LEO: படக்குழு கொடுத்த பட்டியல், கைமாற்றப்பட்ட போலி டிக்கெட்டுகள்; இசை வெளியீட்டு விழா நடக்காதது ஏன்?

`லியோ' ரிலீஸுக்கு ஒரு மிகப்பெரிய முன்னோட்டமாக அதன் ஆடியோ ரிலீஸ் எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் ரொம்பவும் அப்செட்!

வெளியூர்களிலிருந்து மன்றங்கள் மூலமாக ஏராளமான ரசிகர்கள் அதில் கலந்துகொள்வதாக இருந்தது. நேரு ஸ்டேடியத்தில் விழாவுக்காக மேடை அமைத்துவிட்டால் 6,500 பேர்தான் அமர்ந்து பார்க்க முடியும் என்கிறார்கள். வெளியே எல்.இ.டி திரை போன்றவற்றை வைத்துத் தற்காலிகமாக அரங்கு அமைத்தால் கூடுதலாக ஒரு 5,000 பேர் வரை அமரலாம். அதைத் தாண்டி எண்ணிக்கைச் சென்றால் கஷ்டம் என்கிறார்கள்.

இதுவரைக்கும் வந்த அப்டேட்கள் லியோவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டன. ரசிகர்கள் தவிர்த்து பொதுமக்களிடமும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. அதேபோல இசை வெளியீட்டு விழாவுக்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

லியோ அறிவிப்பு

ஆனால், சமீபத்தில் சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட குழப்பங்கள், மக்களுக்கு நேர்ந்த பிரச்னைகள், பலருக்கும் ஏற்பட்ட பதற்றம், போக்குவரத்து நான்கு மணி நேரமாகச் சீர்குலைந்தது எல்லாம் ரஹ்மானுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் பெரிய சிக்கலை உண்டாக்கியது. அந்த அதிருப்தியை சமாளிக்கவே, போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதான வழக்குப் பதிவு என அதிரடி காட்டினார்கள். ஆனாலும் அந்தச் சீர்குலைவு மக்கள் மனதிலும் அதிகாரிகள் மனதிலும் தங்கிவிட்டது.

அதனாலேயே, இனி இதுபோல மெகா கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் சில நடைமுறைகளை உருவாக்கியுள்ளனர். 'லியோ' இசை வெளியீட்டு விழாவுக்கு உள்ளூர் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வண்டிகள் எண்ணிக்கை, அதற்காக மொத்தமாகக் கொடுக்கப்பட்ட பட்டியல் போலீஸ் அதிகாரிகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. நகரத்தின் மையத்தில் நேரு ஸ்டேடியம் அமைந்திருப்பதால் போக்குவரத்து நெரிசலில் ரசிகர்களைப் பக்குவமாகக் கையாள்வது கடினமான விஷயம்.

லியோ

ஏற்கெனவே 'வாரிசு' இசை வெளியீட்டு விழா நடந்தபோதே ரசிகர்களை சமாளிக்க முடியவில்லை. மாலையில்தான் இசை வெளியீடு என்றாலும், அந்த நிகழ்ச்சிக்குக் காலையிலேயே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டுவிட்டார்கள். அரங்கம் அமைக்கும் பணி முடிவதற்கு முன்பாகவே அவர்கள் தடைகளை மீறி உள்ளே புகுந்துவிட்டார்கள். அவர்களிடம் அனுமதிச்சீட்டு எதுவும் இல்லை. என்றாலும், நிகழ்ச்சி அமைப்பாளர்களோ, போலீஸோ அவர்களை அப்புறப்படுத்த முடியவில்லை.

இப்போதும் அப்படி நிகழும் சாத்தியங்கள் இருப்பதை போலீஸார் கணித்தனர். அதனால் வெளியீட்டு விழாவை நடத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதை போலீஸ் தரப்பிலிருந்து சொன்னால், அதை விஜய்க்கும் தமிழ்நாடு அரசுக்குமான மோதலாக எடுத்துக்கொள்ளக் கூடும் என அரசுத் தரப்பில் நினைத்தார்கள். இதனால் படத் தயாரிப்பாளர்களிடமே இதை அறிவிப்பாக வெளியிடச் சொல்லி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். அதையே படக்குழுவினர்கள் ஏற்றுக்கொண்டு சொல்லியிருக்கிறார்கள்.

ஆனாலும், அரசுக்கு நெருக்கமானவர்களிடம் விஜய் பேசியிருந்தால் மிகக் கடுமையான பாதுகாப்பைப் போட்டு நடத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். விஜய் "உங்களால் முடிந்தால் நடத்துங்கள். நான் பர்சனலாக யாரிடமும் இது சம்பந்தமாகப் பேச முடியாது" என்று விடாப்பிடியாகச் சொல்லிவிட்டாராம்.
விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள்

இதற்கிடையில் சஞ்சய் தத் உட்பட 'லியோ'வில் நடிக்கும் பான் இந்தியா ஸ்டார்களுக்கு ஏற்கெனவே அழைப்பு அனுப்பி, அவர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகள், பயண டிக்கெட், மேடை அலங்காரங்கள் என இரவு பகலாக ஏற்பாடுகள் நடந்து, கிட்டத்தட்ட முடிகிற கட்டத்திற்கு வந்துவிட்டதாம். இதுவுமே பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தடவை விஜய்யோடு சேர்ந்து அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் மேடை ஏறுவார்கள் எனவும், சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருந்தது எனவும் பேசிக் கொள்கிறார்கள். அதுதான் ரசிகர்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் மிஸ்ஸிங் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் விழா ரத்தானது ரசிகர்களிடம் சோகத்தை உருவாக்கியிருக்கிறது என்பது உண்மையே!

அதேபோல இன்னொரு சிக்கலையும் விஜய் தரப்பில் முன்வைக்கிறார்கள். ரசிகர் மன்றங்களுக்கு என்று குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயித்து, டிக்கெட்களை மன்ற நிர்வாகிகள் மூலமாக விநியோகிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது வெளியே கசிந்து டிக்கெட்டை அப்படியே காப்பியடித்து பத்தாயிரம் டிக்கெட்களுக்கு மேல் யார் யாரோ கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரிஜினல் டிக்கெட்களுக்கும் போலி டிக்கெட்களுக்கும் யாதொரு வித்தியாசமும் தெரியவில்லையாம். இது இன்னொரு தலைவலியாக படத்தின் தயாரிப்புத் தரப்புக்குத் தோன்றியதால், விஜய் மற்றும் வரவிருக்கும் விருந்தினர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கருதி 'லியோ' பாடல் வெளியீட்டை ரத்து செய்ய ஒப்புக் கொண்டார்களாம்.

#DMKFearsThalapathyVijay டிரெண்டாகும் ஹேஷ்டேக்
இதற்கிடையே நினைத்த மாதிரியே #DMKFearsThalapathyVijay என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மொத்தத்தில், `லியோ' படத்தின் புரொமோஷன் பணிகள் சற்று சிக்கலோடுதான் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இதுவே படத்துக்கு பாசிட்டிவாகவும் ஒர்க் ஆகலாம் என்று சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


from விகடன்

Comments