`பிகில்' படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினால் பலரது பாராட்டையும் பெற்றவர் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள்.
இந்திரஜா பிகில் படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான `விருமன்' திரைப்படத்திலும் நடித்திருந்திருந்தார். இந்திரஜா கார்த்திக் என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து ரீல்ஸ்கள் பதிவிட்டு வந்தார்.
ரோபோ சங்கர் குடும்பத்தினருடன் கார்த்திக்கும் எடுத்துக் கொண்ட வீடியோக்கள் சமூகவலைதள பக்கங்களில் வைரலானது. இந்திரஜாவும் கார்த்திக்கை `மாமா' என்கிற கேப்ஷனுடனே அழைத்து வந்தார்.
கார்த்திக்கும் இந்திரஜாவும் காதலிக்கிறார்களா? என அவர்களது ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், அவர்களே `ஆம் என்றும், திருமண தேதி உறுதியானதும் அனைவரிடமும் அறிவிப்பதாகவும்' தெரிவித்திருந்தனர்.
கார்த்திக் மதுரையைச் சேர்ந்தவர். `தொடர்வோம்' என்கிற பெயரில் தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறார். மதுரையில் அவருடைய இல்லத்தில் ஏராளமான குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். கார்த்திக்கிற்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் ஆசையாம். அந்த ஆசையை நோக்கி தான் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ரோபோ சங்கரும் மதுரையைச் சேர்ந்தவர்தான். ரோபோ சங்கரும், கார்த்திக்கும் உறவினர்கள் என்பதால் இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே தெரிகிறது. கார்த்திக்கிற்கு இந்திரஜா அக்கா மகள் உறவுமுறை. தனது அக்கா மகளைக் காதலித்து கரம் பிடிக்க இருக்கிறார்.
கார்த்திக்கும் மீடியாத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களுடைய திருமணத்தை திரை, அரசியல் பிரபலங்கள் சூழ பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு அழைப்பதற்காக ரோபோ சங்கர் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசனையும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் நேரில் சந்தித்து இருக்கிறார். முதலமைச்சரை மணமக்களுடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த புகைப்படத்தை அவர்களுடைய சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். இதனைப் பார்த்ததும் சிலர், ரோபோ சங்கர் தனது குடும்பத்தினருடன் திமுகவில் இணைந்து விட்டதாக வதந்திகள் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.
விசாரித்ததில், அழைப்பிதழ் கொடுப்பதற்காக மட்டுமே முதலமைச்சரை சந்தித்ததாகத் தெரிந்தது. திருமணம் தொடர்பான அப்டேட்களை விரைவிலேயே தனது ரசிகர்களுக்கு ரோபோ சங்கர் குடும்பத்தினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்த்துகள் இந்திரஜா - கார்த்திக்!
from விகடன்
Comments