பிக் பாஸ் வீட்டின் வானிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு எலிமினேஷன்கள். ஐந்து புதிய என்ட்ரிகள்.
‘எல்லாக் கோட்டையும் அழி. மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிப்போம்’ என்கிற பரோட்டா காமெடி மாதிரி, வீட்டின் எண்ணிக்கை மீண்டும் பதினெட்டாக மாறியிருக்கிறது. அதாவது இரண்டு செட் நவக்கிரகம். இந்த மாற்றம் வீட்டினுள் என்ன மாதிரியான சலனங்களை, சர்ச்சைகளை, மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
நீல நிற கோட்டில் அட்டகாசமான தோற்றத்துடன் அரங்கின் உள்ளே நுழைந்த கமல், “இந்த ஆண்டு நிறைவு பெற இன்னமும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த ஆண்டில் செய்வதற்குப் பல திட்டங்களைத் தீட்டியிருப்பீர்கள். அவற்றில் சில நடந்து இருக்கும். ஒரு திட்டம் சிறப்பாக நடப்பதற்கு அதை அர்ப்பணிப்பாகவும் தொடர்ந்தும் செய்ய வேண்டும். சில திட்டங்கள் நடுவில் மாறக்கூடும். ரீ டயல் மாதிரி அதை செட் செய்துகொள்ள வேண்டும்” என்றெல்லாம் சுய முன்னேற்ற வகுப்பை ஏன் திடீரென எடுக்கிறார் என்று பார்த்தால் இந்த சீசனில் நிகழப் போகிற முக்கியமான மாற்றம் பற்றிய ‘டீஸர்’ அது என்பது புரிந்தது.
“அஞ்சு பேர் வைல்ட் கார்டு என்ட்ரில உள்ளே போகப் போறாங்க” என்று பார்வையாளர்களிடம் தெரிவித்த கமல் அகம் டிவி வழியாக உள்ளே சென்றார். கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் அதே வாக்கியத்தோடு பேச்சை ஆரம்பித்தார். “கேப்டனுக்கு வாழ்த்துகள். இந்த வாரமும் அதே பூர்ணிமாதான். தொடர்ந்து இரண்டாவது முறையாக கேப்டன். இதுபோல் முன்பு நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. அதட்டி மிரட்டாமல் ரூல் புக்கில் இருப்பதை மற்றவர்களுக்கு உணர வைத்தீர்கள். சின்ன பிக் பாஸ் வீட்டாருக்கு அமர இருக்கை தந்தது சிறப்பான செய்கை. மனிதாபிமான அடிப்படைதான் ஒரு தலைமைக்கு அழகு”... என்றெல்லாம் பூர்ணிமாவை அவர் பாராட்ட அம்மணியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. ‘கேப்டன் எப்படி..?’ என்று மற்றவர்களிடம் கமல் விசாரிக்க ஒருவர் விடாமல் அனைவரும் ‘அண்ணன்… நல்லவரு வல்லவரு… என்பது போல வரிசையாக பாராட்டினார்கள்.
‘எந்தவொரு விஷயத்தையும் பற்றி கலந்தாலோசித்து முடிவு செய்வது’, ‘கூல் கேப்டன்’ ‘பிக் பாஸ்ஸிடமே பேரம் பேசி டிஸ்கவுண்ட் வாங்கி சரித்திரம் படைத்த முதல் கேப்டன்’ ‘தினமும் ரைம்ஸ் சொல்ல வைத்து சாக்லேட் தரும் நல்ல டீச்சர்’ என்பது போன்ற பாராட்டுரைகள் குவிய, ‘இதையெல்லாம் அனுபவிப்பதா… வேண்டாமா என்பது மாதிரியான பூரிப்புடன் அமர்ந்திருந்தார் பூர்ணிமா. ‘உக்கார சேர் தந்து எங்க மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்துட்டாங்க’ என்று கவிதை மொழியில் பாராட்டினார் விஷ்ணு. (பார்றா!) இது போதாது என்று கமலும் தனிப்பட்ட வகையில் ஒரு ஸ்டாரை பரிசாகக் கொடுத்து பூர்ணிமாவின் உச்சியைக் குளிர வைத்தார்.
