வைல்டு கார்டு என்ட்ரிகளின் வரவு, முதல் நாளிலேயே எதிர்பார்த்த பலனைத் தந்து விட்டது. சலசலப்புகளும் சர்ச்சைகளும் வெற்றிகரமாகத் துவங்கி விட்டன. ‘யெஸ்.. இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று பிக் பாஸ் அகம் மகிழ்ந்திருப்பார்.
எதிரி நாடுகள் போல இரண்டு வீடுகளும் முறைத்துக் கொண்டு நிற்கின்றன. காலேஜ் ராகிங் மாதிரி புதியவர்களை பெரிய வீடு கையாள்கிறது.
‘இருங்கடா.. என் கேமைக் காட்டறேன்.. இனிமேத்தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க’ என்று டபுள் கிராஸ் கேமை விசித்ரா துவங்கியிருப்பது நன்று. ‘இங்க ஏன் துணியை காய வெச்சிருக்கீங்க?’ என்று பக்கத்து வீட்டு அங்கிள் மாதிரி சண்டைக்கான காரணங்களைத் தேடி ஒரு வில்லத்தனமான வைப்ரேஷனில் செட் ஆகத் துடிக்கிறார் தினேஷ். ஆனால் அர்ச்சனாவின் நிலைமைதான் பாவம். ரத்தபூமிக்குள் மாட்டிக் கொண்ட கான்வென்ட் பேபி மாதிரி கண்ணீர் சிந்திக் கொண்டேயிருக்கிறார். வீட்டில் நிறைய செல்லம் தந்து வளர்த்திருப்பார்கள் போல. (லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோடதான் வரணும்!)
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘அதாரு.. அதாரு’ என்கிற பாடலுடன் நாள் 29 விடிந்தது. “புதுசா வந்திருக்கிற வைல்ட் கார்டையெல்லாம் போஸ்ட் கார்டு மாதிரி தூக்கி சின்ன வீட்ல போடு. விசித்ராவையும் நடுவுல போடு. விசித்ரா அவங்களை வெச்சி செய்வாங்க.. அவங்க எப்படியாவது சாவட்டும்’ என்று காலையிலேயே மங்கல வார்த்தைகளோடு பூர்ணிமாவிற்கு தீவிரமான அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் பிரதீப். ஸ்ட்ராட்டஜி கிங் எதையோ வில்லங்கமாக யோசித்துவிட்டார் என்பது மற்றவர்களுக்குப் புரிந்து விட்டது.. ‘எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்.. பட்டாசு இனிமே கொளுத்தாம வெடிக்கும்’ என்கிற பாடலைப் பாடிய படியே வந்து சஸ்பென்ஸை அதிகரிக்கச் செய்தார் பிரதீப்.
பிக் பாஸ் ஆட்டத்தை ஒரு எபிசோடாவது பார்த்திருக்கிறாரா, சற்றாவது ஹோம் ஒர்க் செய்திருக்கிறாரா என்று அர்ச்சனா மீது சந்தேகம் வருகிறது. அந்த அளவிற்கு வந்தது முதலே சென்சிட்டிவ்வாக இருந்து சிணுங்கிக் கொண்டேயிருக்கிறார். அழுத்தம் தாங்காமல் அழுகிறார் அல்லது ‘மாத்தேன் போ..’ என்கிற மாதிரி பிடிவாதம் பிடிக்கிறார். விட்டால் வினுஷாவிற்கே நல்ல பெயர் வாங்கித் தந்து விடுவார் போலிருக்கிறது. ஒருவேளை மனதளவில் தயாராகி வந்தும், சூழலை நேராக எதிர்கொள்ளும் போது தடுமாறி கலங்குகிறாரோ என்று தோன்றுகிறது.
