உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இயக்குநர் விக்ரமன் நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
1990 ஆம் ஆண்டு வெளியான ‘புதுவசந்தம்’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் விக்ரமன். அவர் இயக்கத்தில் வெளியான ‘சூர்ய வம்சம்’, ‘பிரியமான தோழி’, ‘வானத்தைப்போல’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படம் ‘நினைத்தது யாரோ’ அதன் பிறகு அவர் படம் எதுவும் இயக்கவில்லை.
இதனிடையே விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கால்களைக் கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், அவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவைப் பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க மு.க ஸ்டாலின் உத்தரவின்படி இன்று இயக்குநர் விக்ரமனின் மனைவியை மருத்துவக் குழுவுடன் நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விக்ரமன், “ என் மனைவிக்கு அவரது முதுகில் தவறாக செய்த ஆப்ரேஷனின் விளைவாக அவரால் நடக்க முடியாது. இந்த நிலைமையை விளக்கி சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருந்தேன்.
இதனைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்சனையைச் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல மருத்துவர்களுடன் வீட்டுக்கு வந்து நேரில் பார்வையிட்டார். என் மனைவியைப் பரிசோதித்து பார்த்தனர். பின்னர் சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம் என உறுதியளித்தனர். இந்த நேரத்தில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி குணமாக வேண்டும் அதுதான் எனக்கு முக்கியம்.” என்று தெரிவித்திருக்கிறார்.
from விகடன்
Comments