நடிகர் விஷாலைத் தொடர்ந்து நடிகர் சமுத்திரக்கனியும் தனது `அப்பா' படத்திற்கு லஞ்சம் கேட்டதாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நடிகர் விஷால், 'மார்க் ஆண்டனி' படத்தின் இந்திப் பதிப்பிற்கு 'CBFC' சான்றிதழ் பெற ரூ.6.5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று மும்பை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அதில், "கடந்த வாரம் வெளியான எனது 'மார்க் ஆண்டனி' படத்தின் இந்திப் பதிப்பிற்கு 'CBFC' சான்றிதழ் பெறுவதற்கு மும்பையில் இருக்கும் திரைப்பட சான்றிதழ் அலுவலகத்திற்கு (CBFC) படத்தை அனுப்பினோம். ஆனால், ரூ.6.5 லட்சம் கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதன்படி, படத்தின் திரையிடலுக்கு ரூ.3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என இரண்டு பரிவர்த்தனையாக மொத்தம் ரூ.6.5 லட்சம் பணத்தைப் பரிவர்த்தனைச் செய்தோம்.
அதன் பிறகுதான் 'மார்க் ஆண்டனி' இந்தியில் வெளியானது. இதுபோன்ற ஒரு மோசமான சம்பவத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் எதிர்கொண்டதேயில்லை. நாங்கள் கொடுத்த பணத்திற்கான பரிவர்த்தனை பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்.
இனி எந்தவொரு தயாரிப்பாளருக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது. யாருக்கும் இனி இதுபோல் நடக்கக்கூடாது" என்று கூறியிருந்தார்.
விஷாலின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், "இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தது.
இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி, "2016ல் வெளியான என் 'அப்பா' படத்திற்கு வரிவிலக்கு வாங்க நான் பணம் கொடுத்தேன். நியாயமாகப் பார்த்தால் 'அப்பா' மாதிரியான திரைப்படத்தை அரசுதான் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஷ்டப்பட்டு அப்படத்தை நானே தயாரித்து, இயக்கி நடித்திருந்தேன். அதற்கு வரிவிலக்கு சான்றிதழ் வாங்கப் போகும்போது பணம் கொடுத்துத்தான், அந்தச் சான்றிதழை வாங்க வேண்டியிருந்தது. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
from விகடன்
Comments