அர்ச்சனா - ரத்தபூமியில் ஒரு எல்கேஜி பேபி
`ஐஷூ.. நீங்க என்னை ஹர்ட் பண்ணிட்டீங்க’ என்று அர்ச்சனா புகார் சொன்னதைக் கேட்டு மாயாவிற்கு சிரிப்பு வந்திருக்க வேண்டும். ‘யார்ரா.. இவ.. 24x7 நாங்க அதைத்தானே பண்ணிட்டிருக்கோம்?’ என்று தோன்றியிருக்க வேண்டும். தான் கிண்டல் செய்யப்பட்டதைத் தாங்க முடியாத அர்ச்சனா, “நான் அப்படித்தான். சென்சிட்டிவ்.. மூட் ஸிவிங் ஆயிடும். சின்ன மேட்டர்தான்.. இருந்தாலும் அப்செட் ஆயிட்டேன்’ என்று விதம் விதமாக சொல்லி தனக்குத் தானே சமாதானம் தேடிக் கொள்ள முயன்றார். ‘இங்க இப்படித்தான்.. இருக்கும். நீங்கதான் அதுக்கேத்த மாதிரி மாறிடணும்' என்று பூர்ணிமா சொல்வது சரி. Be a Roman in rome. அப்படி எளிதில் மாற முடியாது என்றால் ரோம் இருக்கிற திசைக்கே செல்லாமல் இருப்பதுதான் சரியானது.
“அவங்க எதிர்பார்க்கிறது டூ மச்” என்று தன் குழுவிடம் மாயா சொன்னாலும் பிறகு அர்ச்சனாவிடம் சென்று “இங்க அப்படித்தான் இருக்கும். கருணையும் இருக்கும் ப்ரூட்டலும் இருக்கும். ‘கடவுள் பாதி மிருகம் பாதி.. க்ரூப் நாங்க’ என்பது மாதிரி போல் சமாதானம் செய்ய முயன்றது சிறப்பு. “என்னது! இங்கேயும் சர்காஸம் இருக்கா?" என்று குழந்தைத்தனமாக கேட்டார் அர்ச்சனா.
“கேப்டன்…. கேஸ் வேலை செய்யுதான்னு பாருங்க” என்று ஜெர்க் தந்தார் பிக் பாஸ். ஏனெனில் சின்ன வீட்டை சேர்ந்தவர்களும் பெரிய வீட்டில் கலந்து தங்கியிருந்தார்கள். “வைல்ட் காடு என்ட்ரி இருந்ததால.. தூங்கற இடம் கம்மியா இருந்தது. அதனால் கொஞ்சம் குழப்பம்” என்று பூர்ணிமா சமாளித்தாலும் “என்னாச்சு கேப்டன் டவுன் ஆயிட்டீங்க?” என்று கரிசனத்துடன் விசாரித்தார் பிக் பாஸ். “சோத்தை கட் பண்ணிடுவாங்களோ?’ என்கிற பதட்டத்துடன் சின்ன வீட்டார் கடகடவென்று அங்கே ஓடினார்கள்.
புதிய என்ட்ரிகளை மொத்தமாகப் பழிவாங்கிய பெரிய வீடு
அடுத்ததாக, சின்ன வீட்டுக்குச் செல்லவேண்டிய ஆறு நபர்களை கேப்டன் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். காலையில் பிரதீப் தந்த ஆலோசனையின்படி வைல்டு கார்டு என்ட்ரிகளை ‘கூண்டோடு வெச்சு செய்வது’ என்று முடிவெடுத்தார் பூர்ணிமா. எனவே ஒவ்வொருவருக்கும் உப்பு பெறாத காரணங்களைச் சொல்லி சின்ன வீட்டுக்கு அனுப்பினார். காலேஜ் ராகிங் மாதிரி நடந்த இந்தச் சடங்கை புதிய உறுப்பினர்கள் உள்ளூற எதிர்பார்த்தே இருந்தார்கள். கூடுதல் நபராக விசித்ராவை பெரிய வீடு தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அவர் சின்ன வீட்டின் மகாராணியாக இருப்பார், அங்குள்ளவர்களை கட்டுப்படுத்துவார் என்பது பெரிய வீடு திட்டமிட்டிருந்த உத்தி.