“என்னால முடிஞ்சத செஞ்சேன். ஆனா அதுக்கு இவ்வளவு இம்பேக்ட் இருக்கும்னு தெரியாது. சின்ன பிக்பாஸ் வீட்டில் நான் முன்னாடி இருந்ததால்தான் அவங்களோட கஷ்டம் புரிந்தது” என்று பூர்ணிமா சொன்ன குறிப்பு முக்கியமானது. அடித்தட்டில் இருந்து முன்னேறி அதிகாரத்திற்கு நகர்ந்து வருபவர்களுக்குத்தான் அடித்தட்டு மக்களின் வலி அதிகமாகப் புரியும்.
பக்கத்து வீட்டுக்குத் தாவியதைப் பற்றிய விசாரணை
“ஓகே.. அடுத்ததா மைக்ரேஷன் பத்தி பேசலாமா?” என்று நான்கு பேர் செய்த ‘ஷிஃப்டிங் அட்ராசிட்டி’ பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் கமல். “சுவையான சாப்பாடுக்காகத்தான் அங்க போனோம்” என்று ரவீனா ஜாலியாக ஆரம்பிக்க ‘அவ சாப்பாட்டுக்கு போகலை சார்’ என்று மாயா குறும்பாக இடைமறித்து சொன்னதும் கமலுக்கே சிரிப்பு வந்தது. “உடம்பு சரியில்ல சார்” என்று சுரேஷ் பாவனையாக ஆரம்பித்ததும் பார்வையாளர்கள் தரப்பிலிருந்து சிரிப்பொலியும் கைத்தட்டலும் கேட்டது. “ரொம்ப முடியலன்னா இங்க வந்துடறீங்களா?” என்று குறும்பான மாடுலேஷனில் கமல் கேட்டதும் கைத்தட்டல் கூடுதலாகியது.
“வந்தாரை வாழவைக்கும் தமிழகம். தமிழ் கலாசாரத்தை பிரதிபலிப்பதற்காகத்தான் அவர்களை உள்ளே அனுமதித்தோம்” என்று புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, தனது பாணி சிரிப்புடன் பிரதீப் சொல்ல “சமயங்களில் உங்க புரிதல் தவறாக இருக்கு. உரிமைக் குரல் எழுப்புவதற்காக கொடுத்த சிவப்பு கையுறையை டவல் மாதிரி விளையாட்டா பயன்படுத்தாதீங்க” என்று கமல் அழுத்தமாக ஒரு குட்டு வைத்ததைப் பயபக்தியுடன் பிரதீப் ஏற்றுக் கொண்டார்.
விளையாட்டாக செய்த இந்த விதிமீறலைப் பற்றி ஒவ்வொருவரும் சிரித்துக்கொண்டே சமாளிக்க, “ஒரு நிபந்தனையுடன்தான் உள்ளே வந்திருக்கீங்க. அடுத்த முறையும் இதே போல் நடந்தால் வீட்டில் கரண்ட் கட் ஆகலாம். தவறு செய்தால் அதற்கான விளைவுகள் இருந்தே தீரும்” என்று கமல் எச்சரித்ததும் போட்டியாளர்களின் முகங்களில் மெல்லிய திகில் பரவியது. `மணி கண்ணு வேணும்னு கேட்டியாமே?’.. என்கிற மாடுலேஷனில் கமல் மணியை உரத்த குரலில் அழைத்ததும் அவர் திகைத்துப் போய் பார்க்க ‘நீங்க SAVED’ என்று இன்ப அதிர்ச்சி தந்தார் கமல்.
ஐந்து புதிய என்ட்ரிகள் - மாற்றம் நிகழுமா?
அடுத்ததாக ஒவ்வொரு வைல்ட் கார்டு என்ட்ரி பற்றிய அறிமுகம் நடந்தது. முதலில் வந்தவர் தினேஷ். சீரியல் நடிகர். இவரது ஆரம்ப லுக்கே டெரராக இருந்தது. இவரது அறிமுக வீடியோவில் தனிப்பட்ட தகவல்கள் பல இருந்தாலும் முந்தைய சீசனில் கலந்து கொண்ட ரச்சிதாவின் முன்னாள் கணவர் என்கிற குறிப்பு கவனமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது.
