இது என்ன நோயாதான் இருக்கும்? அந்தப் பழங்குடியின மக்கள் ஏன் இவ்ளோ பெரிய குடிநீர் பைப்பை பாறாங்கல்லால அடிச்சு உடைக்கிறாங்க? தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்போன டாக்டருக்கு என்னதான் ஆச்சு? ஏ.எஸ்.பி நல்லவரா, கெட்டவரா? மக்களைக் காப்பாற்ற கவர்னர் எடுக்கப்போகும் முடிவு என்ன?'

7 எபிசோடுகள், 7 மணிநேரத்துக்கும் மேலாக அந்தமான் தீவுக்குள்ளேயே சுற்றினாலும் இப்படியான கேள்விகளால் நம்மைச் சோர்வடையாமல் பார்த்துக் கொள்கின்றனர். இயற்கையின் பேரழகு நிறைந்த அந்தமான் நிக்கோபார் ஸ்பாட்டுகளை, அற்புதமாகப் படம்பிடித்து பார்வையாளர்களை ஆக்கிரமித்துவிடுகிறது ஒளிப்பதிவு.

Kaala Paani Review | காலா பாணி விமர்சனம்

முதல் எபிசோடில் நமக்கெல்லாம் தெரிந்த தேள் - தவளைக் கதை சொல்லப்படுகிறது. அதில், தேள் யார், தவளை யார் என்பதுதான் இந்த சீரிஸின் சுவாரஸ்யமே! "பழங்குடி மக்கள் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. அதனால்தான், வாழ்க்கைக்கான போரில் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்" என்று வசனங்களால் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நகரத்து மக்கள் எந்தளவுக்குப் பரிணாம வளர்ச்சி அடையாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது அந்தக் கப்பல் காட்சி.

அதேபோல், இதில் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. 'வேகமாக ஒரு ரயில் வந்துகொண்டிருக்கிறது. தண்டவாளத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் 5 பேரும் காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டிருப்பதால் ரயில் வருவது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், இன்னொரு டிராக்கில் ஒருவர் வேலை செய்துகொண்டிருக்கிறார். நீங்கள் நினைத்தால் டிராக் மாற்றி ஒரு உயிர் போனாலும் 5 உயிர்களைக் காப்பாற்ற முடியும். நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. இதுதான் 2வது சீசனுக்கான லீடும்கூட.

Kaala Paani Review | காலா பாணி விமர்சனம்

'யாரால் இதையெல்லாம் செயல்படுத்த முடியாது? யாருக்கு இதெல்லாம் தெரியாது? யாருக்கெல்லாம் மக்கள் மீது அக்கறையில்லை? யாரெல்லாம் வலிமையற்றவர்கள்?' என்று பொதுச்சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிறதோ அந்தக் கட்டமைப்பை சில்லு சில்லாக உடைத்து எரிகிறது, கதையில் வரும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள்.

திரைக்கதைக்குப் பக்கபலமாக இருந்து நம்மைப் பாராட்டத்தூண்டுவது வசனங்கள்தான். இசையும் கதையோடு சேர்ந்து மிரட்டுகிறது. அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம், சுயநலம், லாபநோக்கம் அதனால் சம்பந்தமே இல்லாதவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பெரும் உழைப்பைச் செலுத்திப் புரியவைக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர்கள் சமீர் சக்சேனாவுக்கும் அமித் கோலானிக்கும் பாராட்டுகள்.

எதிர்காலத்தில் இப்படி நடக்கலாம் என்று காண்பிக்கப்பட்டாலும் தற்போதைய நிஜங்களின் ஆவணங்களாகவும் காட்சிகள் விரிந்து பதைபதைப்பைக் கூட்டுகின்றன.
சுகந்த் கோயல்

உண்மையிலேயே சமூகத்தில் விளிம்புநிலை மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்களால் மட்டும்தான், சரியான அரசியல் புரிதலுடன் ஒரு படைப்பைக் கொடுக்கமுடியும். யார் பக்கம் நீதி இருக்கிறது என்பதெல்லாம் பார்க்காமல், பலம் இல்லாதவனை வீழ்த்தி பலம் பொருந்தியவன் வாழ நினைப்பதுதான் 'சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட்' என்பதை வலியுடன் காண்பித்து, இச்சமூக அவலத்திற்கு எதிராக நம்மையும் யோசிக்க வைக்கிறார்கள். அந்த வகையில் ஒரு முக்கியமான அரசியல் பதிவாகவும் இந்தத் தொடர் தடம் பதிக்கிறது.

அதேநேரம், ஒரு சில மைனஸ்களும் உள்ளன. நோய், மருத்துவம், ஆராய்ச்சி என இயக்குநர் எளிமையாக நமக்குப் புரிய வைக்க முயன்றாலும் சில காட்சிகளைப் புரிந்துகொள்ள, டாக்டரைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டுதான் பார்க்கவேண்டியிருக்கும்போல.

தாவரத்தின் பெயர் தெரிந்த பிறகும் தேடி அலைவது கொஞ்சம் கதையை நீட்டிப்பதற்காகச் செய்யும் வழக்கமான மாயாஜாலம். அதுவும், 'அந்தத் தனிமையில் வாழும் தாத்தாவின் ரிசர்ச் எல்லாம் கதைக்குத் தேவையாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு இதெல்லாம் தேவைதானா' என்று நமது பொறுமையும் சேர்த்து ஆராய்ச்சி செய்துவிடுகிறார்கள்.

Kaala Paani Review | காலா பாணி விமர்சனம்

ஆனாலும், புதிய வளர்ச்சித் திட்டம், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி என்கிற முகமூடிகளுடன் ஒரு சில மல்டிநேஷனல் கம்பெனிகள் எப்படியெல்லாம் இயற்கையை அழித்து, நோயை உருவாக்குகின்றன என்று சமகால அரசியலைப் பேசியதற்காகவே, இந்த 'காலா பாணி'க்குள் சில மணிநேரங்கள் நிச்சயம் சிறைப்பட்டுக் கிடக்கலாம்.

போட்டி நிறைந்த சூழலில் உயிர்வாழ, வெற்றிபெற மனிதர்களுக்குள்ளேயே நடக்கும் ஈவு இரக்கமற்ற வேட்டைதான் இந்தத் தொடர். இதில், யார் வேட்டைக்காரர்களாக வேட்டையாடுகிறார்கள், யார் விலங்காக இரையாகிறார்கள் என்பதுதான் ’காலா பாணி’ பேசும் அரசியல்.


from விகடன்

Comments