புதிய உறுப்பினர்களைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று அப்பட்டமாக தெரிந்தாலும் “அப்ப இதையெல்லாம் பிளான் பண்ணித்தான் செய்யறீங்களா?” என்று மீண்டும் குழந்தைத்தனமாகவே கேட்டு மல்லு கட்டிக் கொண்டிருந்தா அர்ச்சனா. ஒரு சூழலில் புதியவர்களை பழையவர்கள் வெறுப்பதும் இடையூறாக எண்ணுவதும் இயல்புதான். எனவே பெரிய வீட்டின் இந்த ஸ்ட்ராட்டஜியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எந்தவொரு விளையாட்டிலும் அடிப்படையான நியாயத்தை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் புதியவர்களை முதலில் விளையாட விட்டு அதற்குப் பிறகு இவர்கள் முடிவு செய்து இருந்தால் ஒரு வகையில் நியாயமாக இருந்திருக்கும். ஆரம்பத்திலேயே பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது விளையாட்டு தர்மம் ஆகாது. “ஏன் ஒரே வாரத்துல அத்தனை பேரையும் அனுப்ப முடிவு செஞ்சீங்க?” என்று விசித்திரா பிறகு கேட்டது சரியானது.
வைல்டு கார்டு என்ட்ரியின் போது தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகிய இருவரின் குத்தலான கமென்ட்டுகள் சற்று வில்லங்கமாக இருந்தன. அதற்காக அவர்களையும் குறை சொல்ல முடியாது. அது பிக் பாஸ் வீட்டின் வழக்கமான ஸ்டைல். எனவே அவர்கள் இருவரை மட்டும் தண்டனை லிஸ்டில் சேர்த்திருக்கலாம். மற்றவர்கள் மிக சுமூகமாகவே தங்களின் வரவைப் பதிவு செய்தார்கள். அவர்களை விட்டிருக்கலாம்.
“உங்க பிளான் எனக்குப் புரிஞ்சிடுச்சு” என்று அர்ச்சனா தன் வெள்ளந்தியான புத்திசாலித்தனத்தைக் காட்டியதும் “அவங்களுக்கு புரிஞ்சிடுச்சாம்ப்பா…கை தட்டுங்க” என்று கிண்டல் செய்தார் பூர்ணிமா. ‘சின்ன பிக் பாஸ் பக்கத்திலிருந்து ரொமான்ஸ் செய்ய போறேன்' என்று கண்ணை சிமிட்டிக் கொண்டே சொல்லி, தனக்கான தண்டனையை பரிசுபோல விசித்ரா மாற்றிக் கொண்டது சிறப்பு. இப்போதுதான் இந்த ஆட்டத்தில் அவர் தன்னை சரியாகப் பொருத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அடிபட்டு வலித்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டும். ஆக.. இந்த வாரம் சின்ன வீட்டின் உறுப்பினர்களாக இருக்கப் போகிறவர்கள் தினேஷ், அன்னபாரதி, பிராவோ, பாலா, அர்ச்சனா மற்றும் விசித்ரா.
விசித்ராவின் ராஜதந்திரம் - துவங்கியிருக்கும் டபுள் கேம்
பிரதீப் சொன்ன ஆலோசனையை பூர்ணிமா அப்படியே பின்பற்றியது குறித்து ‘சுய புத்தி இல்லாதவர்’ என்று தினேஷ் சொன்ன கமென்ட் ஒரு வகையில் சரியானது. ஆனால் இதை மறுத்து ‘அதெல்லாம் நீ சொல்லக் கூடாது.. தப்பு.. தப்பு’ என்று ஆட்சேபித்துக் கொண்டிருந்தார் பூர்ணிமா.
