Bigg Boss Season 7 Tamil: மிரட்டும் ஹவுஸ்மேட்ஸ், ரகளைக்கு இரண்டு வீடு; இந்த சீசனில் என்ன நடக்கும்?

ஹாய்... ஹலோ... விகடன் இணையத்தள வாசக நண்பர்களுக்குப் பிரியத்துடன் கூடிய வணக்கம். ஓர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறோம். ஆம், பிக் பாஸ் தமிழ் புதிய சீசன் அக்டோபர் ஒன்று அன்று ஆரம்பமாகவிருக்கிறது. இந்த ஏழாவது சீசனையும் வழக்கம் போல் கமல்ஹாசன் தொகுத்தளிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி விகடன் தளத்தில் வழக்கம்போல் நானும் தினமும் எழுதப் போகிறேன். ஒவ்வொரு நாளின் நிகழ்வுகளைப் பற்றிய விவரணைகளை உங்களுடன் உற்சாகமாகப் பகிரப் போகிறேன். கடந்த சீசன்களைப் போலவே இந்த ஏழாம் சீசனின் பயணமும் சுவாரஸ்யமாக அமையும் என நம்புகிறேன். உங்களின் தொடர்ந்த ஆதரவைக் கோருகிறேன்.

இந்த ஏழாம் சீசனில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

“கோதாவரி... வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி” என்கிற 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் விசு மாதிரியாக ஆகிவிட்டார் பிக் பாஸ். ஆம், இந்த ஏழாம் சீசனில் பிக் பாஸ் வீடு இரண்டாக மாறுகிறது. இரண்டு வீடுகள் இருக்கப் போவதை ‘டபுள் ஆக்ட்டில்’ வந்து ஏற்கெனவே புரொமோவில் தெரிவித்துவிட்டார் கமல். ‘சும்மாவே வீடு ரெண்டாகும்... இப்ப வீடே ரெண்டாயிடுச்சு... இன்னும் என்னென்ன ஆகுமோ... ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்... ரெண்டையுமே பார்த்துடலாம்...’ என்பதுதான் இந்த சீசனின் பன்ச். எப்படியோ, இந்த ஏழாம் சீசனில் நிறைய ஏழரையான சம்பவங்கள் டபுள் டபுளாக நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.

பிக் பாஸ் 7 | Bigg Boss 7

ஒரு வீடு வழக்கம் போல் அடிப்படையான வசதிகளுடன் இருக்கலாம். இன்னொன்று ‘பேய் வீடு’ மாதிரியான செட்டப்பில் இருக்கக்கூடும். வார இறுதியில் தண்டனை பெறுபவர்கள் இங்குத் தங்கும்படியாக இருக்கலாம் என்று தெரிகிறது. பிக் பாஸ் இந்தி 15-வது சீசனில் ஒரு வீட்டின் செட்டப் காடு மாதிரியாக அமைக்கப்பட்டிருந்தது. போட்டிக்குள் நுழைபவர்கள் முதலில் அங்குத் தங்கி டாஸ்க்கில் வென்ற பிறகு வசதிகள் இருக்கும் வீட்டின் உள்ளே செல்லும்படியாக போட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதுபோல் தமிழிலும் நிகழலாம். எப்படியோ துவக்க நாளன்று டிரோன் ஷாட் மாய்மாலங்கள், எடிட்டிங் அலப்பறைகளோடு வீட்டை... மன்னிக்கவும்... வீடுகளை கமல் எப்படியும் சுற்றிக் காட்டப் போகிறார். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

கமலின் வர்ணனை மற்றும் தொகுப்புரைகளில் நிச்சயம் அரசியல் கிண்டல்கள் கலந்திருப்பது நிகழ்ச்சிக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தைத் தரும். இந்த முறையும் அது ரகளையாகத் தொடரும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். இது தவிரப் புத்தகப் பரிந்துரை, சினிமா அனுபவங்கள், ஜாலியான குறுக்கு விசாரணைகள், ஏடாகூடமான குறும்படங்கள் என்று கமலின் வழியாக நிகழ்ச்சி களைகட்டும்.

ஏழாம் சீசனில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் யார்?