“நிகழ்ச்சியை ஏற்கெனவே பார்த்துட்டு உள்ள போறீங்க... எப்படி இருக்கப் போகுது? என்று கமல் கேட்க “சில பேர் இதை ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி என்று நினைத்து விட்டார்கள்போல” என்று தினேஷ் சொன்னதும் அரங்கில் கைத்தட்டல் பலமாக கேட்டது. “இது பிக் பாஸ் 7 என்பதை அவர்களுக்கு நினைவுப்படுத்தப் போறேன். என்னோட கரியர்ல ஏழு வருஷம் பின்னாடி போயிட்டேன். டைம் மெஷின் மாதிரி இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி மீண்டும் முன்னேறி வருவேன்” என்றார் தினேஷ்.
லியோ படத்திலிருந்து ‘நான் ரெடிதான் வரவா’ என்கிற பாட்டு சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் திகைப்படைந்தார்கள். ‘வைல்ட் கார்டு என்ட்ரி’ என்று பிறகு புரிந்ததும் அதிர்ச்சியில் இருந்து தங்களை மீட்டுக் கொண்டு புதியவர்களை வரவேற்கத் தயாரானார்கள். சேட்டு கல்யாணம் போல நடனமாடிக் கொண்டே உள்ளே வந்த தினேஷ், டாஸ்க் என்கிற பெயரில் ஓர் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தார்.
“என்கிட்ட எவிக்ஷன் ரீபிளேஸ்மென்ட் கார்டு இருக்கு. யாராவது ஒருத்தர் வெளியே போகணும். நான் உள்ளே வரணும். இதுக்கு 10 செகண்ட் டைம். உங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணுங்க" என்று அவர் டெரரான மோடில் சொல்லவும் போட்டியாளர்களின் முகத்தில் அதிர்ச்சியும் திகைப்பும் தெரிந்தது. ‘ஒகே.. நான் வரேன்’ என்று உடனடி தியாகியாகி கிளம்ப ஆரம்பித்தார் யுகேந்திரன். “அப்படில்லாம் உடனே முடிவு பண்ணிட முடியாது. இருங்க” என்ற தினேஷ் “ஐஷு நீங்க வரீங்களா..?” என்று ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஆரம்பித்தார். ‘நல்லாத்தானே போயிட்டு இருந்தது.. யார்ரா இவன்’ என்கிற போல் மக்கள் தினேஷை எரிச்சலுடன் பார்த்தார்கள்.
தினேஷ் ஆடிய அதிரடி ஆட்டம்
இன்ஸ்பெக்ஷனுக்காக பள்ளியில் நுழைந்த மேலதிகாரியை மாணவர்கள் அச்சத்துடன் பார்ப்பதைப் போன்று இந்த ஆட்டத்தை மக்கள் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க, ‘ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்’ நாடகத்தை மிகத் திறமையாக நடத்திய தினேஷ், ஒவ்வொருவருக்கும் வரிசையாக அதிர்ச்சி தந்தார். கடைசியில் ‘விக்ரம் SAVED என்கிற சஸ்பென்ஸை அவர் போட்டு உடைத்தவுடன்தான் அனைவருக்கும் மூச்சு வந்தது. ‘ஹப்பாடா’ என்று நிம்மதியானார் விக்ரம். என்றாலும் அதன் படபடப்பு இன்னமும்அவர்களுக்கு முழுமையாக போகவில்லை. தினேஷின் டெரரான ஃபர்பாமன்ஸ் அப்படி.
தன்னம்பிக்கையுடன் சபையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட தினேஷிடம் “குமாரு.. யாரு இவரு?’ என்கிற கபாலி வசனம் போல ‘நீங்க யாரு?’ என்று அதிரடியாக கேட்டு அவரது நம்பிக்கையில் உலை வைக்க முயன்றார் மாயா. “இந்த வாரமே உங்களை எவிக்ட் பண்ணலாமா?” என்று கேட்டு அநியாயமான குறும்பு செய்தார் பிரதீப். ‘இந்த டைட்டிலை நான் வாங்க விரும்பறதுக்கு ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கு' என்றார் தினேஷ். ரச்சிதாவிற்கு சமர்ப்பணம் செய்ய என்பதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி, அன்னபாரதி. திருநெல்வேலி பொண்ணு. பட்டிமன்ற பேச்சாளர். புத்தக வாசிப்பாளர். “உங்களுக்குள்ள நிறைய திறமைகள் இருக்கு. அதையும் ஏன் வெளியில் காட்டக்கூடாது என்று நண்பர்கள் கேட்பார்கள். பிக் பாஸ் மேடையை அதற்காக பயன்படுத்திக் கொள்வேன். காமெடியா மட்டும் இல்ல... கருத்தாகவும் பேசுவேன். வீட்டை ஜாலியா வெச்சுப்பேன்” என்று அறிமுக வீடியோவில் பாசிட்டிவ் எனர்ஜியுடன் பேசினார் அன்னபாரதி. பிறகு மேடையில் கமலை சந்தித்து திரைப்பட டைட்டில்களை வரிசையாக வைத்து அவர் சொன்னது நிச்சயம் கவிதை அல்ல. ரசிகர் மன்றக் குறிப்பு.