‘தன்னை ஒதுக்குகிறார்கள்’ என்று அதுவரை புலம்பிக் கொண்டிருந்த விசித்ரா, சின்ன வீட்டிற்கு சென்றதும் தனக்கான ராஜ்ஜியத்தை அமைக்கத் துவங்கியது ஒரு நல்ல ராஜதந்திரம். “வெளியே அடிச்சுக்கிற மாதிரி நடிப்போம். ஆனால் உள்ளுக்குள்ள நாம ஒண்ணா இருப்போம்” என்று அவர் சொன்ன உத்தியை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். (வேற வழியில்ல. சீனியராச்சே!).
இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியது. எதிர்பார்த்தது போலவே இந்தச் சடங்கிலும் புதிய உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக பழிவாங்க பெரிய வீடு முடிவு செய்தது. அதன்படி சுமாரான காரணங்களைச் சொல்லி நாமினேட் செய்தார்கள்.
‘நாமினேஷன் பற்றிய ஆலோசனையைப் போட்டியாளர்கள் பொதுவில் செய்யலாம்’ என்பது இந்த சீசனில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மாற்றம். ஆனால் இது சுவாரசியத்தை மட்டுப்படுத்துவதாகத் தோன்றுகிறது. ‘நீ அவனுக்குப் போடு… நான் இவனுக்கு போடுகிறேன்’ என்று வெளிப்படையாகவே பேசி வைத்து டார்கெட்டுகளை சரியாகத் தூக்குகிறார்கள். மாறாக ஒவ்வொருவரும் மனதிற்குள் ரகசியமாகக் கணக்குப் போட்டு செயல்படுத்தினால் அதனால் விளையும் குழப்பங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.
சின்ன வீட்டைப் பழிவாங்கிய பெரிய வீடு
ஆக பெரிய வீட்டின் திட்டத்தின் படி புதிய வரவுகள் அனைவரும் நாமினேஷன் பட்டியலில் வந்தார்கள். விசித்ராவை மட்டும் ‘நம்மாளுடா’ என்கிற கணக்கில் விட்டு வைத்தார்கள். விசித்ரா லீடராக இருந்தால் சின்ன வீட்டில் இருப்பவர்களுக்கு அது நெருக்கடியைத் தரும் என்பது இவர்களின் கணக்கு. ஆனால் இந்த உத்தி தன்னிடம் முன்பே கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பதால் ரகசிய கோபத்தில் இருக்கும் விசித்ரா, டபுள் கேம் ஆட முடிவு செய்து இருக்கிறார்.
சின்ன வீடு பதிலுக்குப் பெரிய வீட்டாரை நாமினேஷன் செய்யவேண்டிய நேரம். பெரிய வீட்டைப் போல இவர்கள் அழுகிணி ஆட்டம் ஆடவில்லை. அதிகமாக வெறுப்பேற்றிய மாயாவை மட்டும் டார்கெட் செய்தாலும், மற்றவர்களுக்கு சொன்ன காரணங்கள் நியாயமாகவே இருந்தன.
‘ரவீனா தனியா ஆடினா சிறப்பா இருக்கும். அதற்கு மணி வெளியே போகணும்’ என்று தினேஷ் சொன்ன காரணம் சரியானது. இரண்டு வீட்டின் நாமினேஷனும் முடிந்தது. ஆக இந்த வாரம் எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்கள்.. தினேஷ், அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, பாலா, மணி, அக்ஷயா, ஐஷு மற்றும் மாயா. தனது பெயர் லிஸ்டில் வந்ததைப் பார்த்ததும் முதல் வகுப்பில் தேர்வானதைப் போல உற்சாகம் அடைந்தார் மாயா.