வழக்கம் போல் இந்த முறையும் இது தொடர்பான நிறைய யூகங்கள், உறுதிப்படுத்தப்பட்ட தகவல் மாதிரியே இணையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சீசனிலும் இப்படி வெளியாகும் பட்டியலைப் பார்த்தால் பிறகு ஏறத்தாழ உண்மையாகத்தான் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டின் காவல் ஏற்பாடுகள் அப்படி. மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்கத் தெரியவில்லை. அதிலும் நண்பர் அய்யனார் ராஜன், பிக் பாஸ் கேமராக்களின் கண்காணிப்பையெல்லாம் மீறி பிரத்யேகமான பட்டியலை ஒவ்வொரு சீசனிலும் வெளியிட்டு விடுகிறார். விக்கி லீக்ஸ் மாதிரி இது ‘பிக்கி லீக்ஸ்’. துவக்க நாளன்றுதான் இந்தப் பட்டியலின் உண்மைத்தன்மை தெரியவரும். என்றாலும் அந்த யூகங்களைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கூல் சுரேஷ்

‘ஆரம்பத்திலேயே கண்ணைக் கட்டுதே’ என்பது மாதிரி முதலில் கசிந்த பெயரே ‘கூல்’ ஆக்காமல் நம்மை ஷாக் ஆக வைக்கிறது. ‘கூல் சுரேஷ்’. இவர் செய்யும் கொனஷ்டையான சேஷ்டைகளுக்குக் கூட ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் கூட வெளியாகும் தனது படத்திற்கு பிரமோஷன் செய்கிறதோ, இல்லையோ, இவர் வம்படியாக தியேட்டருக்கு முதல் நாள் சென்று ‘வெந்து தணிந்தது காடு... இந்த நடிகருக்கு வணக்கத்தைப் போடு’ என்று எதையாவது கோக்குமாக்காகச் சொல்ல FDFS பார்க்க வந்த கூட்டம் இதையும் வேடிக்கை பார்க்கக் கும்பலாக நிற்கிறது. கேமராக்களும் குவிகின்றன.

"யூடியூபிற்கே என்னால்தான் பிழைப்பு ஓடுகிறது. நிறைய சேனல்கள் என்னால்தான் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கின்றன. அத்தனை வியூஸ்" என்றெல்லாம் பெருமைப் பேசும் ‘கூல் சுரேஷ்’ சமீபத்திய சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு மாலை அணிவிக்கப் போய் சர்ச்சையில் மாட்டிக் கொண்டு பலத்த கண்டனங்களைப் பெற்றார்.

"வேணும்ன்ட்டே பண்றான்டா அந்தப் பய... இனிமே உங்களை நிம்மதியா வாழ விடமாட்டாங்க..." என்று தேவர் மகன் பஞ்சாயத்துக் காட்சியில் சிவாஜி பேசுவார். பிக் பாஸ் டீம் செய்யும் சில்மிஷங்களைப் பார்த்தால் இந்த வசனம்தான் நினைவிற்கு வருகிறது.

பல எழுத்தாளர்களைப் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஓர் எழுத்தாளரே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவது இதுதான் முதன்முறை. ஆம், எழுத்தாளரும், சிறந்த கதைசொல்லியுமான ‘பவா செல்லத்துரை’ போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாகச் சொல்கிறார்கள். இதைக் கேட்டு சந்தோசமடைவதை விடவும், “உங்களுக்கு ஏன் சார் இந்த வேலை?” என்று மைண்ட் வாய்ஸில் அலறுகிறார்கள் பலர். நாவல்களையும் சிறுகதைகளையும் தனக்கே உரித்தான பாணியில் சுவாரஸ்யமாக விவரிக்கும் பவா செல்லத்துரைக்கு நேரடி மற்றும் இணைய ரசிகர்கள் அதிகம். பிக் பாஸ் வீட்டிற்குள் இவரது காலட்சேபம் எப்படி நிகழப் போகிறதென்று காத்திருந்து பார்ப்போம்.

விசித்ரா

பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய அடுத்த பெயர் விசித்ரா. ‘ஜாதி மல்லி’ திரைப்படத்தில் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ‘தலைவாசல்’ படத்தில் இவரது பாத்திரப் பெயரான ‘மடிப்பு அம்சா’ என்பதன் மூலம் இவருக்கு நிறையப் புகழ் கிடைத்தது. கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிறகு திருமணமான பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் வந்து போனார். விசித்ராவால் பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்திரமான சம்பவங்கள் ஏதாவது நிகழுமா என்று பார்ப்போம்.

நமக்கு சுவாரஸ்ய மூட்டக்கூடிய இன்னொரு பெயர் யுகேந்திரன். ஆம், பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட யுகேந்திரனின் இன்னொரு முகம் பிக் பாஸ் வீட்டின் வழியாக வெளியாகலாம்.

