பிக் பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராகச் சென்றார் நடிகை ரச்சிதா. நிகழ்ச்சிக்குள் அவரது என்ட்ரியை காட்டிய போது கண்ணிமைக்கும் நேரத்தில் அதாவது நொடியில் வந்து போனது அவரது கணவர் தினேஷின் புகைப்படம் ஒன்று. மற்றபடி ரச்சிதா அந்த வீட்டுக்குள் இருந்த நூறு நாள்களில் ஒரு முறை கூட தினேஷ் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எதையும் பேசவில்லை.
சீரியலில் ஜோடியாக அறிமுகமாகிக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்னும் முறைப்படி விவாகரத்து ஆகவில்லை.
கணவன் மனைவிக்கிடையில் பிரச்னை போய்க் கொண்டிருந்த நேரத்தில் ரச்சிதா பிக் பாஸ் சென்றதாலும், அங்கு அவரை திருமணமானவர் எனத் தெரிந்தும் சக போட்டியாளர் ராபர்ட் மாஸ்டர் சுற்றிச் சுற்றி வந்ததாலும் பிக் பாஸ் ரசிகர்கள் அந்த சீசனிலேயே தினேஷை எதிர்பார்த்தார்கள். பேச்சுவார்த்தை இல்லாத போதும் வெளியிலிருந்தபடியே மனைவிக்கு ஆதரவு திரட்டி வந்த தினேஷும் அப்படியொரு வாய்ப்பை அன்று எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை.
பிக் பாஸ் முடிந்து வெளியில் வந்த ரச்சிதா மனம் மாறி மீண்டும் இந்த ஜோடி சேரும் என நினைத்தார்கள் இரண்டு பேருடைய ரசிகர்களும். அதுவும் நடக்கவில்லை. மாறாகப் பிரச்சனை மேலும் சிக்கலாவது போல் தினேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் தந்தார் ரச்சிதா. அந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்ற தினேஷிடம் ரச்சிதா முகம் கொடுத்தும் பேசவில்லை.
'எது நடக்குதோ நடக்கட்டும்' என தினேஷ் விரக்தியடைந்த நேரத்தில்தான் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியது. கடந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் செல்ல விரும்பி அது நடக்காததால், இந்த சீசனில் கலந்து கொள்ள விரும்பி அதற்கான முயற்சியில் தினேஷ் ஈடுபட்டார் என்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர்.
சீசன் 7ல் கலந்து கொள்கிறவர்கள் என சோஷியல் மீடியாக்களில் வெளியான உத்தேசப் பட்டியலிலும் இவரது பெயர் ஆரம்பத்திலேயே இடம்பெற்றது. விகடன் தளத்திலும் இது குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.
சில யூடியூப் சேனல்களில் இது தொடர்பாகப் பேசியிருந்த தினேஷ், "இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். கடந்த சீசனில் கலந்து கொண்ட ரச்சிதா டைட்டில் வாங்க ஆசைப்பட்டாங்க. அது நடக்கலை. என்னால் முடிஞ்சா அந்த டைட்டிலை நான் வாங்கி அவர்களுக்குச் சமர்ப்பணம் பண்ணுவேன்" எனச் சொல்லியிருந்தார்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, சீசன் 7 தொடங்கிய போது இவர் உள்ளே செல்லவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரச்சிதாவின் தந்தை திடீரென பெங்களூருவில் மரணம் அடைய, மருமகனாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தார்.
தற்போது பிக் பாஸ் தொடங்கி ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் செல்கிறார். மற்ற வைல்டு கார்டு போட்டியாளர்கள் எப்படியோ, தினேஷைப் பொறுத்தவரை மனைவிக்காக டைட்டில் வாங்க விரும்புவதாகச் சொல்வதால், மிச்சமிருக்கும் நாள்களில் கன்டென்ட் தந்து வலுவான ஒரு போட்டியாளராக அந்த வீட்டில் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினேஷின் தனிப்பட்ட குணத்தைப் பொறுத்தவரைக் கொஞ்சம் ஷார்ட் டெம்பர் என்றாலும் அவரின் கோபத்தில் நியாயமிருக்கும் என்கிறார்கள் அவரது நண்பர்கள். தற்போது சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பொறுப்பிலிருக்கிறார். கடந்த முறை நடந்த தேர்தலில் இவர் நின்ற அணி தோல்வியடைந்த போதும், இவருக்கு அமோக வெற்றி கிடைத்தது.
அதேபோல் தற்போது ஜீ தமிழ் சேனலில் 'கார்த்திகை தீபம்' தொடரிலும் விஜய் டிவியில் 'ஈரமான ரோஜாவே', 'கிழக்கு வாசல்' என இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்தார். இவற்றில் 'கார்த்திகை தீப'த்தில் இவரது கேரக்டர் முடிந்து விட்டதாகத் தெரிகிறது.
விஜய் டிவி சீரியல்களில் இவரது கேரக்டர்களுக்கு வேறு ஆர்ட்டிஸ்டுகள் வரலாம், அல்லது இவரது ட்ராக் இல்லாமலேயே கதை நகரலாம் எனச் சொல்கிறார்கள்.
from விகடன்
Comments