"ராஷ்மிகாவிற்கு ஒரு பெரிய கனவு இருக்கிறது!"- மனம் திறந்த முன்னாள் காதலரும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி
`காந்தாரா' படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் `க்ரிக் பார்ட்டி (Kirik Party)' படத்தின் மூலம் அறிமுகமானவர் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதில் நாயகன் ரக்ஷித் ஷெட்டி.
சில படங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நுழைந்தவர், 'கீதா கோவிந்தம்', 'புஷ்பா' உள்ளிட்ட படங்களின் வெற்றி மூலம் இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர்களைச் சம்பாதித்தார். தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து பிஸியான பேன் இந்தியன் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில், ராஷ்மிகாவின் முதல் படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகாவிற்கும் காதல் ஏற்பட்டு அவர்கள் இருவரும் 2017-ல் நிச்சயதார்த்தம் வரை சென்று பின், புரிதலோடு இருவரும் திருமண எண்ணத்தைக் கைவிட்டனர். இதையடுத்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகி கப்சிப் என அடங்கியது.
இந்நிலையில் தற்போது ரக்ஷித் ஷெட்டி, ராஷ்மிகாவுடன் இன்னும் தொடர்பில் இருப்பதாகவும், ராஷ்மிகா மிகப்பெரிய கனவுடன் சினிமாவில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நடிகர் ரக்ஷித் ஷெட்டி, "நானும் ராஷ்மிகாவும் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறோம். சினிமா உலகில் அவருக்கென ஒரு பெரிய கனவு இருக்கிறது. அவர் அந்தக் கனவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். தான் நினைத்த காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. அவர் அதைச் சாதிக்க அவருக்கு ஆதரவாகத் தட்டிக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு ரக்ஷித் ஷெட்டி, ராஷ்மிகாவுடனான காதல் குறித்துத் தற்போது பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
from விகடன்
Comments