டி.வி.சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் வந்த சில இளம் நடிகர்கள் மற்றும் நடிகையர்களுக்கும் வழக்கம் போல இந்த முறை பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஷ்ணு (ஆஃபிஸ், சத்யா), சரவணன் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), வினுஷா (பாரதி கண்ணம்மா), ரவீனா தாஹா (குக் வித் கோமாளி), நிவிஷா போன்ற பெயர்கள் ஏறத்தாழ உறுதியாகியிருக்கின்றன. மாடலிங் கேட்டகரியில் மூன் நிலா (மலேசியா) என்ற பெயர் டிக் ஆகியிருக்கிறது. இது தவிர முன்னாள் போட்டியாளர்களின் சிபாரிசுகளின் மூலமாகவும் சிலர் உள்ளே வருவதாகச் சொல்கிறார்கள். பாலாஜி முருகதாஸின் நண்பர் அனன்யா ராவ், அமீரைத் தத்தெடுத்து வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்த ஐஷூ போன்ற பெயர்கள் இப்போதைக்கு நமக்கு அந்நியமாக இருந்தாலும் வெகு விரைவில் பழக்கமாகி விடுவார்கள்.

இது தவிர டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், விஜய் டிவி ரக்ஷன், வீஜே பார்வதி, நகைச்சுவை நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட சில பெயர்கள் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. துவக்க நாளன்று யார், யாரெல்லாம் உறுதி என்கிற சஸ்பென்ஸ் முழுமையாக வெளிப்பட்டு விடும்.

ரவீனா தாஹா

பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஆணியா... இல்லையா?

பிக் பாஸின் ஒவ்வொரு புதிய சீசன் துவங்கும் போதும் சமூகவலைத்தளங்களில் பொதுவாக இரண்டு தரப்புகளின் உரசல் ஆரம்பமாகி விடும். ‘ச்சை... கருமம்... இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா... குப்பை... எப்படித்தான் பார்க்கறாங்களோ? டைம் வேஸ்ட்’ என்று ஒரு தரப்பு ஆவேசத்துடன் எரிச்சலைக் கொட்டும்.

ஒருவகையில் நானும் இதையேதான் சொல்கிறேன். பிக் பாஸ் என்பது அப்படியொன்றும் உன்னதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. சில தனிநபர்களின் அந்தரங்கத் தருணங்களை வணிகமாக்கும் நிகழ்ச்சிதான். மற்றவர்களின் அந்தரங்கங்களை ஒளிந்து பார்க்கும், வேவு பார்க்கும் குறுகுறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உண்டு. தனி மனிதனின் இத்தகைய வக்கிர உணர்வைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு தீனிபோடும் நிகழ்ச்சிதான் இது. எனவே இதைப் பார்க்காமலிருப்பதால் ஒன்றும் இழக்கப் போவதில்லை. இதை விடவும் உபயோகமான பொழுதுபோக்கு வாய்ப்புகள் நிச்சயம் இருக்கின்றன.

இருங்கள். அதிகம் மகிழ்ச்சியடையாதீர்கள். பிக் பாஸை நிராகரித்துக் கரித்துக் கொட்டி விட்டு உங்களின் பொழுதுபோக்கை எவ்வாறு அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உலக இலக்கியத்தையெல்லாம் வாசிக்கிறீர்களா? அட்லீஸ்ட் தமிழ் இலக்கியமாவது? உன்னதமான உலக சினிமாக்களையெல்லாம் ரசனையுடன் தேடித் தேடிப் பார்க்கிறீர்களா? சிறந்த இசை உள்ளிட்ட கலைநுகர்வுகளில் ஈடுபடுகிறீர்களா? தினம் தினம் உருப்படியான சமூக சேவையைச் செய்து கொண்டிருக்கிறீர்களா? எனில் பிக் பாஸ் போன்ற நேர விரயங்கள் உங்களுக்குத் தேவையில்லை என்பதில் முழு நியாயமுள்ளது.

ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் இப்படியா பொழுதைப் போக்குகிறோம்? மனச்சாட்சியுடன் யோசித்துப் பாருங்கள். சமூகவலைத்தளங்களில் தினசரி செல்ஃபி அலப்பறைகள், ரீல்ஸ் சீன்கள், சினிமா வம்புகள், வெட்டி அரசியல் விவாதங்கள், போலியான அறச்சீற்றங்கள், கிரிக்கெட் புள்ளி விவர மேதைமைகள், சாதி, மத சர்ச்சைகள், சீரியல் அழுகைகள், ரியாலிட்டி ஷோ மொக்கைகள் என்று வெவ்வேறு வடிவங்களில் தினசரி நேரத்தை வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறோம். எனில் பிக் பாஸை மட்டும் தேர்ந்தெடுத்துத் திட்டுவது முறையா என்பதை நேர்மையாக யோசித்துப் பார்க்கலாம்.

பிக் பாஸ் கமல்

‘நாங்க பிக் பாஸ் பார்க்கறதில உங்களுக்கு என்னய்யா பிரச்னை?’

