"காமிக்ஸ் சூப்பர்ஹீரோ படங்களிலிருந்து ஹாலிவுட்டைக் காப்பாற்றணும்!" - மார்ட்டின் ஸ்கோர்செஸி கருத்து

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் மூத்த படைப்பாளி மார்ட்டின் ஸ்கோர்செஸி. ‘Taxi Driver’ தொடங்கி ‘The Irishman’ வரை பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது அவரது இயக்கத்தில், லியோனார்டோ டி கேப்ரியோ நடிப்பில் ‘Killers of the Flower Moon’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. அக்டோபர் 20-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டில் திரை இயக்க மேதை என்று அழைக்கப்படும் மார்ட்டின் ஸ்கோர்செஸி சமீப காலமாகவே சினிமா தனது தனித்துவத்தை இழந்துவருவதாக வருத்தப்பட்டு வருகிறார்.  

மார்ட்டின் ஸ்கோர்செஸி

சில வருடங்களுக்கு முன்பு. "மார்வெல் திரைப்படங்கள் எல்லாம் என்னைப் பெரிதும் கவர்வதில்லை.அவை எல்லாம் ரோலர் கோஸ்டர் பயணம் போலத்தான் இருக்கின்றன" என்று தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்திற்கு   ரசிகர்களும், திரைப்படக் கலைஞர்களும் எதிர்ப்புகளைத்  தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் நல்ல வரவேற்பைப் பெறக்கூடிய காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த மார்ட்டின் ஸ்கோர்செஸி , “இந்த மாதிரி காமிக் புத்தகத் திரைப்படங்களைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மற்ற வகைத் திரைப்படங்களைப் பார்க்கும்போது எதிர்மறையாகத்தான் தெரியும்.

காமிக் புத்தகத் திரைப்படங்கள் நம் சினிமா கலாசாரத்தைக் கூட பாதிக்கலாம். இந்த மாதிரி படங்கள்தான் உண்மையான படங்கள் என்று ஏற்கெனவே இன்றைய தலைமுறையினர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே இதுபோன்ற படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட வேண்டும். திரைப்படத் தயாரிப்பாளர்களும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். 

மார்ட்டின் ஸ்கோர்செஸி

கிறிஸ்டோபர் நோலன், சாஃப்டி பிரதர்ஸ் போன்றவர்கள் தற்போது அசலான படங்களைக் கொடுக்க ஸ்டூடியோக்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டம் எல்லாப் பக்கம் இருந்தும் வரவேண்டும். நாம்தான் புதிதாகக் கதை சொல்லும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். சினிமாவைக் காப்பாற்ற வேண்டும்” என்றவர், காமிக்ஸ் திரைப்படங்கள் குறித்தும் காரசாரமாக மீண்டும் விமர்சித்திருக்கிறார்.

"இந்த காமிக் புத்தகத் திரைப்படங்கள் AI (Artificial intelligence) பயன்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் போல் இருக்கின்றன. தலைசிறந்த இயக்குநர்கள் சிறந்த தொழில்நுட்பம் கொண்டுதான் இதனை எடுக்கிறார்கள். ஆனால் இந்தப் படங்கள் மூலம் நமக்கு என்ன அனுபவம் கிடைத்துவிடப் போகிறது? அதன் பிறகு நம் மனதிலிருந்து, நம் உடலிலிருந்தே இந்தப் படத்தை அகற்றிவிடுவோம். இந்தப் படங்கள் அப்படி என்ன நமக்குக் கொடுத்துவிடுகின்றன?" என்று தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார்.   



from விகடன்

Comments