மீண்டும் லியோ பாட்டு சத்தம் கேட்டதும் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். “அய்யய்யோ இன்னொரு என்ட்ரியா?... கார்டன் ஏரியாவில் மைக் வைத்து பட்டிமன்ற செட்டப் மாதிரி போடப்பட்டிருந்தது. மேடையில் நின்று ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றி அன்னபாரதி சொன்ன ‘கமெண்ட் காலட்சேபம்’ மிக சுவாரஸ்யமாக இருந்தது. மக்கள் ரசித்துக் கேட்டார்கள். அன்னபாரதியின் நகைச்சுவையில் ஆங்காங்கே குண்டூசி வெடிகுண்டுகளும் இருந்தன. தன்னைப் பற்றிய கமெண்ட்டின் போது விசித்ராவின் முகத்தில் அதிருப்தியின் ரேகைகள் படர்ந்தன. “இருக்கு… ஆனா இல்லை என்பது மாதிரி விளையாடாதீங்க... காதல் பரத் மாதிரி சிலரை மாத்திடாதீங்க”.. என்று அன்னபாரதி சொன்னதும் கூட்டத்தில் பயங்கர சிரிப்பு. ஐசுவின் முகத்தில் வெட்கமும் சங்கடமும் தெரிந்தது. நிக்சனின் முகத்தில் மெல்லிய டென்ஷன்.
எவிக்ட் ஆன யுகேந்திரன், வினுஷா
அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “என்ன ஆச்சு.. திடீர்னு வீடு திடீர்னு கலவர பூமியா மாறிடுச்சு?” என்று ஒன்றும் தெரியாதது போல் நமட்டுச் சிரிப்புடன் குறும்பாக கேட்டார். நிக்சன் காப்பாற்றப்பட்ட செய்தியை சொன்ன கமல், அடுத்ததாக எவிக்ஷன் சடங்கிற்கு நகர்ந்தார். மீதம் இருந்தவர்கள் வினுஷா, யுகேந்திரன், சுரேஷ். “யார் போவாங்க?” என்கிற வழக்கமான கேள்வியை கமல் கேட்க பெரும்பான்மையான பதிலாக யுகேந்திரனின் பெயர் வந்தது. அவர் ஏற்கனவே கிளம்பத் தயாரான மூடில் இருந்தது காரணமாக இருக்கலாம்.
“சுரேஷ் போவாருன்னு நினைக்கிறேன்.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று வித்தியாசமாக பதில் அளிக்க முயன்றார் ரவீனா. ஏனெனில் கடந்த முறை விஜய் பெயரை அவர் சொல்லி அந்த ஜோசியம் தற்செயலாக பலித்தது. “ஒவ்வொரு முறையுமா?” என்று கிண்டலாக சிரித்தார் கமல்.
ஒரு சஸ்பென்ஸிற்குப் பிறகு யுகேந்திரனின் பெயர் கார்டில் காட்டப்பட்டது. ‘ஹப்பாடா.. சந்தோஷம்’ என்றபடி எழுந்தார் யுகேந்திரன். ‘ஹப்பாடா சந்தோஷம்’ என்று எதிரொலி போல இன்னொரு குரலும் கேட்டதைப் போல் இருந்தது. அது வினுஷாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். ஏனெனில் அவர்தான் விளிம்பு முனையில் நின்று கொண்டிருந்தார். ஆனால் அது தற்காலிகமான நிம்மதி என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
மூன்றாவது வைல்ட் கார்டு என்ட்ரி ‘கலகல’ அர்ச்சனா. ‘நான் ஒரு அறுந்த வாலு. கிடைச்ச மேடையை எல்லாம் பயன்படுத்திப்பேன். Fun loving, talkative .. என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் ஒரு சீரியல் நடிகை. ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறாராம்.