இப்போது இரண்டாவது தரப்பிற்கு வருவோம். ‘எத்தனையோ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுள் பிக் பாஸூம் ஒன்று. அதைப் பார்ப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்னை... நான் பார்ப்பேன்யா...’ என்று இந்தத் தரப்பிற்குத் தோன்றலாம். நியாயம்தான். ஆனால் நீங்களும் அதிக மகிழ்ச்சியடையாதீர்கள். ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் பார்த்து விட்டு பொதுவாக நாம் என்ன செய்கிறோம்? கட்சி பிரித்துக் கொண்டு போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை, குறைகளை அலசி, ஆராய்ந்து, நோண்டி, நுங்கெடுத்து, படம் வரைந்து பாகம் குறித்து பெரிய ஆராய்ச்சியே நடத்துகிறோம்.

அதாவது மற்றவர்கள் செய்கிற தவறுகளைப் பூதக்கண்ணாடி வைத்து உற்சாகமாக ஆராய்வதில்தான் நம் கவனமும் ஆர்வமும் இருக்கிறதே ஒழிய, அவற்றை ஏன் நமக்குப் பொருத்திப் பார்த்து சுயபரிசீலனையில் ஈடுபடக்கூடாது?! நம்முடைய அன்றாட வாழ்க்கையில் யாரோ ஒருவருடைய மனம் நோகும்படியாக நிச்சயம் நடந்திருப்போம். நமக்குக் கீழே உள்ளவர்களை மேட்டிமைத்தனத்துடன் வசை பாடியிருப்போம். பிள்ளைகளை வீட்டில் அடிக்கக்கூடச் செய்திருக்கலாம். உப்புப் பெறாத காரணத்திற்காக மனைவியோடு கடுமையான சண்டையிட்டிருக்கலாம்.

நிதானத்திற்கு வந்த பிறகு இதற்காகச் சற்று மனம் வருந்தியிருப்போம். இனி இப்படிச் செய்யக்கூடாது என்று உறுதி எடுத்திருப்போம். ஆனால் மறுபடியும் இதே கதைதான் அப்படியே தொடரும். கடந்த அனுபவங்களிலிருந்து நாம் எதையும் கற்கவில்லை என்றே இதற்குப் பொருள்.

மாறாக நீங்கள் ஆத்திரப்பட்டுச் சறுக்கிய தருணங்கள் எல்லாம் கேமராவில் பதிவு செய்யப்பட்டு நீங்களே பிறகு அவற்றைப் பார்க்கிற மாதிரியான ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் என்ன ஆகும்? காட்சி ரீதியான பதிவுகள் நம் மூளையில் அழுத்தமாகப் பதியும். மறுபடி மறுபடி அதைப் பார்க்கும் போது நம்முடைய விகாரமான முகம் நமக்கே அச்சத்தை ஏற்படுத்தும். குற்றவுணர்ச்சியையும் வெட்கத்தையும் உருவாக்கும். ‘இனி இப்படி நடந்து கொள்ளவே கூடாது’ என்கிற எண்ணம் அழுத்தமாக ஏற்படும். இப்படியாக நம் மனதில் நேர்மறையான மாற்றங்கள் நிகழலாம்.

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பிரபலங்கள் என்றாலும் அதைத் தாண்டி அவர்கள் தனி நபர்களே. நம்மைப் போலவே சராசரியான மனிதர்களே. இதுவரை நாம் பார்க்காத அவர்களின் முகங்கள், அழுத்தப்பட்ட சூழலில் அம்பலமாகின்றன. அவற்றை வைத்துக் கொண்டு ‘மாட்டினான்டா’ என்று கும்மியடிக்காமல், நாமும் இதே போன்ற சூழலில் இப்படித்தானே கீழ்மையுடன் எதிர்வினையாற்றியிருப்போம் என்று நேர்மையாக எண்ணிப் பார்த்துக் கொண்டால் நம்முடைய தவறுகளின் சதவிகிதம் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்புண்டு. இப்படியாக பிக் பாஸ் என்கிற பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் நுகர்வை நேர்மறையாகவும் பயன்படுத்தலாம் என்று சொல்கிறேன்.

ஒருவருக்கு மனசாட்சியை விடவும் வலிமையான கேமரா கிடையாது. என்றாலும் அந்தக் கருவி பலரிடம் பழுதடைந்த நிலையில்தான் இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அந்தக் கருவியைச் சரி செய்து கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.

ஓகே... கட்டுரை சற்று சீரியஸாகப் போய்விட்டது. பிக் பாஸ் ஷோவின் ரசிகர்களே... வாருங்கள்... இந்த ஏழாம் சீசனையும் வழக்கம் போல் ரகளையாகக் கொண்டாடுவோம்! அதே வேளையில் நமக்கான படிப்பினைகளையும் கற்றுக் கொள்வோம். Keep calm and face the devil!


from விகடன்

Comments