சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க, நடிகர் வேல ராமமூர்த்தி கமிட் ஆகியுள்ளார்.
‘எதிர்நீச்சல்’ தொடரின் ஆதி குணசேகரன் கேரக்டர் நடிகர் மாரிமுத்துக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. ஆனால் சமீபத்தில் அவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அடுத்து அந்த கேரக்டரில் அடுத்து நடிக்கவிருப்பது யார் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களிடம் இருந்து வந்தது. அந்தக் கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்ததால் புதிய நடிகரைத் தேர்வு செய்வதில் தயாரிப்புத் தரப்பு ரொம்பவே யோசித்ததாகச் சொல்லப்பட்டது. சினிமா, டிவியிலிருந்து பலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் எழுதினார்கள். ராதாரவி, இளவரசு, ஆனந்தராஜ் தொடங்கிப் பல பெயர்களை ரசிகர்களே பரிந்துரை செய்தார்கள்.
ஆனால் ஆரம்பம் தொட்டே நடிகர் வேல ராமமூர்த்தியின் பெயர் பரிசீலனையில் இருந்தது. நாமும் இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, "கூப்பிட்டாங்க, இன்னும் முடிவு பண்ணலை" எனச் சொல்லியிருந்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில தினங்களில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியை நீங்கள் பார்க்கலாம்.
from விகடன்
Comments