‘பெரிய வீட்டின் வெறுப்பு லிஸ்டில் தான் முதலிடத்தில் இருக்கிறோம்’ என்பது தினேஷிற்குப் புரிகிறது எனவே பதிலுக்குத் தானும் ஏதாவது ஒரண்டையை இழுப்பது என்று முடிவு செய்தார். ஆனால் அதற்காக அவர் சொன்ன காரணம்தான் மொக்கையாக இருந்தது. நம்முடைய வீடுகளில் ஏற்படும் சின்ன சண்டையைப் போலவே ‘இந்த பக்கம் ஏன் துணிகளைக் காய வைக்கிறிங்க’ என்று சுவாரசியமில்லாத சர்ச்சையை ஆரம்பிக்க, அதை இடது கையால் அநாயசமாக எதிர்கொண்டார் பூர்ணிமா.
“நீங்க தீர்வு கேட்டா அதை நான் தருவேன். மாறா... பிரச்னை செய்யணும்னு முடிவு பண்ணிட்டா... நானும் அதுக்கேத்த மாதிரி இறங்குவேன். ஏன்னா... நாங்கள்ல்லாம் பிரச்னையில் பல் துலக்கி பிரச்னையை போர்த்திக்கொண்டு தூங்கும் டெரரான ஆளுங்க” என்கிற கெத்தோடு பூர்ணிமா பதில் சொன்னதும், கல்லூரி மாணவர்களைப் போல பெரிய வீடு உற்சாகமடைந்து கைத்தட்டியது. நம்ம கேப்டன் கலக்கறாரப்பா..
துணி காயப் போடும் பிரச்சனையில் நியூட்ரலான ஆலோசனையைச் சொன்னார் பாலா. அது தங்களுக்கு சாதகமாக இருந்ததால் பெரிய வீடு அதைக் கைதட்டி வரவேற்றது. மெஜாரிட்டியின் பக்கம் நின்றால் அது தனக்கு பாதுகாப்பானது என்று பாலா நினைக்கிறாரா அல்லது உண்மையாகவே தனக்குத் தோன்றும் ஆலோசனையை நடு நிலைமையுடன் சொல்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிக் பாஸ் வீட்டின் அழுத்தத்தை தாங்க முடியாத அர்ச்சனா
அடுத்ததாக ஷாப்பிங் செய்யும் நேரம். இந்த முறை இதில் ஒரு சின்ன டிவிஸ்டை வைத்தார் பிக் பாஸ். சின்ன வீட்டார்தான் ஷாப்பிங் செல்ல முடியும். ஆனால் அவர்கள் பொருட்களைக் கொண்டு வந்து பெரிய வீட்டில் ஒப்படைத்துவிட வேண்டும். இதில் ஒரு உள்குத்து இருக்கிறது. சின்ன வீட்டார் வேண்டுமென்றே அதிக தொகைக்கு வாங்கி வந்தால் பெரிய வீடுதான் டாஸ்க்கின் மூலம் அந்த கடனைக் கட்ட வேண்டும்.
இரவு நேரம். பொதுக்குழு கூடியது. “அர்ச்சனாவிற்கு ஒரு வருத்தமாம்..அவங்களை நாம சரியா வரவேற்கவில்லை என்று வருத்தப்படறாங்க” என்று பூர்ணிமா சொன்னதும் களுக் என்று சிரித்தார் மாயா. “அப்பதான் யுகேந்திரன் எவிக்ட் ஆகியிருந்தாரு. அந்த சோகத்தில் இருந்தோம்” என்று சமாதானம் சொன்னார் பிரதீப். “புரிஞ்சுக்கங்க ப்ரோ.. இங்க அப்படி எல்லாம் யாரையும் வெல்கம் பண்ண மாட்டாங்க” என்று மாயா சொன்னது ஒரு வகையில் நிதர்சனம்.