தன்னிடம் உள்ள நாணயங்களை “என் பொண்ணுங்களுக்கு தரேன்” என்று ஜோவிகாவிற்கும் ஐஷுவிற்கும் பரிசாக தந்தார் யுகேந்திரன். அவர்கள் கண்கலங்கினார்கள். யுகேந்திரனின் எவிக்க்ஷன் அங்குள்ள அனைவரையுமே லேசாக சோகம் அடைய வைத்தது. ‘கண்ணே கலைமானே.. என்கிற பாடலைப் பாடி சோகத்தின் வைப்ரேஷனை இன்னமும் அதிகப்படுத்தினார். யுகேந்திரன் வெளியே செல்வதும், அர்ச்சனாவின் என்ட்ரியும் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததால் ‘என்னது.. இன்னொரு ஆளா… ஐயா மூணு பாத்ரூம்தான் இருக்கு..’ என்று மக்கள் அலறினார்கள்.
‘பிக் பாஸ்.. கேட்டை லாக் பண்ணுங்க.. ப்ளீஸ்” என்று வேண்டிக் கொண்டார் பூர்ணிமா.
மேடைக்கு வந்த யுகேந்திரனிடம் “இளைஞர்களுக்கு சமமாக நின்று அவர்களுடன் ஐக்கியமானது சிறப்பான விஷயம்” என்று பாராட்டி வாழ்த்தி விடை தந்தார் கமல். வீட்டிற்குள் ரேங்க்கிங் டாஸ்க்கை மறுபடியும் நிகழ்த்தினார் அர்ச்சனா. இது பெண்கள் ஸ்பெஷலாம். பெண்கள் மட்டும் இந்த டாஸ்க்கில் இடம் பெறுவார்கள்.
அர்ச்சனா நடத்திய ரேங்க்கிங் டாஸ்க்
முதலிடத்தை ஜோவிகாவிற்கு வழங்கிய அர்ச்சனா, ‘மரியாதையாக பேசினால் நன்று’ என்கிற உபதேச குறிப்பையும் கூடவே வழங்கினார். இரண்டாவது இடம் மாயாவிற்கு. மூன்றாவது இடம் விசித்ராவிற்கு. “இந்த வயதிலும் இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தது ஒரு சாதனை” என்பது போல் அர்ச்சனா சொன்னதும் விசித்ராவின் முகத்தில் அதிக வெளிச்சம். கடைசி இடம் வினுஷாவிற்குக் கிடைத்தது.
ஒரு சூழலில் புதிய நபர்கள் உள்ளே நுழையும்போது பழைய நபர்கள் அதிர்ச்சி அடைவதும் இடையூறாக எண்ணுவதும் உலக மரபுதான். பிறகு இது பழகி விடும். புதியவர்களோடு நெருக்கமான கூட்டணி கூட அமையலாம். ஆனால் பெண்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது புரியவில்லை.
``சரியா ஹோம் ஒர்க் பண்ணாமயே வந்து நம்மள ஜட்ஜ் பண்றாங்க” என்று மாயா சொல்ல, “அவங்க யாரு.. நம்மை மதிப்பிடுவதற்கு?” என்று ஆவேசப்பட்டார் ஜோவிகா. கூடவே நின்று அனத்தினார் பூர்ணிமா. இந்த மூவர் கூட்டணி பாத்ரூம் ஏரியாவில் நின்று இது பற்றி தனியாகப் பேசிக் கொண்டிருந்தது.
நான்காவது வைல்டு கார்டு என்ட்ரி, ஆர் ஜே பிராவோ. வால்பாறை சொந்த ஊர் என்றாலும் துபாயில் நீண்ட காலமாக வசிக்கிறாராம். அங்குள்ள ரேடியோ பிரபலமாம். துபாய் தமிழர்களை கவர்வதற்காக இவர் நிகழ்ச்சிக்குள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
உற்சாகமான இளைஞராக தென்படும் பிராவோ பெண்களின் மனதை உடனே கொள்ளை கொள்வார் என்று தோன்றுகிறது. எனவே வீட்டில் இருக்கிற ரொமான்ஸ் கூட்டணிகளில் மாற்றம் நிகழலாம். பைக்கில் ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த பிராவோ, Vlogging பாணியில் ஒவ்வொருவரைப் பற்றியும் வீடியோ விமர்சனம் தந்து மதிப்பெண்களைத் தெரிவித்தார். இதில் அதிகமான மதிப்பெண்ணை பெற்றது பிரதீப். ‘டைட்டில் வெல்வதை விடவும் மக்களின் மனங்களை வெல்வதை முக்கியமாக நினைக்கிறேன் ஃபன் பண்றோம்.. ஜாலி பண்றோம்' என்று பிராவோ சொன்னதும் `அடடே.. இவர் நம்மாளு’ என்று மக்கள் பயம் நீங்கி அவரை உடனே ஏற்றுக் கொண்டார்கள்.