‘என்னதான் எதிரியாக இருந்தாலும் வீட்டிற்கு புதிதாக வருபவர்களுடன் சிறிது நேரத்திற்காவது இணக்கமாக பேசுவது ஒரு அடிப்படையான நாகரிகம்’ என்று அர்ச்சனா சொல்வது முற்றிலும் சரியானது. ஆனால் அது வெளி உலகத்திற்குத்தான். பிக் பாஸ் என்னும் ரத்த பூமிக்குப் பொருந்தாது. புதிய என்ட்ரிகளை, பழைய போட்டியாளர்கள் உள்ளார்ந்த எரிச்சலுடன்தான் அணுகுவார்கள். பாவனையாகத்தான் புன்னகைப்பார்கள். போட்டியாகத்தான் எண்ணுவார்கள். இந்தப் புரிதல் அர்ச்சனாவிற்கு இருக்க வேண்டும்.
“இப்படி எல்லாம் சம்பிரதாயத்தை எதிர்பார்க்கறிங்கன்னா நீங்க இந்த கேமிற்கே வந்திருக்கக் கூடாது” என்று பிரதீப் சொன்னது ஒரு வகையில் நியாயம். ``நாங்களும் விசித்ராவும் பரஸ்பரம் எவ்வளவு திட்டி இருக்கோம். தெரியுமா” என்று நடப்புச் சூழலை அர்ச்சனாவிற்கு புரிய வைக்க முயன்றார் பிரதீப். ‘காலைல கூட நான் உங்ககிட்ட சொன்னேனே… இங்கே இப்படித்தான் இருக்கும்” என்று தானும் சமாதானம் கூறிய மாயா, “சரி வாங்க.. தப்பா பேசி இருந்தா மாப்பூ” என்று கட்டியணைத்து அர்ச்சனாவை ஆறுதல்படுத்த முயன்றார். என்னதான் டெரராக வெளியில் நடந்து கொண்டாலும் மாயாவிற்குள் அடிப்படையான கரிசனம் உள்ளுக்குள் இருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தை அர்ச்சனா சரியாகப் பயன்படுத்தி நிலைமையை சுமுகமாக முடித்து இருக்கலாம். அதற்கு மாறாக “என்னை திட்டினேல்ல.. வர மாத்தேன் போ”.. என்று குழந்தைத்தனமான பிடிவாதத்துடன் வீம்பு செய்தது சரியானதல்ல. ‘பஞ்சாயத்தாடா.. இது.. பஞ்சாயத்தே இல்லடா’ என்று தேவர் மகன் சிவாஜி மாதிரி கோபமாக சபையில் இருந்து எழுந்து சென்ற அர்ச்சனா “இதெல்லாம் நியாயமே இல்லை.. இவங்க மரியாதை இல்லாம நடந்துக்குறாங்க.
நான் அழக்கூடாதுன்னு பார்க்கிறேன்” என்று தனக்குத்தானே பேசி மன உளைச்சலில் விழுந்தார். அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பூர்ணிமா அழைத்து வந்தாலும் “இத்தனை கேமராக்கு முன்னாடி என்னை அவமானப் படுத்திட்டீங்கள்ல..” என்று அதே குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தினார். ‘என்ன பேபி.. அதுக்குத்தானே இத்தனை காமிராக்களை வைத்திருக்கிறோம்?’ என்பது பிக் பாஸின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்.
ஆக புதிய வரவுகளின் மூலம் வீட்டில் சலசலப்பு கூடியிருக்கிறது. ஒரு புதிய எதிரி வந்ததும், பழையவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒன்றாக கூடி விடுவதைப் போல, பெரிய வீடு தங்களுக்குள் இருக்கும் விரோதங்களை மறந்து விட்டு ஒற்றுமையாக மாறியிருக்கிறது. இந்த ஸ்ட்ராட்டஜி கோட்டையை சின்ன வீட்டார் எப்படி தகர்க்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வைல்டு கார்டு என்ட்ரிக்களை மொத்தமாக சின்ன பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பிய முடிவு குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
from விகடன்
Comments