ஐந்தாவது வைல்டு கார்ட் என்ட்ரி ‘கானா பாலா’. சினிமா பாடல்களைப் பாடியவர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்தவர் என்கிற தகவல் மட்டும்தான் இவரைப் பற்றி பொதுவாகத் தெரியும். ஆனால் அவரது புரொஃபைலை அவரது வாயாலேயே கேட்கும் போது பிரமிப்பாக இருந்தது. மாஸ்டர் டிகிரி முடித்தவர். வக்கீல் படிப்பு படித்தவர். 25 வருட பிராக்டிஸ். கல்லூரியில் வைஸ் சேர்மன். மூன்று முறை தேர்தலில் சுயேச்சையாக நின்று இரண்டாம் இடத்தில் வந்துள்ளார். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஏரியாவைச் சேர்ந்த பாலா மரண வீடுகளில் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பல இளைஞர்களுக்கு கானா பாடல்கள் பாடுவதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். “எனக்கு 53 வயசு.. எல்லாவற்றையும் சமாளிப்பேன்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னபடி வீட்டிற்குள் நுழைந்தார் பாலா.
கலகலப்பை ஏற்படுத்திய ‘கானா’ பாலா
ரிக்ஷாவில் என்ட்ரி தந்த இவர், ஒவ்வொருவரையும் வைத்து பாடல் வரிகளைப் புனைந்து பாடிய கானா பாடலை மக்கள் உற்சாகமாகக் கைதட்டி ரசித்துக் கேட்டார்கள். அனைவரையும் சபையில் ஒன்று திரட்டிய பிக் பாஸ், புதிய போட்டியாளர்களுக்கு வரவேற்பு தந்து விட்டு “ஓகே.. அன்றாட வேலைகளைப் பாருங்க என்றார். சஸ்பென்ஸ் வைக்கிறாராம். தான் உறுதியாக காப்பாற்றப்பட்டிருப்போம் என்று வெள்ளந்தியாக வினுஷா நினைத்திருப்பார்.
அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “இந்த சர்ப்ரைஸ்.. போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று சிரிப்புடன் கேட்க “அய்யோ போதும் சார்… இப்பவே படுக்க இங்க இடமில்லை.. வெளியேதான் படுக்க வேண்டி இருக்கு” என்று மக்கள் ஜாலியாக ஒப்பாரி வைத்தார்கள். “ஓகே இருப்பதற்கு இடம் இல்லைன்னா.. அதுக்கு ஏற்பாடு பண்ணிடுவோம் என்று கமல் குறும்பாக சொன்னவுடன்தான் “ஓ டபுள் எவிக்ஷனா?” என்று மக்கள் மீண்டும் திகைப்படைந்தார்கள். அதுவரை நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த வினுஷாவிற்கு மீண்டும் மூச்சுத் திணற ஆரம்பித்திருக்கும். அவரே உள்ளூற எதிர்பார்த்திருந்தபடி பலியாடாக எவிக்ஷனுக்கு தேர்வானார். கண் கலங்கினாலும் இது எதிர்பார்த்ததுதானே என்றபடி அனைவரிடமும் புன்னகையுடன் விடை பெற்றுக் கொண்டார்.
அடுத்ததாக புத்தகப் பரிந்துரை ஏரியாவிற்கு வந்தார் கமல். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த நூல் ‘திருக்குறள்’ “இதை நாம ஸ்கூல்ல மனப்பாடப் பகுதியா படித்திருப்போம். ஆனால் இது ஒரு அற்புதமான கவிதை நூல். உலக நீதியை பளிச்சென்று சுருக்கமான கவிதை மொழியில் சொல்லப்பட்டு இருக்கு. இதில் மன்னனைப் பற்றிய பாடல்கள் இல்லாவிட்டாலும் மன்னர்களுக்கு தேவையான விஷயங்கள் இருக்கின்றன. 2000 வருஷம் கழித்தும் இதன் தேவை இன்னமும் இருக்கு. வீட்டுக்கு ஒரு புத்தகம் இருக்க வேண்டும்.
2000 வருடம் கழித்தும் இதை பரிந்துரை செய்ய வேண்டி இருக்கு.. இது நம்முடைய பொக்கிஷம் .. ஞானம்.. என்று கமல் சொனனது அத்தனையும் உண்மை. தினமும் ஒரு குறளை அதன் சரியான உணர்தலுடன் வாசித்து மனதார அனுபவித்து நடைமுறையில் பின்பற்ற முயன்றால், அது நம்மை நிச்சயம் நல்வழிப்படுத்தும்.
“வாங்க வினுஷா” என்று அவரை வரவேற்று பயண வீடியோவை காட்டினார் கமல். கண்ணீரும் சந்தோஷமும் கண்களில் மாறி மாறி மின்ன வீடியோவை பார்த்த வினுஷாவிடம் “இந்த 28 நாள் அனுபவம் உங்களுக்கு பயன்படும்” என்று வாழ்த்தி விடை தந்தார். அகம் டிவி வழியாக நண்பர்களை சந்தித்த வினுஷா “நான் போறதில் பிரதீப்புக்குத்தான் அதிக மகிழ்ச்சியா இருக்கும்” என்று ஜாலியாக சொன்னது சுவாரஸ்யம். அத்துடன் கமலும் நிகழ்ச்சியில் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.
குழப்பத்தில் தவிக்கும் நிக்சன்- ஐஷு
தன்னையும் நிக்சனையும் இணைத்து வீட்டில் உள்ளவர்கள் பேசுவது, புதிய போட்டியாளர்கள் சொன்ன கமெண்ட்டுகள் போன்றவற்றால் குழப்பம் அடைந்திருக்கும் ஐஷு, இது பற்றி ஒரு வழியாக மணியிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தார். “அவனைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அவாய்ட் பண்ணவும் முடியல. அவன் என்கிட்ட சொல்லிட்டான்” என்றெல்லாம் பூடகமாக ஐஷு சொல்ல, “என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியல.. ஜாக்கிரதையா இருந்துக்கோ.. அவ்வளவுதான் சொல்லுவேன்” என்று அட்வைஸ் செய்தார் மணி. அதை சுய உபதேசமாகவும் அவர் சொல்லிக் கொள்ளலாம்
நிக்சனைத் தனியாக அமர வைத்து, இதற்குத் தீர்வு காண ஐஷூ முடிவு செய்தது புத்திசாலித்தனமான விஷயம். “இந்த வாரம் நான் வெளிய போயிட்டா நல்லாயிருக்கும்ன்னு தோணுது” என்றெல்லாம் குழம்பித் தவித்த ஐஷூவிடம் “ஒரு பர்ஸனா உன்னை எனக்குப் பிடிக்கும். அதே மாதிரிதான் உனக்கும். உன்னோட கம்பெனி எனக்குப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான். இப்போது சொல். நீ சொன்னால் பர்ஸனலாக பேசுவதை நாம் நிறுத்திக் கொள்வோம்” என்று நிக்ஸன் உறுதியாக சொன்னாலும் அந்த உறுதி அவரது முகத்தில் பிரதிபலிக்கவில்லை. “சரி ஓகே.. அப்படியே செய்வோம்” என்கிற தீர்மானத்துடன் ஐஷூ விடை பெற்றுக் கொண்டாலும் அவரது முகத்திலும் குழப்பம் இருந்தது.
“புதுசா உள்ளே வந்திருக்கிறவங்க ரொம்பத்தான் பண்றாங்க. அவங்களை நாம வச்சி செய்வோம்” என்று மாயா, ஜோவிகா, பிரதீப் கூட்டணி இணைந்து தீர்மானம் இயற்றிக் கொண்டிருந்தது. இந்த ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரிகளில், மற்றவர்கள் ஜாலியான பாணியில் இருந்தாலும் தினேஷ் மட்டும் சற்று டெரரான மோடில் தென்படுகிறார். வீட்டின் புதிய சர்ச்சைகளுக்கும் மாற்றத்திற்கும் அவர் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. காத்திருந்து பார்ப்போம்.
from விகடன்
Comments